
ஜனநாயகன் தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட ரீமேக் செய்யப்பட்ட படம். அந்தப் படத்தில் என்ன வரம்பு மீறிய காட்சிகள் அல்லது வசனங்கள் இருக்கின்றன என இரு தரப்பும் சொல்லாதது பெரிய கேள்விக்குறி என இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தணிக்கை சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்ற பிறகு வழக்கு திரும்பப் பெறப்பட்டு, மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தற்போது மறுதணிக்கை முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவரும் வேட்பாளருமான விஜய் திரைப்படத்தை வெளியிட அனுமதி உண்டா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “இது முதன்முறை நிகழும் சம்பவம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் தேவையா என இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு பதிலளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், தேர்தல் நேரத்தில் அரசியல் சார்ந்த படங்கள் வெளியாவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்பது திரைத்துறைக்கு சரியா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு,”தேர்தல் ஆணையம் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. அதன் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியது அனைவருக்குமான பொறுப்பு. இதற்கு முன் தேர்தல் நேரத்தில் எந்தப் படமும் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. முதல் முறையாகத் தமிழகத்தில் அப்படியொரு சூழல் நடந்துள்ளது. தவெக தலைவருடைய திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் பிரச்சினைக்கான காரணத்தை தணிக்கைத் துறையும் சொல்லவில்லை, படக்குழுவினரும் சொல்லவில்லை.
‘விஸ்வரூபம்’ படத்தில் சிறுபான்மையினர் மனதைப் பாதிக்கும் காட்சிகள், வசனங்கள் இருந்ததாக எதிர்ப்பு எழுந்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்தில் என்ன இருக்கிறது என யாருக்கும் தெரியாது. அது ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலாக தோன்றுகிறது. ஏனெனில் அது தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட remake படம். அந்தப் படத்தில் என்ன வரம்பு மீறிய காட்சிகள் அல்லது வசனங்கள் இருக்கின்றன என இரு தரப்பும் சொல்லாதது பெரிய கேள்விக்குறி.
தணிக்கைத் துறைக்கு காட்சிகளைக் கட் செய்ய அதிகாரம் இல்லை. அது certificate board தான் – U, U/A, A சான்றிதழ் கொடுக்கும். கட் விவரங்களை அதிகாரப்பூர்வ கடிதத்தில் கொடுப்பதில்லை; வெள்ளைத் தாளில் எழுதிக் கொடுப்பார்கள். தமிழ் சினிமாவில் சிகரெட் காட்சிகளுக்கு subtitle கட்டாயம், ஆனால் ஹிந்தி படங்களில் மது அருந்தும் காட்சிகளுக்கு எதுவும் இல்லை. Central Board என்றாலும் வட இந்தியாவில் ஒரு விதி, தமிழ்நாட்டில் ஒரு விதி. தயாரிப்பாளர் சங்கம் இதை எதிர்த்து கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை. இதில் அரசியல் நடவடிக்கை உள்ளது என எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் ஆணைய விதிகளைத் தவிர்க்க முடியாது.” என்றார்.
‘துரந்தர்’ படத்தில் மோடி பதவியேற்பு, பணம் விநியோகம் போன்ற காட்சிகள் இருந்தும் தேர்தல் நேரத்தில் வெளியானது குறித்த கேள்விக்கு, “2014 முதல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக ஆதரவு படங்கள் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ முதல் ‘கேரளா ஸ்டோரி’ வரை அரசால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தப் படத்தில் அவர்களுக்கு எதிரான காட்சிகள் இருந்திருக்கலாம். அது சார்பு நிலையில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
அந்தப் படத்தில் என்ன பிரச்சினை என்பதைச் சொல்ல மறுப்பது தான் பிரச்சினை. ‘அடிச்சவன் சொல்லமாட்டான்… அடி வாங்குனவன் சொல்லணும்ல’. என்னை இதற்காகத் தான் அடிக்கிறார்கள் என அவர்கள் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். நாம் யூகத்திலேயே பேச முடியாது இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.