பீனிக்ஸ் பறவை!

பீனிக்ஸ் பறவை!

இணையத்தில் என்ன பார்க்கலாம்?

மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன், இந்நிலையில் கிரிக்கெட் விளையாட முடியாது,' இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் 2021 இல் அறிவித்த போது கிரிக்கெட் உலகமே அதிர்ந்துதான் போனது. நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர் திடீரென்று மன நலனை காரணம்

சொல்லி விளையாட்டிலிருந்தே விலகுவதாக அறிவித்தால் எப்படி இருக்கும்? ஸ்டோக்ஸ் அந்த முடிவுக்கு வரக் காரணமானது எது என்ற கேள்வியை முன் வைத்து தொடங்குகிறது அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கும் பென் ஸ்டோக்ஸ் ஆவணப்படம்.

முதல் பிரச்னை 2017 இல் பிரிஸ்டலில் தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான ஒருநாள் தொடர் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் இரவு கேசினோவிலிருந்து திரும்பும் போது கைது செய்யப்படுகிறார் ஸ்டோக்ஸ். 2011இல் இங்கிலாந்து அணிக்காக விளையாடத் தொடங்கியவுடன் ஸ்டோக்ஸின் திறமை அனைவருக்கும் தெரிந்து விட்டது. சில சமயங்களில் தனி ஆளாக தன்னுடைய அணியை கரை சேர்த்திருக்கிறார். புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் என்ற ஒன்றே ஊடகங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பெரும்பாலான ஊடகங்கள் விவாதிக்கவே இல்லை. நள்ளிரவு பப்பிலிருந்து வெளிவரும் ஸ்டோக்ஸும் அவரது நண்பர்களும்

சாலையில் ஓரினச் சேர்க்கையாளர் இருவரை இரண்டு பேர் கேலி செய்வதைப் பார்க்கிறார்கள். கேலி எல்லை மீறி அவர்கள் துன்புறுத்தப்படும்போது ஸ்டோக்ஸ் உள்ளே நுழைந்து அவர்களை காப்பாற்றப் பார்க்கிறார். ஸ்டோக்ஸின் நண்பர்களை அவர்கள் தாக்க முனையும்போது நிலைமை கைமீறி போய்விடுகிறது. ஸ்டோக்ஸ் தாக்கியதில் ஒருவர் சாலையில் இரத்தம் வழிய விழுந்து கிடக்கிறார். இந்த சம்பவத்தின் பின்னணியை ஆராயாமல் மது பான விடுதிக்கு வெளியே ஸ்டோக்ஸ் குடித்துவிட்டு ரகளை என்ற பாணியில் பரபரப்பான செய்தியை வெளியிடுகின்றன ஊடகங்கள். பாதிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் ஊடகத்தை சந்தித்து தங்களை காப்பாற்றப் போய்தான் ஸ்டோக்ஸ் பிரச்னையில் சிக்கிக்கொண்டார் என்று பேசியும்,பயனில்லை.

இந்த சமயத்தில் கருத்து தெரிவித்த சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஸ்டோக்ஸை கடுமையாக விமர்சித்தனர். இது தான் அவரை அதிகம் பாதித்திருக்கிறது. நியாயத்தின் பக்கம் நின்றதற்காக ஏன் இத்தனை வெறுப்பு? தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அள்ளி தெளித்தவர்களை அவரால் மன்னிக்கவும் மறக்கவும் முடியவில்லை. அவர் மனம் கொந்தளிக்கிறது. சில மாதங்களில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு பிரச்னைகளிலிருந்து வெளிவருகிறார்.

ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு ஆடினாலும் அவரது பெற்றோர் நியூசிலாந்தில் வசிப்பவர்கள். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை இங்கிலாந்து போராடி சூப்பர் ஓவர் வரை

