மசாலா மன்னர்கள் தங்கள் சினிமா பட்ஜெட்டை 500 கோடி, 1000 கோடி என்று உயர்த்தி தயாரிப்பாளர்களின் பி.பி.யை ஏற்றிக்கொண்டிருக்க, ‘இயற்கை விவசாயம் செய்வது போல் நல்ல சினிமா எடுக்க, அதிகமில்லை ஜெண்டில்மென் சொற்ப லட்சங்களே போதும்’ என்று கோடம்பாக்கத்தின் இரும்புக் கதவை தனது அரும்பு முயற்சியால் மெல்லத் திறக்க முயன்றிருக்கிறார் செழியன்.
ஒளிப்பதிவாளர், இயக்குநர், உலக சினிமா கதைகளைப் பகிர்கிறவர் என்று பன்முகங்கள் கொண்ட செழியனின் புத்தம் புது முயற்சி தன்னுடைய ‘த பிலிம் ஸ்கூல்’ மாணவர்களில் 34 பேரை ஒரே நேரத்தில் இயக்குநர்களாகக் களம் இறக்கியிருப்பது. இந்த அறிவிப்பு ரெகுலர் சினிமாக்காரர்கள் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் ‘அந்திமழை’க்காக செழியனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். விரிவாகப் பேசியதிலிருந்து...
“இப்படி ஒரு முடிவை எடுத்து களம் காணத் தொடங்கியபின் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எப்படி இது முடிகிறது எனற கேள்வியை பலரிடமிருந்தும் எதிர்கொள்கிறேன். ஓர் ஒளிப்பதிவாளராக இயக்குநர் பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’யில் தொடங்கி சீனு ராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’, பாலாவின் ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’களின் வழியாக லேட்டஸ்டாக ஒளிப்பதிவு செய்து முடித்த அஜயன் பாலாவின் ‘மைலாஞ்சி’ வரை சுமார் 15 படங்களைக் கடந்துவிட்டேன். இருபது ஆண்டுகளில் 15 படங்கள் என்பது கொஞ்சம் குறைவுதான். ஆனால் நான் செய்த படங்கள் அத்தனையும் மனநிறைவு தந்தவை. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் தேசிய விருதுகளே வாங்கியிருக்கின்றன. இதே காலகட்டத்தில் என்னைத் தேடி வந்த பல பட வாய்ப்புகளை பண்ணாமல் தவிர்த்திருக்கிறேன். காரணம் பணம் சம்பாதிப்பது எனது முதல் குறிக்கோள் இல்லை.
பிலிம் ஸ்கூல் நிகழ்வுக்கு வருவோம். என் பெற்றோர் ஆசிரியர்கள் என்பதால் என் ரத்தத்திலேயே கற்றுக்கொடுக்கும் உணர்வு இருந்திருக்கிறது என்றுதான் புரிந்துகொள்கிறேன். எனது ‘உலக சினிமா’ புத்தகத்தையே ‘திரைப்படங்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திய அப்பா ஆசிரியர் மு.ராமலிங்கம்... ‘சினிமா நமக்கு வேணாம்பா’ என்று சொன்ன அம்மா ஆசிரியை த. இராமலெட்சுமி இருவருக்கும் என்றுதான் சமர்ப்பித்திருக்கிறேன். அவர்களின் தொடர்ச்சிதான் இது.
மட்டுமன்றி நண்பர்களுடன் நடந்த சினிமா குறித்த உரையாடல்களின் தொடர்ச்சியும் கூட இது.
ஒரு படம் பார்த்தபிறகு அது குறித்து விவாதிக்கிறோம். ஏதோ ஒரு நண்பர் இந்தப் படத்தைவிட நல்ல கதை என்கிட்ட இருக்கு என்கிறார். இன்னொரு நண்பர் தனக்கு நடந்த காதல் குறித்து பகிர்ந்துகொள்கிறார். இப்படியே பேசிக்கொண்டிருந்தபோது இதை ஒரு இடமாக ஒருங்கிணைத்தால் என்ன என்று யோசித்தபோது எடுத்த முடிவுதான் இந்த பிலிம் ஸ்கூல்.
ஹலோ மைக் டெஸ்டிங் போல இதை முதலில் முகநூலில்தான் பகிர்ந்தேன். நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர ஆர்வம் காட்டினார்கள்.
நான் முன்னரே சொன்னது போல, இந்தப் பயிற்சியை வழங்குவதன் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனவே கார், பங்களா உள்ள வசதியானவர்களை சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இங்கே வந்து சேர்கிறவர்களுக்கு நிஜமான சினிமா ஆர்வம் இருக்கிறதா? இலக்கியம் தெரிந்தவர்களாக இருக்கிறார்களா? உலக சினிமா பற்றிய ஞானம் உள்ளதா என்று கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே அவர்களை பள்ளியில் சேர்த்துக் கொண்டேன்.
