ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்து ஏன் வெளியேறினேன் என அப்படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, போலீஸ்காரனை ‘கட்டிக்கிட்டா’ பாடல் சர்ச்சைகுறித்து இயக்குநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறு விஷயங்களை பேசிய அவர் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட நிலையில், அவர் அரங்கிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதையடுத்து மேடையில் பேசிய ஜெகன் கவிராஜ், இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் தான் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். படத்தின் பட்ஜெட் அதிகமாவது குறித்து தான் தயாரிப்பாளருக்கு கூறியதாகவும் இதனால் இயக்குநர் தன்மீது கோபப்பட்டு, பாடலாசிரியராக தன்னுடைய பெயரை போடவில்லை என்றும் ஜெகன் கூறியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது சக்தி சிதம்பரம் கூறியதாவது: “மேடையிலிருந்து தான் பாதியிலேயே ஓடவில்லை. இந்த உடம்பை வைத்துக்கொண்டு ஓட முடியாது. நடந்துதான் போனேன். அந்த நிகழ்வு நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் வெளியே சென்றேன்.
இந்தப் படத்தில் சினேகன், விவேகா போன்றவர்களும் பாடல்களை எழுதியிருந்தனர். இயக்குநராக எனக்கு அந்தப் பாடல்கள் பிடிக்காததால் நானே பாடல்களை எழுதினேன். இதேபோலத்தான் ஜெகன் எழுதிய பாடல்களும் தனக்கு செட் ஆகாததால் அதை பயன்படுத்தவில்லை. அவர் கூறிய ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் அதற்காக அவர்தான் முழு பாடலையும் எழுதியதாக கிரெடிட் கொடுக்க முடியாது. இதற்காக அவரை படத்தில் நடிக்க வைத்துள்ளேன்.
என்னுடைய இத்தனை ஆண்டுகால கேரியரில் அதிகமாக பார்த்துவிட்டேன். மற்றவர்கள் உழைப்பை சுரண்டவேண்டிய அவசியம் தனக்கு இல்லை. என் குழந்தைகள் மீது சத்தியமாக சொல்றேன், நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.” என்றார்.