விமானம்: திரைவிமர்சனம்!

விமானம்: திரைவிமர்சனம்!

Published on

ஏழைகள் ஆசைப்படலாமா? ஆசைப்பட்டால் அதற்கு எதையெல்லாம் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை தந்தை – மகன் பாசத்தின் மூலம் சொல்ல வரும் திரைப்படம் தான் விமானம்.

சென்னை குடிசைப்பகுதிகளில் கட்டணக் கழிப்பறை நடத்தி சம்பாதிக்கும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனி (வீரய்யா). மனைவியை இழந்தவர் அவர், தனது ஒரு மகனை மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார். மகனுக்கு விமானம் என்றால் கொள்ளைப் பிரியம். எந்நேரமும் விமானங்கள் பறப்பதை பார்த்து ரசிக்கும் சிறுவனுக்கு விமானத்தில் பயணிக்க வேண்டும், பைலட் ஆக வேண்டும் என ஆசை. தன் மகனின் ஆசையை நிறைவேற்ற சமுத்திரக்கனி எந்த எல்லை வரை செல்கிறார், அதற்காக அவர் கொடுக்கும் விலை என்ன என்பதே கதை!

இயக்குநர் சிவ பிரசாத் ஒரு குறும்படத்திற்கான கதையை முழு நீளத் திரைப்படமாக எடுத்துள்ளார். அப்பா – மகன் பாசத்தை உணர்ச்சி பொங்க எடுத்தால் ரசிகர்களை கவர்ந்துவிடலாம் என நினைத்திருப்பார் போல இயக்குநர். தட்டையான காட்சி அமைப்புகள், செயற்கையான வசனங்கள், சமுத்திரக்கனியின் மிகை நடிப்பு, சீரியலுக்கான பின்னணி இசை போன்றவை படத்தின் பலவீனம்.

சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் பார்வையாளர்களுக்குப் பாடம் நடத்த தவறவில்லை. கால் ஊனமுற்றவராக காட்டப்படும் அவர், சில இடங்களில் அதை மறந்துவிட்டு நடிக்கிறார். சிறுவனாக நடித்திருக்கும் துருவன், கொஞ்சம் மிகை நடிப்பை கொடுத்திருந்தாலும், கதைக்கு வேண்டியதை செய்திருக்கிறார். விமானத்தைப் பார்த்து ரசிக்கும் இடங்களில் ஈர்க்கிறார். அனுசுயா கதாபாத்திரம் படத்திற்கு தேவை இல்லாத ஒன்று. அப்பா – மகன் பாசப்போராட்டத்தில் அவரின் கவர்ச்சி காட்சிகள் ஏனோ?. ராகுல் கிருஷ்ணா, தன்ராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு போதிய கவனம் இல்லை.

சரண் அர்ஜூனின் இசை சலிப்பு தட்டுகிறது. குறிப்பாக பின்னணி இசை சீரியல் பார்க்கும் உணர்வைத் தந்து வேதனைப்படுத்துகிறது. டப்பிங் பணிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுவதும் வசனங்கள் உதட்டு அசைவிற்கு ஒட்டவில்லை.

விமானம் – டேக் ஆஃப் ஆகவில்லை!

logo
Andhimazhai
www.andhimazhai.com