‘வித் லவ் ‘ - விமர்சனம் ... முன்னாள் காதலர்களைத் தேடிப்போகலாமா ?

  ‘வித் லவ் ‘ - விமர்சனம் ... முன்னாள் காதலர்களைத் தேடிப்போகலாமா ?
Published on

70,80,90 கே கிட்ஸ்களையெல்லாம் பூமிக்குப் பாரம்போல் பாவித்து வந்தவர்கள் 2 கே கிட்ஸ்கள். ஆனால் இவர்களையே பழசுகளாக, பெருசுகளாகப் பார்க்கக் கிளம்பியிருக்கும் இன்றைய துள்ளுவதோ இளமை ஜென் Z கிட்ஸ்களின் காதல் ஜிவ்தான் இந்த வித் லவ்.

டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற தரமான ஹிட் கொடுத்த இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த், நாயகனாக களம் இறங்க, மலையாளத்தில் மெல்ல தன் கொடியை நாட்டிவரும் அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க அறிமுக இயக்குநர் மதன் முதல் படத்திலேயே நரிமுகத்தில் முழித்திருக்கிறார்.

மனித ஜீவராசிகளின் மகத்தான போதை நாஸ்டாலஜியா எனப்படும் பழைய நினைவுகளில் ஏங்கித்தவிப்பது. ஒரு வரியில் சொல்லப்போனால் நாயகன், நாயகியின் பள்ளிக்கால நாஸ்டாலஜியாதான் இக்கதை.

அக்காவின் வழிகாட்டுதலில் தனக்கு வருங்கால மனைவி தேடும் சத்யா அதில் விரக்தி அடைந்த ஒரு கட்டத்தில் மோனிஷாவை சந்திக்கிறான். இருவருக்கும் ‘அடடே எங்கேயோ பார்த்த ஞாபகம்’ என்று மின்னலடிக்க, பேசிப்பார்க்கையில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். உரையாடல் கொஞ்சம் நீள இருவரது இளமைக்கால காதல் தோல்விகள் பற்றிய பேச்சு வருகிறது. ஒரு கட்டத்தில் ‘நாம் காதலித்தவர்கள் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டபிறகு நமது திருமணம் குறித்து முடிவு எடுக்கலாம்’ என்று மோனிஷா கன்டிஷன் போட வேறு வழியின்றி தயக்கத்துடன் சத்யா ஒத்துக்கொள்கிறான்.

நாயகன் தான் காதல் சொல்ல மறந்த நாயகியைத்தேடிப்போக, நாயகி தன்னைக் காதலித்தவனைத் தேடிப்போக...

என்னவாகிறது என்று செம எதிர்பார்ப்பு எகிறுகிறதல்லவா ? அந்த எதிர்பார்ப்புக்குக் கொஞ்சமும் குறைவைக்காமல், நல்ல, சுவாரசியமான நேர்த்தியான காட்சிகளை தனது முதல் படத்தை சிக்ஸர் அடித்து துவக்கியிருக்கிறார் மதன். கிரிஞ்ச் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், அரைகுறை ஆடைகள் என்று படத்தில் எதுவுமே இல்லை என்பது ஆறுதல்.

அபிசந்த் நடிகராக நிச்சயம் நல்ல வரவுதான். பிரதீப் ரங்கநாதனோடு இவரை ஒப்பிட்டு இன்சல்ட் செய்ய வேண்டியதில்லை. நாயகி அனஸ்வரா ராஜனும் அபிசந்துக்கு இணையாக ஸ்கோர் செய்கிறார் என்றால் இன்னொரு நாயகியாக இஸ்லாமிய பெண் பாத்திரத்தில் வரும் காவ்யா அனிலுக்கு ஒரு குட்டிக் காவியமே எழுதலாம். மறுசந்திப்பில் சத்யாவிடம், ‘’ அப்போ ஏண்டா என்கிட்ட ஐ லவ் யூ சொல்லலை ?” என்று லேசாகக் கண்கலங்கிக் கேட்கும் காட்சி நம்மை என்னவோ செய்துவிடுகிறது.

கதையின் டிராக்கில் கவனமாக பயணம் செய்த ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு கூடுதல் பலம் என்றால், என்னால் ஜென் Z கிட்ஸ்களுக்கு இப்படி ஒரு துள்ளலான இசையையும் கொடுக்க முடியும் என்று சர்ப்ரைஸ் பண்ணுகிறார் ஷான் ரோல்டன். வெல்டன்.

படத்தில் குறைகளே இல்லையா ? ஆரம்பக் காட்சிகளில் சில தொடங்கி இடைவேளை வரை சில காட்சிகள் டல் மொமண்ட்தான். ஆனால் இடைவேளை ட்விஸ்ட் தொடங்கி க்ளைமேக்ஸ் வரை நம்மை காதலால் கட்டிப்போட்டுவைக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு முன்னாள் காதல்களை எத்தனைப் பேர் தேடிப்போய் எத்து வாங்கப் போறாய்ங்களோ தெரியல...

வித் லவ். கெத்து லவ்.

logo
Andhimazhai
www.andhimazhai.com