வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்

பொய்ச் செய்திகளை நிறுத்துங்கள்… ஊடகங்களுக்கு வரலட்சுமி அறிவுரை!

தன்னைப் பற்றிய பழைய பொய்யான செய்திகளை ஊடகங்கள் பரப்புவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவின் விழிஞ்சம் கடல் பகுதியில் 2021ஆம் ஆண்டு 327 கிலோ ஹெராயின், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உட்பட்டவை கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர் வரலட்சுமியின் உதவியாளர் என்றும் வரலட்சுமியிடம் விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக தகவல்கள் பரவின. இதற்கு வரலட்சுமி சரத்குமார் அப்போது விளக்கம் அளித்திருந்தார்.

அதில், என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை எனவும், விசாரணைக்கு அழைத்தால் நிச்சயம் ஒத்துழைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சரத்குமார் தன்னுடைய ச.ம.க. கட்சியை - பா.ஜ.க.வுடன் இணைத்தார். அன்றிலிருந்து, சரத்குமார் மகளான வரலட்சுமி குறித்த பழைய செய்திகள் மீண்டும் பரவி வருகின்றன.

இது குறித்து நடிகை வரலட்சுமி இன்று தன் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பது:

“நமது அறிவார்ந்த செய்தி நிறுவனங்கள் வேறு செய்திகள் இல்லாததால் பழையப் பொய்யான செய்திகளை மீண்டும் சுற்றலில் விட்டுள்ளார்கள். நமது அருமையான செய்தியாளர்களே, குறிப்பாக சுய பிரகடனம் செய்யும் செய்தி நிறுவனங்கள், உங்களது கட்டுரைகளில் ஏன் உண்மையான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை? சினிமா நடிகர், நடிகைகளிடம் உள்ள குறைகளைப் பார்ப்பதைக் கைவிடுங்கள். நாங்கள் எங்களது வேலையான நடிப்புத் தொழிலினைச் செய்கிறோம், மக்களை மகிழ்விக்க நினைக்கிறோம். ஏன் நீங்கள் உங்கள் வேலையைச் சரியாக செய்யலாமே?!

உண்மையிலேயே கவனம் கொள்ள வேண்டிய 1000 பிரச்னைகள் இருக்கின்றன. நாங்கள் அமைதியாக இருப்பதால், பலவீனமானவர்கள் என நினைக்காதீர்கள். அவமதிப்பு வழக்குகளும் தற்போது டிரெண்டிங்கில்தான் இருக்கின்றன. அடிப்படை ஆதாரமற்ற பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள். நம்மைப் பெருமைப்பட வைக்கும் நிஜமான செய்திகளை வழங்குங்கள்.” என்று வரலட்சுமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com