‘வா வாத்தியார்' வருமா?

வா வாத்தியார்
வா வாத்தியார்
Published on

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ரூ.21.78 கோடி கடனை செலுத்தும் வரை படத்தை வெளியிட கூடாது. ஓடிடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வெளியிட அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை வரும் 12ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து கடனாகப் பெற்ற தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வா வாத்தியார் திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது கடனாக பெற்ற பணம் 21 கோடியே 78 லட்சம் ரூபாயை ஸ்டுடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனம் எப்போது செலுத்த உள்ளனர் என்பது குறித்தும், கணிசமாக தொகையை சொத்தாட்சியரிடம் செலுத்துவது குறித்தும் இன்று பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பலமுறை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், முழு தொகையையும் செலுத்தவில்லை. கங்குவா, தங்கலான் உள்ளிட்ட படங்களை திரையிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் வைப்பாகவும் நீதிமன்றத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, திரைப்படத்தை வெளியிட அனுமதி பெற்றது.

தற்போது மீண்டும், கடனை செலுத்தாமல் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இதுவரை 7 முறை கடனை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், டிசம்பர் 12 ஆம் தேதி திரையிட திட்டமிட்டுள்ள வா வாத்தியார் படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஓடிடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வெளியிட அனுமதியில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com