டிஜிடல் உலகம் பிறப்பதற்கு முன், சினிமா என்கிற இரும்புக் கோட்டைக்குள் நுழைய முடியாமல் எத்தனையோ லட்சம் பேர் திரும்பிப்போயிருக்கிறார்கள் என்கிற தகவல் எவ்வளவு வேதனையைத் தரக்கூடியது. ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. மசாலாப் படங்கள் ஒரு பக்கம் இயங்கிக்கொண்டிருக்க, மாபெரும் அபார்ட்மெண்ட்களுக்கு அருகே இருக்கும் வண்ணப் பூங்காக்கள் போல் சிறிய படங்களை இயக்கமுடியும் என்று அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தேன்.
முன்னர் படம் இயக்க விலை உயர்ந்த கேமரா, மற்ற தொழில்நுட்பக்கருவிகள் என்று எவ்வளவோ வேண்டும். ஆனால் இன்றைக்கு பேனாவும் காகிதமும், ஒரு கம்ப்யூட்டரோ லேப்டாப்போ இருந்து நீங்கள் ஒரு கதையை எழுத முடிந்தால் சுலபமாக இயக்குநராகிவிடலாம். சின்ன பட்ஜெட்டில் ஒரு கதை என்கிறபோது உங்கள் நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சமாக உதவ முன்வருவார்கள்.
வீடு வாங்க 15 லட்சம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனால் படம் இயக்குவது என்பது அதைவிட பெரும் விருப்பமாக இருக்கிறது என்று நினைக்கிறவர்கள் சுலபத்தில் படம் இயக்கிவிட முடியும்.
இப்போது களம் காணவிருக்கிற 34 இயக்குநர்களுமே அப்படி தங்களுக்கான கதையை மெல்ல மெல்ல எழுதிக்கொண்டவர்கள்தான். அவர்களுக்கான கதையை அப்படி அவர்களே எழுதிக்கொள்கிறபோது இயல்பாகவே அது பெரும் பட்ஜெட்டைக் கோருவதில்லை. அவர்களது கதை தயாராகத் தயாராக நண்பர்களிடமிருந்து, உறவினர்களிடமிருந்து பண சப்போர்ட் சேர்ந்துகொண்டே இருந்தது. இந்த 34 படங்களுமே லோ பட்ஜெட் படங்கள்தான். 5 லட்சத்தில் தொடங்கி ஒரு படம் கூட 50 லட்சத்தைத் தாண்டவில்லை.
இப்படங்கள் திரைக்கு வருமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்பும் உள்ளது என்றுதான் சொல்வேன்.
ஒளிப்பதிவுக்கு அடுத்த கட்டமாக ‘டு லெட்’ படத்தை இயக்க நான் முடிவு செய்தபோது நண்பர்களில் சிலரே ‘இது உனக்கு தேவையில்லாத வேலை’ என்றார்கள். படத்தை இயக்கி முடித்து பிலிம் பெஸ்டிவெல்களுக்கு அனுப்பியபோது ஆரம்பத்்தில் பரிதாபமான ரெஸ்பான்ஸ்தான் இருந்தது. பின்னர் அது வாங்கிக்குவித்த விருதுகளை ஊரறியும். அடுத்து இது பெஸ்டிவல்களுக்கு மட்டுமே லாயக்கு. தியேட்டர்களுக்கெல்லாம் வர வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆனால் ஏதோ ஒரு விழாவில் படம் பார்த்த சத்யம் சினிமாஸ் நிர்வாகிகள் சத்யம் மெயின் திரையிலேயே வெளியிட அங்கே படம் 55 நாட்கள் ஓடி சாதித்தது.
எனக்கு நடந்த சோதனைகள் இவர்களுக்கும் நடக்கக்கூடும். புதிய முயற்சிகள் என்று வருகிறபோது சோதனைகளைக் கடந்துதானே வரவேண்டும்.
இவர்களுக்கு பள்ளியில் தரப்பட்ட பயிற்சி மட்டுமே போதாது என்று எனக்குத் தெரியும். அதுபோக இவர்களைக் களத்தில் இறக்கிவிட்ட நான் கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் அல்லவா? எனவே நான் சமீபத்தில் ஒளிப்பதிவு செய்த ‘மைலாஞ்சி’ படப்பிடிப்பு தளத்துக்கு அவர்களை வரவழைத்து கற்றுக்கொள்ளச் செய்தேன்.
இந்த 34 பேரும் சினிமாவாக சமைக்கப்போவது ஒரு கூட்டாஞ்சோறுதான். இதில் ‘இசக்கி’ என்கிற படத்துக்கு நானே ஒளிப்பதிவு செய்யப்போகிறேன். இந்தப் படப்பிடிப்பில் மற்ற இயக்குநர்கள் இணைந்து பணி செய்வார்கள். கற்றுக்கொள்வார்கள். இந்த கூட்டாஞ்சோறு கான்செப்ட் இந்த 34 படங்களுக்குமே பொருந்தும்.
