பறந்துபோன கடைசி ‘பா’ இயக்குநர் !

சாதனை இயக்குநர்கள்
சாதனை இயக்குநர்கள்
Published on

தமிழ் சினிமாவின் அடையாளமாக மிக நீண்டகாலம் நிலைத்து நின்றதோடு, இந்தியா முழுக்கவே ‘பா’ இயக்குநர்கள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்கள் பாலசந்தர், பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா. இன்னும் சிலர் முதலெழுத்தில் என்ன இருக்கு என்கிற கேள்வியோடு இப்பட்டியலில் மகேந்திரனையும் இணைத்துக்கொள்வார்கள்.

இன்று பாரதிராஜாவின் மறைவை ஒட்டி ‘பா’ இயக்குநர்களின் காவிய காலம் முடிவுக்கு வந்தது. இவர்களுக்குள் இருக்கும் ஆச்சரியமான ஒற்றுமை மிக அதிகமான எண்ணிக்கையில் தரமான படங்களைக் கொடுத்தவர்கள். தமிழின் டாப் 20 படங்கள் பட்டியல் போட்டால் இந்த நால்வரின் படங்கள் இன்றி ஒரு பட்டியலைத் தயாரிக்கவே முடியாது. தங்கள் வாழ்நாளில் எப்போதும் நட்சத்திரங்களை நம்பிக் காத்திருக்காமல் படங்கள் இயக்கியவர்கள் என்பதையும் இன்னொரு முக்கிய பெருமையாகக் கூறலாம். இளையராஜாவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கெட்டிக்காரர்களும் கூட..

இவர்களில் பாலசந்தரும், மகேந்திரனும் நாடகத்துறை வாயிலாக திரைக்கு வந்தவர்கள். சுமார் 100 படங்கள் வரை இயக்கிய பாலசந்தர் ‘நீர்க்குமுழி’, ‘எதிர்நீச்சல்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்று கருப்பு வெள்ளை காலத்திலேயே காவியங்கள் படைத்தவர், வண்ணக்காலத்தில் ‘சிந்து பைரவி’, ‘புன்னகை மன்னன் ’ என்னால் இப்பவும் முடியும் தம்பி என்று சுமார் 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்டார்.

தமிழ் சினிமாவுல ஒரே ஒரு நல்ல படம் பேருதான் சொல்லணும் என்று யாராவது நம்மை நெருக்கினால் வேறு வழியின்றி ‘உதிரிப்பூக்கள்’ என்று சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற அளவுக்கு மகத்தான இயக்குநர் மகேந்திரன். தான் வலிமையாக இயங்கிய 28 ஆண்டுகளில் 12 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் எனினும் அவற்றில் ‘முள்ளும் மலரும்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’ என்று மாயங்கள் செய்தவர் மகேந்திரன்.

அடுத்த பா இயக்குநர் பாலு மகேந்திரா முதன்மையாக ஒரு உலகத்தர ஒளிப்பதிவாளர். ‘72ல் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியபிறகே தனது முதல் படமான ‘கோகிலாவை’ இயக்கத் துவங்குகிறார். ;அழியாத கோலங்கள்’, ‘மூடு பனி’, ‘மூன்றாம் பிறை’, ‘யாத்ரா’ [ம], ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ என்று தென்னக சினிமாவில் பல அழியாத கோலங்கள் போட்டவர்.

இந்த மேதைகளின் வரிசையில் கடைசியாக வந்து சேர்ந்து கொண்டவர் நம் பாரதிராஜா. முன்னவர்களுக்கு இருந்த எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் மஞ்சப்பையோடு சென்னை வந்து சினிமாவை வென்றவர். இவரது முதல் படமான 16 வயதினிலேவில் இளையராஜா குரலில் ‘சோளம் விதைக்கையிலே’ கேட்டு சொக்கிப்போனவர்கள் இன்றுவரை மீளவேயில்லை. சினிமாவை ஸ்டுடியோக்களிலிருந்து ஒரிஜினல் கிராமங்களுக்கே கொண்டு சென்றவர் என்பதைத் தாண்டி பாரதிராஜாவைப் பற்றி சொல்ல ஆயிரம் பெருமைகள் உண்டு. கிராமத்துப் படங்கள் எடுக்க மட்டுமே இவர் லாயக்கு என்று துவக்கத்தில் முத்திரை குத்தப்பட்டபோது ‘டிக் டிக் டிக்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ கொடுத்து திகைக்க வைத்தவர். முதல் மரியாதை மூலம் காதலுக்கு புது மரியாதை செய்தவர்.

இன்று கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது போல் வானத்துக்கு அடுத்தபடியாக அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்துவைத்த பெருமை உலக சினிமாவில் பாரதிராஜாவுக்கு மட்டுமே உண்டு.

இன்னொரு வகையில் தமிழ் சினிமாவின் ஆலமரம் பாரதிராஜா. பாக்கியராஜ், பாண்டியராஜ், பார்த்திபன், அவர்களது சிஷ்யர்கள் அந்த சிஷ்யர்களின் சிஷ்யர்கள் என்று இன்று இருக்கும் பெரும்படையினர் பாரதிராஜாவின் பாதச் சுவடுகள் வழியாக தமிழ் சினிமாவில் பயணித்துக்கொண்டிருப்பவர்கள். இது இன்னும் பல தலைமுறைகளுக்கும் தொடரும் என்பதால்.... இப்படி முடிக்கலாம்:

3026 ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம் 10ம் தேதி ஒரு சானலுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் முதல் பட இயக்குநர் சொல்லிக்கொண்டிருப்பார்,

‘என்னோட டைரக்டரோட கொள்ளுத்தாத்தா டைரக்டர் பாரதிராஜா சார் கிட்ட அசிஸ்டென்டா இருந்தவர்ங்கிற அடைப்படையில நானும் பாரதிராஜா சார் அசிஸ்டென்ட்தான்...!’

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com