நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா

“கேவலமான மனிதர்கள்…நடவடிக்கை எடுப்பேன்” – நடிகை த்ரிஷா

முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகியின் பேட்டி சர்ச்சைக்குள்ளான நிலையில் நடிகை த்ரிஷா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷாவின் பெயரையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது.

இதற்கு இயக்குநரும் நடிகருமான சேரன், நடிகை கஸ்தூரி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். தென்னிந்திய திரைப்பட ஊழியர் சங்கம்- பெப்சியும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து எழுதியுள்ள பதிவில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இது குறித்து நிச்சயம் என் சட்டக்குழுவின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com