லோகேஷ் கனகராஜூடன் கிரீஷ் கங்காதரன்
லோகேஷ் கனகராஜூடன் கிரீஷ் கங்காதரன்

‘கூலி’ படத்திலும் அதே கூட்டணி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைவதாக லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில், இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இன்று தனது எக்ஸ் தளத்தில், கூலி படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கிரிஷ் கங்காதரன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். அதற்கு முன்னர் அவர் விஜய் நடித்த சர்கார் படத்திலும் பணிபுரிந்துள்ளார். மேலும் ஏராளமான மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த கிரிஷ் கங்காதரன், தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், கூலி படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com