டெவில் இசை வெளியீட்டில் இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன்
டெவில் இசை வெளியீட்டில் இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன்

மிஷ்கின் பற்றி இளையராஜா சொன்னது என்ன? – டெவில் இசை வெளியீட்டில் இயக்குநர் பாலா!

ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெவில். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், மிஷ்கின் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

டெவில் படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான். ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்றால், அது இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஒரு பாமரனாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும் பின்னணி இசையும் எனக்குப் பிடித்திருக்கிறது.”எனக் கூறி, படம் மாபெரும் வெற்றியை அடைய வாழ்த்தினார்.

தேவிபாரதி எழுதிய ’ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்’ என்கிற சிறுகதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கதிர் பேசும்போது, “உண்மையாகவே மிஷ்கின் ஒரு டெவில்தான். ஏனென்றால், என்னிடம் பணியாற்றும்போது பேய்த்தனமாக, அசுரத்தனமாக வேலைசெய்வான். எல்லா உதவி இயக்குநர்களும் தூங்கிவிடுவார்கள். மிஷ்கினும் வெற்றிமாறனும் மட்டும் பேசிக்கொண்டே இருப்பார்கள். கேசுவல் அஃபையர் Casual Affair புத்தகத்தைப் பற்றி விடியவிடிய பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அதை மிஷ்கின் குறைந்தது 25 முறையாவது படித்திருப்பான். அவனுக்கு இப்போது இசைப் பைத்தியம் பிடித்திருக்கிறது.” என்றதுடன், ”இசையமைப்பாளராகவும் மிஷ்கின் வெற்றிபெறுவான் என்று நம்புகிறேன்.” என்றும் கூறினார்.

இயக்குநர் வின்செண்ட் செல்வா பேசுகையில், “யூத் படப்பிடிப்பில் இருக்கும்போது மிஷ்கின் என்னைச் சந்தித்தார். அப்போது அவர் ஒரு கேசட்டைக் கொடுத்தார். என்னவென்று கேட்டதற்கு என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் என்றார். அந்த கேசட்டில் 15 டியூன்கள் இருந்தன. அதைக் கேட்கும்போது ராஜா சாரின் டியூன்கள் போலவே இருந்தது. இன்று டெவில் இசை வெளியீட்டில் கேட்ட பாடல்களும் இளையராஜா சாரின் பாடல்கள் போல்தான் இருக்கிறது. மிஷ்கின் இளையராஜாவின் தீவிரமான ரசிகர். இசை குறித்த நல்ல ஞானம் மிஷ்கினுக்கு உண்டு. எந்த இடத்தில் இசை வரக்கூடாது என்பது எடிட்டர் லெனினுக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு அடுத்து அதைச் சரியாகப் புரிந்துவைத்திருப்பது மிஷ்கின்தான்.” என்று பாராட்டினார்.

இயக்குநர் பாலா பேச்சு கூடுதல் கவனத்தைப் பெற்றது.

“நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவுக்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்போது மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ், அதற்கு சம்பந்தமே இல்லாத ஷூ, டீ-சர்ட் போட்டுக் கொண்டு துருதுருவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர். அவர் போனதும், நான் இளையராஜாவிடம் ”யார் அது…? ஷார்ட்ஸ் ஷூவைப் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலைவது” என்று கேட்டேன். அதற்கு இளையராஜா, ’அவன்தான் மிஷ்கின். அவனை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே; அவன் மிகப்பெரிய அறிவாளி.’ என்று கூறினார். அவர் எந்தக் கோணத்தில் அப்படிக் கூறினார் என்று தெரியாது. ஆனால் உண்மையாகவே மிஷ்கின் அறிவாளிதான். அவனைப் பார்க்கும் போது ஒரு டெவில் போலத்தான் இருக்கிறான். நான் என்னுடைய போனில் அவன் நம்பரைக்கூட (ஓநாய்)Wolf என்றுதான் பதிவுசெய்து வைத்திருக்கிறேன். வணங்கான் படத்தில் உதவி இயக்குநராக இல்லை, இயக்குநராகவே நடித்துள்ளான். அவன் நடிக்கின்ற காட்சியை அவனையே இயக்கச் சொல்லிவிட்டேன். இயக்கி முடித்ததும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். அது வித்தியாசமான முறையில் சிறப்பாக வந்திருந்தது. உண்மையாகவே மிஷ்கினுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை.” என்று அதிகமாகவே புகழ்ந்தார், பாலா.

மிஷ்கினின் முன்னாள் சகா வெற்றிமாறனின் பேச்சும் இப்படியே அமைந்தது.

