விஜய் களச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்! - வெற்றிமாறன் கருத்து!!
அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விஜய் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் லியோ படத்தின் வெற்றி விழாவில் தொகுப்பாளர், 2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிப்பிட்டுக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த விஜய் 'கப்பு முக்கியம் பிகிலு' என திரைப்பட வசனம் போலப் பேச, அரங்கில் கைதட்டல்கள்!
இந்த நிலையில், சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இன்று காலையில் நடைபெற்ற தூய்மைப்பணியைத் தொடங்கி வைத்த இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“சினிமா சமூகத்திலும் அரசியலிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. சமூகத்தில் நல்ல விதமான உரையாடலை சினிமா நிகழ்த்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஜெய்பீம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தெரியும்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவருடைய தரப்பு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது. அதற்கு முன்னதாக விஜய் களச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
அரசியல் என்பது சாதாரணமானது இல்லை. சவாலை எதிர்கொள்ள நினைப்பவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்.” என்றார் வெற்றிமாறன்.