தீராக் காதல்: திரைவிமர்சனம்!

தீராக் காதல்: திரைவிமர்சனம்!

ஆசைப்பட்ட வாழ்க்கை, ஆசைப்பட்ட நேரத்தில் கிடைக்காமல் வேறு ஒரு நேரத்தில் கிடைத்தால் என்ன நடக்கும் என்பது தான் தீராக் காதல் படத்தின் ஒன் லைன்.

ஜெய் தனது மனைவி ஷிவாதா மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் வேலை காரணமாக மங்களூருவுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷை சந்திக்கிறார். சந்தர்ப்ப சூழலால், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவரை பிரிய, அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறுகிறார் ஜெய். இதனால், மீண்டும் அவரை காதலிக்கத் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் காதலி. இதை எப்படி சமாளிக்கிறார் ஜெய்? என்பதே படத்தின் மீதிக்கதை.

எழுத்தாளர் ஜி.ஆர் சுரேந்திரநாத் திரைக்கதை, வசனத்தில் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வேறு வேறு நபர்களை திருமணம் செய்துகொண்ட காதலர்கள் மீண்டும் சந்தித்தாலோ, பேசினாலோ அதைத் தவறாக புரிந்து கொள்வார்கள். இதை இயக்குநர் மிக பக்குவமாக கையாண்டுள்ளார்.

படம் தொடக்கம் முதல் முடிவு வரை சீரான வேகத்தில் செல்கிறது. காதலும் காமெடியும் படத்தின் பலம்.

ஜெய் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். குழந்தையிடம் கொஞ்சும் போதும், மனைவியிடம் மன்றாடும் போதும், காதலியை பார்த்து தவிக்கும் போதும் அந்த உணர்வுகளுக்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். ஜெய்யின் முன்னாள் காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கணவனிடம் அடிவாங்கி வதைபடும் காட்சிகள், ஜெய் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார். ஒரு பெண்ணின் காதல் வலி என்னவாக இருக்கும் என்பதை உள்வாங்கி நடித்துள்ளார்.

ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவாதாவின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் கணவராக வரும் அஜ்மத்தின் கதாபாத்திரம் மட்டும் கொஞ்சம் ஒட்டவில்லை. ஜெய் நண்பனாக வரும் அப்துல் செய்யும் காமெடிகள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.

ரவிவர்மன் நீலமேகமின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். கண்ணை உறுத்தாத ரம்மியமான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். காட்சிமொழிக்கு ஏற்ற பின்னணி இசையைக் கொடுத்துள்ளார் சித்து குமார்.

“சேர்ந்து வாழ வேண்டியவங்களை பிரிச்சு வைப்பாங்க. பிரிந்து வாழ வேண்டியவங்களை சேர்த்து வைப்பாங்க” என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனம் ரசிக்க வைக்கிறது. ஜி.ஆர் சுரேந்திரநாத் வசனம் கதைக்கு ஏற்ற நியாயத்தை சேர்க்கிறது.

ஏற்கெனவே பார்த்துப் பழக்கப்பட்ட கதை தான் தீராக் காதல் என்றாலும், அதை ரசிக்க முடியாமல் கடக்க முடியவில்லை!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com