விஜய் மகனின் இயக்குநர் அவதாரம்... அறிமுகம் செய்யும் லைகா!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா தயாரிக்கும் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்ற பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருப்பார் சஞ்சய். அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழுவதும் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரைப் போன்று, இயக்குநராக விரும்பிய சஞ்சய், கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படம் சார்ந்த பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதற்கிடையே, “PULL THE TRIGGER" என்ற குறும்படத்தை எடுத்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த படத்தை சஞ்சய் இயக்க இருந்தார். ஏனே அது நடக்காமல் போய்விட்டது. அதேபோல், பிரேமம் இயக்குநர் அல்போன்சு புத்திரன், சஞ்சயைக் கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒருமுறை கதை சொல்லியிருந்தார். ஆனால், அவருக்கு நடிப்பின் மீது ஈடுபாடு இல்லை என்பதால் அதுவும் நடக்காமல் போய்விட்டது.
இந்த நிலையில், சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த படத்துக்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை லைகா நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.