அது நான் இல்லை - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி!
மழை பிடிக்காத மனிதன் படத்தில், தனது ஒப்புதல் இல்லாமல் இரண்டு நிமிடக்காட்சியை யாரோ இணைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் விஜட் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், ‘அது நான் இல்லை’ என படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்த படம் சுமாரான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதற்கிடையே, படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் கடந்த வாரம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மழை பிடிக்காத மனிதனில் நாயகன் யார், எங்கிருந்து வந்திருக்கிறார் என்கிற கேள்விகளை வைத்தே இப்படத்தை எடுத்தேன். கேள்விகளாலே இக்கதையை உருவாக்கியிருந்தேன். இப்போது, படத்தைப் பார்க்கும்போது நாயகன் யார் என்கிற ஒரு நிமிட காட்சியை படத்தின் ஆரம்பத்தில் யாரோ சேர்த்திருக்கிறார்கள்.
இப்படி காட்சியை சேர்த்தால் பார்ப்பவர்களுக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கும்? தணிக்கைக்குச் சென்ற பிறகு வெளியீட்டிற்கு முன்பு இக்காட்சியை இணைத்திருக்கிறார்கள். இயக்குநரைக் கேட்காமல் இப்படிச் செய்ததற்காக என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள் தயவு செய்து, அந்த முதல் ஒரு நிமிடத்தை மறந்துவிட்டு பாருங்கள்.” வேதனையுடன் தன் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனிக்கும் தயாரிப்பு தரப்பிற்கும் இருந்த பிரச்னை காரணமாகவே இந்த காட்சி படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கத் தயாரிப்பு தரப்பு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்து, கடைசியில் அது ரத்து செய்யப்பட்டது. பிறகு அந்த காட்சியைப் படத்திலிருந்து தயாரிப்பு தரப்பு நீக்கியது.
இந்த காட்சி நீக்கப்பட்டது குறித்துப் படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விஷயத்தில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த நடிகர் சரத்குமாருக்கு நன்றியைத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் விஜய் மில்டன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு 'அதைச் செய்தது நான் இல்லை' என்று விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் திரு.விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.