நீங்கள் ரஷ்யாவை தொட்டுவிடும் தூரத்தில் ஏவுகணைகளை நிறுத்தலாம். நாங்கல் நிறுத்தினால் தப்பா?

நீங்கள் ரஷ்யாவை தொட்டுவிடும் தூரத்தில் ஏவுகணைகளை நிறுத்தலாம். நாங்கல் நிறுத்தினால் தப்பா?

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நன்றாக பயிற்சி பெற்ற ரகசிய உளவாளிகள் பல சாகசங்கள் புரிந்து நாட்டைக் காப்பாற்றுவதைப்  பார்த்திருக்கிறோம். ஆனால் உளவாளிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள், அவர்களை எப்படி அரசுகள் தேர்ந்தெடுக்கின்றன என்பவற்றை சொல்லும் இரு படங்களை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.  தி கொரியர் (The Courier-2020), தி கேட்சர் வாஸ் எ ஸ்பை (The Catcher was a spy-2018) ஆகிய இரண்டு திரைப்படங்கள் தாம் அவை. இரண்டுமே உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதன் நாயகர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால் அசாதாரண செயல்களின் மூலமாக பெரிய அழிவைத் தடுத்தவர்கள்.

தி கொரியர் திரைப்படம் 1960 களில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்குமான பனிப்போரை பின்னணியாகக் கொண்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் வைன், தன்னுடைய வியாபாரம் தொடர்பாக பல நாடுகளுக்கு செல்பவர். அவரை தொடர்பு கொள்கிறது இங்கிலாந்தின் ரகசிய உளவுப்பிரிவான எம்ஐ6. ரஷ்யாவில் மாஸ்கோவிற்கு வியாபார நிமித்தமாக செல்வது போல சென்று அங்கிருந்து பென்கோவிஸ்கி என்னும் உளவாளி கொடுக்கும் தகவல்களை கொண்டு வந்து எம்ஐ6 இடம் சேர்க்க வேண்டும். கேட்பதற்கு படத்தின் தலைப்பைப் போலவே கொரியர் சேர்க்கும் வேலைதானே என்று தோன்றினாலும் விஷயம் அவ்வளவு எளிதானதில்லை. குடும்பத்திடம் கூட உண்மையை சொல்ல முடியாது, ரஷ்ய அரசாங்கத்திடம் மாட்டினால் மரணம்தான்.

முதலில் மறுக்கும் வைனை தொடர்ந்து பேசி சம்மதிக்க வைக்கிறார்கள். மாஸ்கோவிற்கு வியாபார விஷயமாக செல்வது போல சென்று அங்கிருந்து பென்கோவிஸ்கி மூலமாக தகவல்களை எம்ஐ6 க்கு சேர்க்கிறார் அவர். அந்த தகவல்களின் மூலமாக கியூபாவில் ஏவுகணைகளை நிறுத்தி அமெரிக்காவை தாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது தெரிய வருகிறது. ரஷ்ய உளவாளி மூலமாக தகவல்கள் கசிவதை ரஷ்யா தெரிந்து கொள்கிறது. ரஷ்யா கண்காணிப்பை இறுக்க, பென்கோவிஸ்கியின் நிலை சிக்கலாகிறது.வைனின் மனைவி அவருடைய நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு சந்தேகிக்கிறார். அவரிடம் கூட உண்மையைச் சொல்ல முடிவதில்லை.

உங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று எம்ஐ6 சொல்ல, பென்கோவிஸ்கி என்னவானார் என்கிறார் வைன். அவரைக் காப்பாற்ற கடைசிமுறையாக ரஷ்யா செல்லும் வைனும் மாட்டிக் கொள்கிறார். தான் கொண்டு சென்ற தபால்களில் என்ன இருந்தது என்றே தனக்குத் தெரியாது என்று சாதிக்கிறார். கடைசிவரை தானொரு உளவாளி என்பதை ரஷ்யாவிடம் சொல்லாத வைன் சில ஆண்டுகளுக்குப் பிறகு கைதிகள் பரிமாற்றத்தில் விடுதலை ஆகிறார். ஆனால் பென்கோவிஸ்கியை ரஷ்ய அரசாங்கம் கொன்றுவிடுகிறது. சிறைக்குள் பென்கோவிஸ்கியுடனான கடைசி சந்திப்பில் உங்கள் தியாகத்தால் பெரும் அழிவு தடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி அவரது செயலுக்கு பலன்  கிடைத்திருக்கிறது என்று உணர்த்துகிறார் வைன்.

