எங்க அம்மா, அப்பா பார்க்க கூடாதுனு படம் எடுத்திருக்கேன்! – மாரிசெல்வராஜ் உருக்கம்
“எங்க அம்மா, அப்பா பார்க்க கூடாதுனு எடுத்த படம்தான் வழை.” என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை நடந்த வாழை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: “ என் அம்மா, அப்பா பார்க்க கூடாது நினைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். அவர்களை பார்க்க விடமாட்டேன். என்னை அரித்துக் கொண்டிருந்த கதையை படமாக எடுத்துள்ளேன்.
வாழை படத்துக்குப் பிறகு நான் என்னுடைய ‘பெஸ்ட்’ ஆக ஒரு படம் பண்ணாலும் நான் வாழை படத்தைத்தான் என்னுடைய சிறந்த படமாக பார்ப்பேன். என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது வாழை தான்.
என்னதான் இவனுக்கு பிரச்சினை என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்தப் படம்தான் இது. என்னுடைய வலியை, என்னுடைய பரிதவிப்பை, என்னுடைய அழுகையை நான் என் இயக்குநர் ராமிடம் சொல்லும்போது, இதுதான் கலை என்று எனக்கு உணர்த்தியவர் அவர். அவருக்கு இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன். வாழை என்னை பற்றிய உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும்.” இவ்வாறு மாரி செல்வராஜ் பேசினார்.
‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’. இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகிறது.
கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.