தலைநகரம் -2: திரைவிமர்சனம்

தலைநகரம் -2: திரைவிமர்சனம்

சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு நடிப்பில் 2006இல் வெளிவந்த திரைப்படம் தலைநகரம். அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. அதே ரைட் கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடிக்க, விஇசட் துரை இயக்கியுள்ளார். இதில் வடிவேலு மிஸ்ஸிங்.

வடசென்னையில் பெரிய ரவுடியாக இருந்த சுந்தர் சி அடிதடியை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள ரவுடிகள், தங்களின் எல்லைகளை விரிவாக்க நினைக்கின்றனர். ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட முயல, அது சுந்தர் சிக்கு எதிராக வந்து நிற்கிறது. ஒரு கட்டத்தில் மூன்று ரவுடிகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளாகும் சுந்தர் சி, பழைய ரவுடியாக களம் இறங்கினாரா? இல்லையா? என்பதற்கு விடை சொல்வதுதான் படத்தின் கதை.

தாதா படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களுடனும் படம் தொடங்குகிறது. சென்னை தாதாக்களின் அடியாட்கள் ஓடுகிறார்கள், ஒடிவருகிறார்கள். யார் யாரையோ வெட்டுகிறார்கள், எரிக்கிறார்கள், கரையிலேயே கரைக்க வேண்டிய அஸ்தியை, கடலுக்கு நடுவில் சென்று வீசுகிறார்கள். இப்படி சில அபத்தமான காட்சிகள் இருந்தாலும், முதல் அரை மணி பரபரப்பாக செல்கிறது. சுந்தர் சி-யின் வருகை அதை அப்படியே அமுக்கி விடுகிறது. ’இதுக்குத்தானா இவ்ளோ பில்டப்பு’ என்று நினைக்கும் அளவுக்கு திரைக்கதையை எழுதியுள்ளனர்.

படம் முழுவதும் ஒரே முகபாவனைதான் சுந்தர் சி-க்கு. பண பலம், படைபலம், அதிகார பலம் கொண்ட ரவுடிகளை, எப்படி சுந்தர் சி எதிர்கொள்ளப்போகிறார் என்று நினைப்பதற்குள், எல்லோரையும் முடித்துவிடுகிறார்.

படத்தில் வரும் மூன்று வில்லன்களும் நன்றாகவே நடித்திருந்தாலும், தொடக்கத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பில்டப் பின்னர் காணாமல் போய்விடுகிறது. நாயகியாக பாலக் லால்வானி நடித்துள்ளார். முதலில், வில்லனின் ஆசை நாயகியாக இருந்து, பின்னர் சுந்தர் சி-யின் காதலியாக மாறுகிறார். அவர் ஏதோ ஒரு துணைக்கதாபாத்திரம் போல் தான் உள்ளார்.

படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் இருந்தாலும் அவை மேலோட்டமாக உள்ளன. காமெடி சுத்தமாக இல்லை. தம்பி ராமையா கதாபாத்திரம் அவரது மகள் கதாபாத்திரம் கொஞ்சம் பரவாயில்லை.

கதை, திரைக்கதை, கதாபாத்திர உருவாக்கம், கதாபாத்திர தேர்வு என எதிலும் புதுமையோ, தனித்தன்மையோ, நம்பத்தன்மையோ இல்லை.

ஜிப்ரானின் பின்னணி இசை சண்டைக் காட்சிகளுக்கு உதவி புரிந்த அளவுக்கு, மற்ற இடங்களில் எடுபடவில்லை. பாடல்கள் சுமார் ரகம் தான். டான் அசோக்கின் சண்டை காட்சி வடிவமைப்பு தான் கொஞ்சம் ஆறுதல்.

சுந்தர் சி-யோடு சேர்த்து நான்கு ரவுடிகளும் இஷ்டத்துக்கு வெட்டுகிறார்கள், குத்துகிறார்கள். இது தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகள் அடிக்கடி கூடி பேசுவது போன்று காட்சிகள் காட்டப்படுகிறது. அது எதற்கென்று தான் தெரியவில்லை.

தலைநகரம் -2, ‘ வால்’நகரமாகவே உள்ளது!

logo
Andhimazhai
www.andhimazhai.com