இத்தாலி, துருக்கியில் ஏவுகணைகளை நிறுத்தி அமெரிக்க அரசாங்கம் ரஷ்யாவை பயமுறுத்துகிறது. ‘நீங்கள் ரஷ்யாவை தொட்டுவிடும் தூரத்தில் ஏவுகணைகளை நிறுத்தலாம், நாங்கள் கியூபாவில் நிறுத்தினால் மட்டும் தப்பா?' என்று கேட்கும் ரஷ்ய அதிகாரியின் கேள்விகளுக்குத்தான் யாரிடத்திலும் பதிலில்லை.

இந்த பிரச்னைக்குப் பிறகு நேரடியாக வெள்ளை மாளிகைக்கும் மாஸ்கோவிற்குமிடையே தொலைபேசிதொடர்பு உருவாக்கப்பட்டு இதற்குப் பிறகான ஆபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.

The Catcher was a spy திரைப்படத்தில் மோ பெர்க் என்னும் அமெரிக்க பேஸ் பால் விளையாட்டு வீரர் ராணுவத்தில் உளவாளியாகச் சேர்கிறார். அவர் உளவாளியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதே ஒரு சுவாரஸ்யமான விஷயத்தால் தான். ஜப்பானுக்கு பேஸ் பால் விளையாடச் செல்லும் மோ அங்கு தங்கியிருக்கும் உயரமான அறையிலிருந்து ஜப்பான துறைமுகத்தை படமெடுத்து வருகிறார். அவரின் இந்த செயலையும், பல மொழி பேசும் திறமையையும் கண்டு ராணுவத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், அங்கு களத்திற்கு அனுப்பாமல், அலுவலக வேலையில் அமர்த்த, தன்னால் உட்கார்ந்து பெஞ்ச் தேய்க்க முடியாது என்கிறார் மோ. அவர் விரும்பியது போல உளவாளியாக அவரை சுவிட்சர்லாந்திற்கு அனுப்புகிறது அமெரிக்க ராணுவம்.

1936இல் இரண்டாம் உலகப்போர் உருவாகும் சமயத்தில் ஜெர்மனியின் ஹிட்லர் அரசாங்கம் அணு ஆயுதத்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் இருப்பதாக செய்தி வருகிறது. ஜெர்மனி அணு ஆயுதத்தை உபயோகித்தால் அதனுடைய அழிவு பெரிதாக இருக்கும். இதற்கான பணியில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெர்னர் ஹெய்ஸ்சன்பெர்க் இருப்பதாகவும் தகவல் வருகிறது. அவரை கொலை செய்வதனால் இந்த ஆராய்ச்சியை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறது அமெரிக்கா. ஹெய்ஸ்சன்பெர்க் அப்படியான முயற்சியில் இருந்தால் அவரைக் கொன்று விடும்படி மோ பெர்க்கை அனுப்புகிறது அமெரிக்கா.

இத்தாலி சென்று அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்கிறார். ஹெய்சன்பெர்க்கை சந்திப்பதற்காக தன்னுடைய தொடர்புகளின் மூலமாக முயற்சிகளை மேற்கொள்கிறார். ஒருவழியாக அவருடைய செமினார் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஹெய்சன்பெர்க்கும் இவருடைய நோக்கத்தை அறிந்து கொள்கிறார். இறுதியில் ஹெய்சன்பெர்க் ஜெர்மனிக்கு அம்மாதிரியான எந்த உதவியையும் செய்வதில்லை. மோ பெர்க்கும் அவரைக் கொல்லாமல் திரும்பி விடுகிறார்.

வழக்கமான சண்டை, பரபரப்பான சேஸிங் என்றில்லாமல் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்த உளவாளிகளைப் பற்றிய இந்த இரண்டு திரைப்படங்களும் உளவாளிகளைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றிவிடுகிறது. ராணுவ வீரர்களுக்காவது போரில் இறந்தால் வீர மரணம் என்ற பெயர் கிடைக்கும். ஆனால் உளவாளிகள் மாட்டிக் கொண்டால் எந்த அரசாங்கமும் தாங்கள் உளவு பார்க்க அவரை அனுப்பியதாக ஒப்புக் கொள்ளாது. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி உளவாளிகளாக செயல்பட்டவர்களால் சில பெரிய போர்களும், உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருப்பதை சிறப்பாக பதிவு செய்திருக்கின்றன இவ்விரு படங்களும்.

அக்டோபர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com