
“சினிமாவில் இருக்கும் சிலர்தான் தடையாக இருக்கிறார்கள். அந்தத் தடையை தாண்டி வர நான் ரெடி.” என தாய் கிழவி படத்தின் விழாவில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாசரியர் சிவக்குமார் முருகேசன் இயக்கியிருக்கும் படம் தாய் கிழவி. இதில் ராதிகா சரத்குமார் லீட் ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் இளவரசு, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன், ரேச்சல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.
20ஆம் தேதி வெளியாகவிருந்த படம் சில காரணங்களால் 27ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான சூழலில்; ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது.
சிவகார்த்திகேயன் இந்த விழாவில் பேசுகையில், "சினிமாவில் ஏதாவது ஒரு ரோல் நடித்துவிட வேண்டும் என நினைத்தேன். லீட் ரோல் கிடைக்கும் போது அதில் நன்றாக நடிக்க வேண்டும் என நினைத்தேன். பிறகு ஹீரோ வாய்ப்புகள் வந்தன. மக்கள் எல்லாம் கை தட்டி வெற்றிகரமான ஹீரோ என சொன்னார்கள். நண்பர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். கல்லூரி படிக்கும் போதே அருண்ராஜா காமராஜாவுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என ஆசை இருந்தது.. எனவேதான் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தோம். எனக்கு நீங்கள் கொடுத்த மேடையை இன்னும் விரிவாக்கி அதில் சில பேரை சேர்த்துக்கொள்ள விரும்பினேன்.
கனா படம்தான் உலகத்திலேயே பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். அதேபோல் யூடியூபர்கள் எல்லாம் சேர்ந்து செய்த முதல் படம் ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.’ அதேபோல், பி.எஸ்.வினோத்ராஜை இயக்குநராக அறிமுகம் செய்து கொட்டுக்காளி படத்தை எடுத்தோம். அந்த படத்தை ஏன் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தீர்கள் என கேட்டார்கள். ஏன் செய்யக்கூடாது. பெர்லின், ரஷ்யா, ஜப்பான் நாடுகளில் எல்லாம் ரிலீஸ் செய்தேன். அந்த ஜானரில் மக்கள் படங்களை தியேட்டர்களில் பார்த்து பழக வேண்டும் என்றுதான் அப்படி செய்தேன். கொட்டுக்காளிக்கு அந்த நாடுகளில் எல்லாம் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
இதற்காகத்தான் நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்ததே இல்லை. கதை கேட்டுத்தான் நடித்திருக்கிறேன். எனவே ஒரு படத்தின் வெற்றி தோல்வியில் எனக்கு பொறுப்பு இருக்கிறது.
எனக்கு வாழ்வு கொடுத்த சினிமாவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றுதான் இந்த மாதிரியான படங்களை செய்கிறேன்.மாறாக யாரையும் தாண்ட வேண்டும்; அட்டாக் செய்ய வேண்டும் என்று நான் வரவில்லை. எனக்கு இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த நினைக்கிறேன். அதற்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். சினிமாவில் இருக்கும் சிலர்தான் தடையாக இருக்கிறார்கள். அந்தத் தடையை தாண்டி வர நான் ரெடி. ஏன் இப்படி செய்கிறீர்கள். என்னை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் நான்கு சிவக்குமார் முருகேசன்களை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து அழைத்துவருவேன்" என்றார்.