பிரியோம் சந்திப்போம்… அடுத்த பட தலைப்பை மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அறிவித்த கரு. பழனியப்பன்!

பிரியோம் சந்திப்போம்… அடுத்த பட தலைப்பை மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அறிவித்த கரு. பழனியப்பன்!
Published on: 

அரசியலின் நடைமுறையே இப்போதைக்கு பிரிவோம்…பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் என்று ஆகிவிட்ட நிலையில், அதிலும் குறிப்பாக சினிமாக்காரர்கள் கூண்டோடு விஜய் கூடாரத்தில் டேரா அடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் கரு. பழனியப்பன் தனது அடுத்த படத் தலைப்பை முன்னால் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டிருக்கிறார்.

2003ல் ‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் அறிமுகமான கரு. பழனியப்பன் அடுத்து ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்ளிட்ட 6 படங்களை இயக்கினார். தான் இயக்கிய ‘மந்திரப்புன்னகை’ படத்தில் நாயகனாகவும் களமிறங்கி அடுத்து சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார்.

ரகளையான மேடைப்பேச்சுகள் மூலம் அதிகம் புகழ்பெற்ற பழனியப்பன் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி வெகுவாக சிலாகிக்கப்பட்ட ஒன்று.

இந்நிலையில் மீண்டும் இயக்குநராக களம் இறங்கியிருக்கும் பழனியப்பன் எழுத்தாளர் மா. காமுத்துரையின் ‘குதுப்பி’ என்கிற நாவலை திரைக்கதையாக்கி ‘குக்கர்’ என்கிற தலைப்பில் இயக்குகிறார். காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்க, விகடன் நிறுவனத்தின் நட்சத்திர புகைப்படக் கலைஞர் ராஜசேகர் ஒளிப்பதிவாளராக தடம் பதிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் நேற்று முன்னால் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து படத்தின் தலைப்பை வெளியிட்டார். விஜய் முதல்வரான பிறகு அவரது சந்திப்புக்காக திரைத்துறையினர் பலரும் வழிமேல் முழி வைத்துக் காத்திருக்கும் நிலையில் பழனியப்பனின் இச்செயல் பெரும் கவனிப்பைப் பெற்று வருகிறது.

எண்ட் பாயிண்ட்: விரைவில் தான் படமெடுக்கும் குதுப்பி நாவலை தானே அச்சிட்டு வெளியீட்டு விழாவும் நடத்துகிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com