சென்று வென்றதற்கு ஸ்டோக்ஸ் முக்கிய காரணம். அந்த சமயத்தில் அவரது அப்பா ‘ நியூசிலாந்தில் தற்போது மிகவும் வெறுக்கப்படும் நபராக நான் தான் இருப்பேன்' என்று விளையாட்டாக சொல்லி இருப்பார். அந்த சமயத்தில் அவருடைய உடல் நிலையும் மிகவும் மோசமாகியிருந்தது. கொரோனா பிரச்னையில் உலகமே சிக்கித் தவிக்கையில் ஸ்டோக்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன? அதுவும் சிறப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்த விளையாட்டு வீரர்களால் அருகிலிருந்த குடும்பத்தைக்கூட சந்திக்க முடியாமலிருந்த சமயம் அது. தன்னுடைய வாழ்க்கைக்கு எல்லாமுமாக இருந்த அப்பா உடல் நிலை மோசமடையும்போது தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை, குறைந்தபட்சம் உடனிருக்கக்கூட இயலவில்லை என்ற சுய கழிவிரக்கம் அவரை மிகவும் பாதிக்கிறது. 2020&இல் ஸ்டோக்ஸின் அப்பா இறந்தும் விடுகிறார்.

இதற்கு முன்பாகவே மற்றொரு முக்கியமான பிரச்னையில் ஸ்டோக்ஸ் குடும்பம் சிக்கித் தவித்திருக்கிறது. உலக கோப்பை வென்று புகழின் உச்சத்தில் இருந்த போது பிரபலமான நாளிதழ் ஒன்று அந்த செய்தியை விரிவாக வெளியிடுகிறது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான சம்பவம் அது. ஸ்டோக்ஸின் அம்மாவின் முதல் கணவர் தற்கொலை செய்துகொண்டார். அதுவும் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு.  அதன் பிறகுதான் சில ஆண்டுகளில் அவர் ஜெட் ஸ்டோக்ஸை, மறுமணம் செய்து கொள்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த பழைய கதை மிக முக்கியமாக அலசப்படுவதற்கு காரணம், ஸ்டோக்ஸ் பிரபலமானவர் என்பதுதான். இதை ஜீரணிக்க மொத்த குடும்பமே மிகவும் சிரமப்படுகிறது. நடந்த விஷயம் தானே என்று அந்த நாளிதழ் சப்பைகட்டு கட்டினாலும் அதனால் ஏற்படும் மன உளைச்சலை அவர்கள் பார்க்க விரும்புவதில்லை.

2016 கொல்கத்தாவில் நடந்த உலக டி20 இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்திய அணிக்கு 19 ரன்கள் தேவை. கடைசி ஓவரை வீச வருகிறார் ஸ்டோக்ஸ். ஏற்கெனவே பல முறை இக்கட்டான நிலையில் அணியைக் காப்பாற்றியவர் என்ற முறையில் அனைவரும் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று நினைக்கையில் வரிசையாக நான்கு சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை முடிக்கிறார் மேற்கிந்திய தீவு அணியின் பிராத்வெய்ட். கிரிக்கெட் வாழ்க்கையில் இம்மாதிரியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து அதை அனுபவமாகக் கொண்டு மீண்டெழுந்து வந்திருக்கிறார் ஸ்டோக்ஸ்.

ஆனால் அப்பாவின் இழப்பு, ஊடகங்களின் கருணையற்ற நடவடிக்கைகள், விரலில் ஏற்பட்ட காயம், பிரிஸ்டல் சம்பவத்தில் சக கிரிக்கெட் வீரர்கள் சிலரின் வார்த்தைகள், பயோ பபுள் என்று தனிமைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கை என்று மன அழுத்தம் ஏறிக் கொண்டே போனதில் ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், தாற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக 2021 இல் அறிவித்தார்.

இதன்பிறகு மன நல மருத்துவர்களில் ஆலோசனையுடன் பிரச்னையை தள்ளியிருந்து சில காலம் பார்த்து மீண்டு வந்திருக்கிறார் ஸ்டோக்ஸ். 2022 இல் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாகியிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையை சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையோடு ஒப்பிடும் ஸ்டோக்ஸ், விழும்போதெல்லாம் முன்பைவிட வீரியமாக திரும்பி எழுந்து வந்து அதை உண்மை என நிரூபிக்கிறார்.

ஜோ ரூட், பிராட், ஆர்ச்சர் என்று அவருடைய சக வீரர்கள் மட்டுமல்லாது ராஜஸ்தான் ராயல்ஸின் முன்னாள் பயிற்சியாளர் ஷேன் வார்னும் இந்த ஆவணப்படத்தில் பங்கு பெற்றிருப்பது சிறப்பு.

பிரபலமானவர்கள் அந்த புகழுக்காக அளிக்கும் விலை மிகப்பெரியது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

அக்டோபர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com