தமிழ் சினிமா- சில கோரிக்கைகள்

தமிழ் சினிமா- சில கோரிக்கைகள்

முதல் கோரிக்கை... தமிழகத்தில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹால்சினிமா அருங்காட்சியகமாக மாற்றப்பட வேண்டும்..

தென்னிந்தியாவில் சினிமா எனும் விஞ்ஞான அதிசயத்தை பாமரனுக்கும் கொண்டுசேர்த்து அறிமுகப்படுத்தி இன்று அக்கலை வடிவத்தை கடவுளுக்கு நிகராக ஆக்கியிருக்கும் சாமிக்கண்ணு வின்சென்ட் பெயரில் ஒரு திரைப்பட ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவணக் காப்பகத்தின் செயல்பாடுகள் சில...விக்டோரியா பப்ளிக் ஹால் சினிமா அருங்காட்சியகத்தில் உருவாக்கப் பட வேண்டியவை...

அ.    ஒரு கலை வடிவமாகவும் அதே நேரத்தில் ஒரு தொழிற்துறையாகவும் இருக்கும் சலனத் திரைப்படத்தின் வரலாறு மற்றும் வளர் நிலைகளைத் தொகுக்கப்பட வேண்டும்.

ஆ.    தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய முழுமையான புள்ளிவிவரங்களை வரிசைப்படியும் வகைப்பாட்டின் அடிப்படையிலும் ஆவணப்படுத்த வேண்டும்.

இ.    தமிழ்த்திரைப்பட வரலாற்றின் தடயங்களைத் தேடிக் கண்டடைந்து ஒழுங்கமைத்து, பாதுகாக்க வேண்டும்.

ஈ.    தமிழ்த் திரைப்படங்கள் மீதான ஆய்வுகளை ஒழுங்கமைத்து, ஊக்கப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் வேண்டும்.

உ.    தமிழ்த் திரைப்படங்களின் இயக்குநர்கள், மற்றும் தொழிற்நுட்பக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒலி-ஒளி ஆவணங்களாக உருவாக்கி பாதுகாக்க வேண்டும்.

ஊ.    புகைப்படங்கள், திரைப்படத்தின் நெகட்டிவ்கள், பிரிண்டுகள், பாட்டுப்புத்தகங்கள், படத்தின் முழுக் கதைக்கான திரைக்கதை எழுத்துகள், அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு டிஜிட்டல் முறையில்தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட வேண்டும்

எ.    சினிமா நூலகம் அமைத்து தமிழ் மற்றும் உலக திரைப்படம் தொடர்பான நூல்கள் அனைத்தும் சேர்க்கப்பட வேண்டும்

ஏ.    ஆராய்ச்சி மாணவர்கள் விரும்பும் படத்தைப் பார்ப்பதற்கு சிறிய காட்சிக்கூடம் கொண்டிருக்க வேண்டும்.

ஒ.    மக்கள் விரும்பும் படங்களைப் பார்ப்பதற்குசிறிய திரை அரங்குகள் உருவாக்கப் படவேண்டும்.

ஓ.    பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற தனிப்பட்ட ஆவண சேகரிப்பாளர்களின் சேகரிப்புகள் அவர்கள் பெயரிலேயே காட்சிப்படுத்தப் பட வேண்டும்.

தமிழ்த்திரைப்படங்களையும் அதன் துணை நிலைகளையும் ஆவணமாக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. 'காளிதாஸ்' தொடங்கி இன்றுவரை வெளியான 5000க்கும் மேற்பட்ட படங்களில் 99.9 சதவிகித படங்களுக்கு மறுவெளியீடு என்பதே கிடையாது.  மறு வெளியீடுகளில் வரும் ஒரு சில படங்கள் கூட சில நட்சத்திரப் படங்களாகவே குறுகி நிற்கின்றன. எனவே ஆவணக்காப்பகம் என்பது போர்க்கால நடவடிக்கையாக உடனே தொடங்கப் பட வேண்டும்.

மேலும்...

1.    தமிழக அமைச்சரவையில் கலை, இலக்கியம், நாடகம், சினிமாவுக்கென்று தனி அமைச்சரவை. பண்பாட்டு அமைச்சர் என்று ஒருவர் உருவாக்கப் பட வேண்டும்.

2 .    தமிழக அரசின் கீழ் சினிமாவுக்கென்று சுயேச்சையாக, தன்னாட்சி அதிகாரத்துடன்சினிமா அகாடெமி சினிமா விற்பன்னர்களால் உருவாக்கப்பட வேண்டும். திரைப்படத் துறைக்கும், அரசுக்கும் இது இணைப்புப் பாலமாக விளங்க வேண்டும்.

3.    அரசு விருதுகள், திரைப்பட விழாக்கள், சிறு திரைப்படங்களுக்கான மானியங்கள் இந்த சினிமா அகாடெமியின் கீழ் வர வேண்டும். குறும்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப்படங்களுக்கு விருதுகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

4.    அரசு திரைப்பட விருதுகள் அந்தந்த வருடத்திலேயே வழங்கப்பட வேண்டும் நடுவர்கள் சினிமா அகாடெமியின் திரைப்பட வல்லுநர்களாக இருக்கவேண்டும்.

5.    ஒவ்வொரு வருடமும் அரசால் திரைப்பட விழாக்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்பட வேண்டும்.

6.    அனைத்து மாவட்டங்களிலும் பெரிய ஊர்களில் சிறிய திரையரங்குகள் கட்டப்பட வேண்டும். 325 ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு சார்பில் 200 பேர் அமரக்கூடிய திரையரங்கைக் கட்டலாம். சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவதற்கும், திரைப்படச் சங்கச் செயல்பாடுகளுக்கும் இவை பயன் படுத்தப் படவேண்டும்.

7.    சிறிய பட்ஜெட் படங்களுக்கான மானியம், வெறும் பணத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல்... புதிய வடிவம் மாற்றுச் சினிமாக்களுக்கு ஒதுக்கப் பட வேண்டும்.

8.    அகாடெமியின் கீழ், அரசு திரைப்பட ஆவணக் காப்பகம் உருவாக்கப்படவேண்டும்.

9.    திரைப்படக் கலை, குறிப்பாக உயர் நிலைப்-பள்ளிகளிலேயே கட்டாயப் பாடத் திட்டமாக கொண்டு வரப் படவேண்டும்.

10.    பள்ளிக்கூடங்களில் திரையிடுவதற்-கென்றே தமிழில் குறைந்த முதலீட்டில் திரைப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

11.    குழந்தைகளுக்கான திரைப்படச் சங்கங்களும், குழந்தைகள் படம் உருவாக்குவதற்காக தனி வாரியமும் உருவாக்கப்பட வேண்டும்.

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com