சென்னையில் உள்ள அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய வீடு. மாடுலர் கிச்சனில் துடைத்து வைத்தாற்போன்ற சுத்தம். குடிக்கும் தண்ணீர் மண் குடத்தில் இருக்கிறது. டேபிளில் இருக்கும் தண்ணீர் கூட கண்ணாடி பாட்டிலில் இருக்கிறது. சமைத்து முடித்ததும் கையோடு அந்த இடம் சுத்தமாகிவிடுகிறது. சுத்தம் சோறு போடும் என்பதை அனிதாவின் வீட்டைப் பார்த்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
இமேஜ் கன்சல்டண்ட் ஆக இருக்கும் அனிதா ஒரு இண்டீரியர் டிசைனரும் கூட. அவரது வீடு அவரது கைவண்ணத்தில் கலக்கலாக இருக்கிறது. சூரியன் வந்து ஓய்வெடுத்துச் செல்கிறதோ என்பதுபோல நாலா பக்கமும் வெளிச்சமும் காற்றும் வந்துபோகிறது. எப்பதான் சமைக்கக் கத்துக்கிட்டீங்க என்றதும் அடுப்பில் சாதத்தை வைத்தவாறே பேச ஆரம்பித்தார்.
“எனக்கு காலேஜ் படிச்சு முடிச்சதும் கல்யாணம் ஆகிடுச்சு. சமையல்ல எனக்கு ஒண்ணுமே தெரியாது. கல்யாணத்துக்கு முன்னால வீட்டுல சமையல் எல்லாமே எங்க அம்மாதான். வேலைக்கு ஆள் வராதப்போ நானும் அம்மாவும் வேலையை பகிர்ந்துக்குவோம். அப்போ கூட வீட்டை சுத்தப்படுத்துற வேலையை நானும், சமைக்கிற வேலைய அம்மாவும் எடுத்துப்போம்.
கல்யாணமாகி தனியா வந்தபிறகு முதன் முதல்ல நான் சமைக்கக் கத்துக்கிட்டது ரசம்தான். கல்யாணமானதும் பொண்ணு மாப்பிள்ளைக்கு விருந்து வைப்பாங்க. ஆனா எங்க வீட்டுக்கு எல்லாரும் விருந்துக்கு வந்தாங்க. அதனால நானும் சமைக்க வேண்டியதாகிடுச்சு. சீரகம் எப்படி இருக்கும்? எண்ணெய் ஊத்தி கடுகுக்குப் பிறகு என்ன போடணும்னு ஒவ்வொண்ணா அம்மாகிட்ட போன்ல கேட்டு ரசம் வைச்சேன்.
சீர் கொடுத்த தூக்குவாளி நிறைய ரசம் வைச்சேன். அவ்வளவு பேரு வீட்டுக்கு வந்துட்டு போய்ட்டு இருந்தாங்க. எல்லாரும் நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் ஒவ்வொன்னா அப்பப்போ அம்மாகிட்ட சமையல் டிப்ஸ் கேட்டு செய்வேன். அம்மா சொல்றதயெல்லாம் டைரில எழுதி வைச்சு பாத்து பாத்து செய்வேன். ‘எப்பதான் நீ சமையல் கத்துக்குவ’னு என் வீட்டுக்காரரோட சொந்தமெல்லாம் தினமும் ஒவ்வொருத்தரா வந்துட்டிருந்தாங்க. நாங்க இருந்தா கொஞ்சமா சமைக்கலாம். எல்லாரும் வந்தா அண்டா அண்டாவ சமைக்கனுமே’னு நினைச்சுக்குவேன். ஒரு மாசம் வரைக்கும் விருந்துக்கு வந்துட்டே இருந்தாங்க. அதுக்கப்புறம் ஒரு வருஷம் வரைக்கும் நான் தான் சமையல் பண்ணேன். குழந்தையெல்லாம் பிறந்த பிறகுதான் வேலைக்கு ஆள் வைச்சுக்கிட்டேன்.
நானா செஞ்சது சிம்ப்ளி சிக்கன்தான். என் ஃப்ரண்டஸ் யாராவது வீட்டுக்கு வரும்போது போன் பண்ணி செய்ய சொல்லிடுவாங்க. அவங்க வீட்டுலயும் இந்த சிக்கனை அடிக்கடி செய்வாங்க. இந்த சிக்கனுக்கு அனிதா சிக்கன்னு பேரே வைச்சிருக்காங்கன்னா பாத்துக்கங்களேன்.
