
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை வாரி வழங்கிவரும் நிலையில் அவரது நெருங்கிய தோழி த்ரிஷா தனது வலைதளப் பக்கங்களில் அமைதி காத்திருப்பது வலைதளவாசிகளுக்கு பெரும் மன நெருக்கடியாக மாறியுள்ளது.
ஜூன் 22 இன்று தமிழக தளபதி விஜய்க்கு 52 வது பிறந்தநாள். சும்மாவே ஆடும் விஜய் ரசிகர்கள் அவர் முதல்வரான பிறகு சலங்கை கட்டி ஆடமாட்டார்களா ? ஊரெங்கும் பட்டாசுகள் வெடித்து, இலவச பிரியாணிகள் வழங்கி விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அத்தனை அரசியல்வாதிகளும் சோஷியல் மீடியாக்களில் தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்துவர, சினிமாக்காரர்களும் விஜய்யுடன் தாங்கள் ஏதோ ஒரு காலத்தில் எடுத்த புகைப்படங்களைப் பரணில் தேடி எடுத்துப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாகவே, கடந்த ஆண்டு தனது எக்ஸ் தளப் பதிவில்,.. Happy Birthday bestest என்று பதிவிட்ட த்ரிஷா இந்த ஆண்டு என்ன சொல்லி வாழ்த்தப்போகிறார் என்று தங்கள் யூகங்களை வெளியிட்டுக் காத்திருந்தார்கள். இன்னும் சிலரோ விஜய் பிறந்தநாளன்று அவர்கள் இருவர் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகப்போகிறது என்றெல்லாம் கிசுகிசுத்துக் காத்திருந்தார்கள்.
ஆனால் இன்று மதிய நிலவரம் வரை த்ரிஷா பொதுவெளிகள் எதிலும் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்து செய்திகள் எதையும் பதிவிடவில்லை.
இதனால் பிரேக்கிங் செய்தி போடக் காத்திருந்த ஊடகவியலாளர்கள் மனசு பிரேக்கிங் ஆனதுதான் மிச்சம்.