“மிஷ்கின் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். அவரோட பெரும்பாலான திரைப்படங்கள், மனிதர்களின் இருண்மை சூழ்ந்த மனதிற்குள் ஆழ்ந்து சென்று அதில் ஒளியைத் தேடுவதற்கான பயணமாகத்தான் இருக்கும். அதைப் போலத்தான் அவரின் இசையும் இருக்கிறது. “Journey into the darkness in the search of light” என்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. இசையமைப்பாளரும் இசைக் கலைஞர்களும் ஒரு மேடையின் மையத்தில் நின்று நடத்தப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு இதுவாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த ஆடியோ வெளியீடு சிறப்பு வாய்ந்தது. மிஷ்கின் பாடல்கள் பாடி அவை எந்த அளவிற்கு வைரல் ஆகியிருக்கிறது என்பதை நாம் அனைவருமே பார்த்திருக்கிறோம். அவருக்கு இசை மீது இருக்கும் ஆர்வம் எல்லோருக்கும் தெரியும். வின்செண்ட் செல்வா கூறியதைப்போல, விஜய்யின் யூத் படப் பின்னணி இசையில்கூட அவர் உதவி புரிந்திருக்கிறார். இவ்வளவு காலத்திற்குப் பிறகு இசையை முழுமையாகக் கற்றுக்கொண்டு அதை மேடையில் அரங்கேற்றுவதற்கு ஒரு தைரியம், நம்பிக்கை, ஈடுபாடு தேவை. இந்த மூன்றுமே மிஷ்கினுக்கு இருக்கிறது. இதனால்தான் அவர் இதைச் சாதித்து இருக்கிறார். இந்த இசைப் பயணத்திலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்று முடித்தார், வெற்றிமாறன்.

அடுத்தடுத்து பேசியவர்களும் மிஷ்கினைப் புகழ்ந்தனர்.

இயக்குநர் அருண் மாதேஷ்வரன்: “மிஷ்கினின் திரைப்படங்களில் வரும் பின்னணி இசை எந்தவிதச் சாயலும் இன்றி, புதுமையான அனுபவமாக இருக்கும். அப்படித்தான் அவர் இப்போது இசை அமைத்திருப்பதும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஒரு தனித்துவம் இதில் தெரிகிறது.”

நடிகர் விதார்த்: “முதலில் மிஷ்கின் சார் படத்தில்தான் நடிக்க அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அங்கு போன பிறகுதான் இயக்குநர் ஆதித்யா என்பதே தெரிந்தது. இப்படத்தில் நடித்து முடித்த பிறகுதான் இப்படம் என் வாழ்நாளில் ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதை உணரமுடிகிறது. ஆதித்யா உண்மையாகவே அருமையான இயக்குநர் என்பதைவிட மிகச்சிறந்த நடிகரும்கூட. என்னிடம் பிரமாதமாக நடித்துக் காட்டியிருக்கிறார். மிஷ்கின் சாரின் இயக்கத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், அவரது இசையில் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.”

நடிகர் வசந்த் ரவி: “நான் இங்கு வந்திருப்பதுக்கு ஒரே ஒரு காரணம்தான். அது மிஷ்கின் சார் மீது எனக்கு இருக்கும் அன்புதான். அவர் எப்போதுமே மனதிலிருந்து பேசுவார். உண்மையாக என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே பேசுவார். இந்த நட்பு, தரமணி படத்தின் படப்பிடிப்பின்போது துவங்கியது. ராக்கி படத்தில் அவரோடு இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. கடைசி நிமிடத்தில் அது நடக்கவில்லை. கூடிய விரைவில் இருவரும் சேர்ந்து நடிப்போம் என்று நம்புகிறேன்.”

இயக்குநர் ஆதித்யா: “இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு ஒரு இக்கட்டான தருணத்தில் நான் இருந்தபோது, சேகர் மூலமாக தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்னை அணுகி இரண்டு இலட்சம் ரூபாய்கான செக்கை வழங்கினார். படப்பிடிப்புக்கான பணிகளைத் துவங்கினோம். நான் முதலில் எழுதிய கதையை இயக்குநர் மிஷ்கினிடம் கொடுத்தேன். அவர் இந்தக் கதை நல்ல கதைதான். ஆனால், முதலில் நீ “அன்னாகரீனா”வைப் படி என்று கொடுத்தார். அது கிட்டத்தட்ட 600 பக்கம் இருக்கும். பின்னர் தேவி பாரதி எழுதிய சிறுகதையை வாசித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. பின்னர் படத்திற்குள் பூர்ணா, விதார்த், அருண் என ஒவ்வொருவராக வந்தார்கள்.”

விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசிய மிஷ்கின், “எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான், “டெவில்” படத்தின் கதையும் அதேதான். அமைதியான ஒரு வீட்டுக்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும். மீண்டும் அது புத்துயிர்பெற்று துளிர்க்கும். அன்னா கரீனா தொடங்கி எல்லாவற்றிலும் கதை இதுதான். நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல; ஆனால் பைபிளை பல முறை படித்திருக்கிறேன். இப்போதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப்போல உணர்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன்தான். இப்படத்தில் சில பாடல்களை முயற்சி செய்திருக்கிறேன்.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com