எங்க வீட்டுக்காரர் பேர் சுரேஷ். அவருக்கு சிக்கன், பிரியாணியெல்லாம் ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சது சிம்ப்ளி சிக்கன்தான். எங்க வீட்டுக்காரரும் ஈஸியா செஞ்சுடுவார். என் பசங் களும் கூட செய்வாங்க. ரொம்ப டேஸ்டா இருக்கும். எங்களோட ஆல்டைம் ஃபேவரைட் இந்த சிம்பிளி சிக்கன் தான். எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு ஃப்ரண்டோட மீன்கடை இருக்கு. அங்க ஃப்ரஷா பிடிச்ச மீன சமைச்சுத் தருவாங்க. அதனால மீன் சாப்பிடனும்னு நினைச்சாலே அங்க போய் ஒரு கட்டு கட்டிடுவோம்.
எங்க அப்பாவோட தங்கை ரவைல ஒரு இனிப்பு செய்வாங்க. அது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அப்பப்ப செஞ்சு சாப்பிடுவோம். ரொம்ப சிம்பிள் இனிப்பு ரெசிபி அது. அது பேர் கூட தெரியாது. ரவை இனிப்புனு சொல்லிக்குவோம். எங்க அம்மா வீடு பக்கத்துலதான் இருக்கு. அம்மா பிரியாணி சூப்பரா செய்வாங்க. பிரியாணி செய்யும்போது சொல்வாங்க. போய் சாப்பிட்டுட்டு வருவோம். நான் பிரியாணி சாப்பிட்டதும் ஒரு கிலோ வெயிட் ஏறிடுவேன். மறுபடி கார்போஹைட்ரேட் குறைச்சதும் எடை குறைஞ்சுடும்.
அதே மாதிரி தடவை வடையோ, பஜ்ஜியோ செஞ்சா அந்த எண்ணெயை அப்படியே கொட்டிடுவேன். திரும்ப திரும்ப எண்ணைய சூடு பண்ணா உடம்புக்கு கெடுதி. வேலைக்கு வருபவர்களுக்குக் கூட அதைக் கொடுக்க மாட்டேன்’ என்று ஆரோக்கியமும், அக்கறையுமாக அழகாக பேசுகிறார் அனிதா தேவி. அவரது அழகான சமையலறையில் அமர்ந்து, சில சமையல் குறிப்புகளைப் பெற்று விடைபெற்றோம்.
நீங்களும் செய்துபாருங்கள்!
ரவை இனிப்பு : தேவையான பொருட்கள்:
ரவை - ஒரு கப், சர்க்கரை - அரை கப், பால் - ஒரு கப், நெய் - அரை கப், முந்திரி - 20
செய்முறை:
ரவையை வறுத்து பால் சேர்த்து கொதிக்கவிட்டு பின்னர் சர்க்கரையும் நெய்யும் சேர்த்து வெந்ததும் முந்திரி தூவி பரிமாறவும்.
பனீர் பட்டர் மசாலா : தேவையான பொருட்கள்
பனீர் ஒரு பாக்கெட், தக்காளி 2, வெங்காயம் 2, மிளகாய் பொடி தேவையான அளவு, மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்
செய்முறை:
தக்காளி, வெங்காயம் இரண்டையும் தனித்தனியாக வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த வெங்காயம் தக்காளியை வதக்கி பின்னர் உப்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். அதில் பனீரைச் சேர்த்து வெந்ததும் இறக்கவும்.
சிம்ப்ளி சிக்கன் : தேவையான பொருட்கள்
சிக்கன் கால்கிலோ, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் காய்ந்தமிளகாய் சேர்க்கவும். பொரிந்ததும் சிக்கனைச் சேர்த்து அதன் மேல் மஞ்சள் தூள், உப்புத் தூவி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து கிளறிவிட்டு மூடவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரில் சிக்கனை கழுவிச் சேர்ப்பதாலும், மூடி வைத்து வேக வைப்பதாலும், அந்த தண்ணீரே போதுமானது.
ஆகஸ்ட், 2016.