தமிழில் இந்த முயற்சி புதிது போல தெரிந்தாலும் மலையாள சினிமாவில் அடிக்கடி நிகழ்வதுதான். சமீபத்தில் கூட 10 லட்ச ரூபாய்க்குள் முழு நீள படம் எடுத்து அது திரையரங்குகளில் வெற்றியும் பெற்றிருக்கிறது.
இந்த பிலிம் ஸ்கூல் பணியோடு இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்கிற மூன்று அடையாளங்கள் இருந்தாலும் எனது முதன்மை அடையாளம் ஒளிப்பதிவாளர் என்பதுதான். அதற்காக மற்ற பணிகளை சுமை என்று கருதுவதில்லை.
இசைஞானி இளையராஜாவிடம் ‘இசையமைப்பது போக உங்கள் பொழுதுபோக்கு எது என்று கேட்க, என்னோட பொழுதுபோக்கே இசையமைக்கிறதுதான்’ என்று கூலாக பதிலளிக்கிறார். ஒளிப்பதிவை மட்டுமல்ல... மற்ற பணிகளையும் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறேன்.
‘கல்லூரி’தான் எனது முதல் படம் என்றாலும் அதற்கும் முன்னரே ‘தம்பி’ படத்தில் தனியாக பாடல்காட்சிகள், சில காட்சிகள் எடுக்க வைத்து என்னைத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்து அழகுபார்த்தவர் அண்ணன் சீமான். சினிமாவுக்கு வந்த முதல் நாளே நண்பர் காளீஸ்வரன் அறிமுகப்படுத்த, ‘அடடே நம்மூர்க்காரப்பய வெள்ளைக்காரன் மாதிரி இருக்க’ என்று ஆரத் தழுவி வழி நடத்தியவர். அத்தோடு இயக்குநர் பாலாவுடன் இரு படங்களில் பணியாற்றியதை மறக்க முடியாது.
படப்பிடிப்பு சமயங்களில் அவர் இருக்கிற இடம் அவ்வளவு சைலன்டாக இருக்கும். நானும் சத்தமின்றி பணியாற்றுகிற ஆள். ஷாட் ஒகே வா இல்லையா என்பதைக் கூட பார்வைகளால்தான் பரிமாறிக்கொள்வோம். வெளியே அவருக்கு இருக்கிற இமேஜைத் தாண்டி மிக நல்ல மனிதர் பாலா.
ஒரு படத்துக்கு ஒரு ரூபாய் நாணயம் அட்வான்ஸாக வாங்கியதைப் பேசிவிட்டு இந்த பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அறிமுக இயக்குநர் அஜயன் பாலாவின் ‘மைலாஞ்சி’ படம் குறித்த செய்தி. அஜயன் பாலா எனக்கு பல்லாண்டு கால நண்பர். சாலிகிராமம் தெருக்களில் நடந்து பேசிக்கொண்டேயிருப்போம். அப்படி ஒரு நாளில் திடீரென்று அஜயன் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்து, ‘செழியன் நான் டைரக்டர் ஆகுறப்போ நீங்கதான் கேமராமேன்’ என்றார். ஆண்டுகள் பல கடந்து அவர் இயக்குநரானபின் என் சம்பளம் குறித்துப் பேச சற்றே தயங்கினார். அப்போது ‘அஜயன் நீங்க கொடுத்த 1 ரூபாய் அட்வான்சை இன்னும் என்கிட்டதான் இருக்கு. சம்பளமெல்லாம் பெரிய விசயமேயில்லை. வாங்க பண்ணலாம்’ என்று அவரோடு இணைந்து கொண்டேன். அப்புறம் எங்கள் அன்புக்காக எடிட்டர் ஶ்ரீதர் பிரசாத் உள்ளே வந்தார். சின்னப்படம் கொஞ்சம் பெரிய படம் ஆனது.
இசையமைப்பாளராக இளையராஜாவைப் போட்டால் இன்னும் பெரிய படமாக இருக்குமே என்று விவாதித்தபோது தயாரிப்பாளர் தரப்பில் எவ்வளவு சம்பளம் கேட்பாரோ என்று தயங்கினார்கள். ராஜா சாரை சந்திக்கச் சென்றேன்.
‘சம்பளமெல்லாம் பெரிய விசயமேயில்லை. பண்ணிடலாம்’ என்று அவரும் உள்ளே வந்தார். இப்போது படம் முடிந்து திரைக்கு வரத்தயாராகிவிட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஊட்டியில்தான் நடந்தது. ஊட்டி லோகேஷன்களை எங்க பாலுமகேந்திரா சாரை போல யாரும் எடுத்திருக்க முடியாது. கூடிய வரைக்கும் அவர் பண்ணாத லொகேஷன்களா பார்த்துதான் ஷூட் பண்ணினோம். ஆனாலும் இந்த படத்தோட ஒளிப்பதிவு அவருக்கான சமர்ப்பணம்தான்.’ என முடித்தார் செழியன்.
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp
அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

