கங்குவா இரண்டாம் பாகம் எப்போ? - ஞானவேல்ராஜா கொடுத்த அப்டேட்!
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இப்படத்தில் பாபி தியோல், நட்டி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், அண்மையில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பாபி தியோல், ‘உதிரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கங்குவா படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் முதல் பாகத்திற்கான படபிடிப்பு மட்டும் 185 நாட்கள் நடைபெற்றதாகவும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், கங்குவா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்றும், தொடர்ந்து ‘கங்குவா’ இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு ஜனவரியில் அல்லது கோடைக்காலத்தில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.