“இனி மோசமான இந்தியாவில் இருக்கப் போகிறோம்!” - இயக்குநர் பா.ரஞ்சித்

“இனி மோசமான இந்தியாவில் இருக்கப் போகிறோம்!” - இயக்குநர் பா.ரஞ்சித்

“இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்கப் போகிறோம் என்ற யோசனை நமக்கு இருக்க வேண்டும்.” என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

அசோக் செல்வன் மற்றும் சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், ப்ளு ஸ்டார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது, “ரொம்பவும் முக்கியமான நாள் இன்று. வீட்டிற்கு சென்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் எல்லாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து – பத்து ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயத்தை உணர்த்துகிறது. அதுபோன்ற காலகட்டத்துக்கு நுழையும் முன்பு, நாம் நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும், தினமும் நம்மிடம் சொல்லிக் கொடுக்கப்படும் மதவாதத்தையும் நம்மிடம் இருந்து அழிக்க, கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். இந்தியா மிக மோசமான சூழலுக்கு சென்றுவிடக் கூடாது. அதற்காக நாம் வேலை செய்ய வேண்டும்.

இந்த நாள் முக்கியமான நாளாகப் பார்க்கப் படுகிறது. ஆனால், இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்கப் போகிறோம் என்ற யோசனை நமக்கு இருக்க வேண்டும். புளு ஸ்டார் பெயரே பெரிய அரசியல் தான். அந்த நீல நட்சத்திரம் நம்மை சரியாக வழிநடத்தும் என்று நம்புகிறோம்.” என்று ரஞ்சித் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com