மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

மன்னிப்பா...நடிகர் சங்கத்துக்கு கெடு விதித்த மன்சூர் அலிகான்!

நடிகர் சங்கத்தின் கண்டன அறிக்கையை அடுத்த நான்கு மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும் என்று மன்சூர் அலிகான் கெடு வைத்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் அண்மைய செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசியிருந்தார். அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது. பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் கூறியதாவது:

”திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று வைரமுத்து ஆதங்கப்படுவதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். கதாநாயகிகளை மகிமைப்படுத்தும் விதமாகவும், எனக்கே வேலை கிடைப்பதில்லை என்றும் பேசினேன். இப்போது நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது.

நான் நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர். இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும்போது என்னை ஒரு கேள்விகூட கேட்கவில்லை. என்னிடம் அவர்கள் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஒரு சங்கம் நடத்துகிறவர்கள் இப்படி நடந்து கொள்ளலாமா?

நடிகர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். மன்னிப்பு கேட்கிற சாதியாடா? நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. நான் எரிமலையா வெடித்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவீர்கள். என்னிடம் விளக்கம் கேட்டிருந்தால் நான் விளக்கம் கொடுத்திருப்பேன். நீங்களே ஒரு தீர்ப்பு எழுதி, அறிக்கை விட்டுள்ளீர்கள்.

சினிமாவில் ரேப், கொலை சீன் என்றால் என்ன? அது உண்மையாக நடப்பதா?

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

நடிகர் சங்கம் செய்தது தவறு. அடுத்த நான்கு மணி நேரத்தில் விடுத்த செய்திக்குறிப்பைத் திரும்பப் பெற வேண்டும். துறைரீதியாக அவர்கள் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும். நேற்றிலிருந்து சங்கத் தலைவர் நாசர், விஷால், பூச்சி முருகன் யாரும் அழைப்பை எடுக்கவில்லை.

நான் பேசியது தவறாக இல்லாதபட்சத்தில் எப்படி மன்னிப்புக் கேட்க முடியும்? திரிஷாவை நான் தப்பாக பேசவில்லை. அவரைப் பாராட்டிப் பேசியிருக்கிறேன். யாரோ அவருக்கு சொல்லிக் கொடுத்துப் பேச வைத்திருக்கிறார்கள். திரிஷாவை நான் நிறைய மதிக்கிறேன். என்னை டேமேஜ் செய்திருக்கிறார்கள். நான்தான் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரவேண்டும்.

நான் எட்டு வழிச்சாலைக்காகக் கைதான போது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்னைப் பாராட்டியதா? எல்லாம் மக்களிடம் விட்டுவிடுகிறேன்.

மகளிர் ஆணையம் என் வீட்டிலேயே இருக்கு. நான் தப்பாகப் பேசினால் என் பிள்ளைகளே கண்டிப்பார்கள்.” என்று மன்சூர் அலிகான் பேசினார்.

செய்தியாளர் சந்திப்பை முடித்தபோது தேசிய கீதம் பாடினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com