உணவூட்ட நிபுணரான ப்ரியாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். உணவுகள் குறித்து மட்டுமல்ல உணவுக்குப் பின்னிருக்கும் விஷயங்கள் குறித்தும் பேசுகிறார்.
“எனக்கு சென்னைதான் சொந்த ஊரு. இப்ப நான் சீனியர் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியனிஸ்ட் ஆகப் பணிபுரிகிறேன். எங்க வீட்டுல எங்க அம்மா எங்களை வீட்டுல விட்டுட்டு போயிட்டாங்கனா எங்க அண்ணன்தான் ஏதாவது சமைக்கலாம்னு சமைச்சு தருவாங்க. அப்படி சமைக்கும்போது நானும் அண்ணன்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். இப்ப என் அண்ணனுக்கு என்னோட சமையல்தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் சிக்கன் வாங்குனா நான் தான்சமைக்கணும்னு அம்மாகிட்ட சொல்வாங்க. நான் செட்டிநாட்டு சிக்கன் நல்லா சமைப்பேன். அவங்க எல்லார்கிட்டயும் என்னைப் பத்தி பெருமையா சொல்றது சமையல் ஒண்ணுதான்.
அம்மா மாதிரி எனக்கு ரசம் வைக்கத் தெரியாது. கொஞ்சம் மிளகு சீரகம் கூடுனாலும் டேஸ்ட் வராது. அம்மாகிட்ட சொல்லிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாலும் நீ பக்கத்துல இருந்து பாத்து கத்துக்கன்னு சொல்லிடுவாங்க. இதை இவ்வளவு போடணும்னு சொல்லித் தரமாட்டாங்க. எங்க அம்மா ஒருநாள் வைக்கிறமாதிரியே எல்லா நாளும் ரசம் வைப்பாங்க.
எங்க வீட்டுல ஒரு நாளைக்கு ஒரு வேளை சத்துமாவு கஞ்சி குடிக்கிறது கட்டாயம். எல்லா பொருளையும் வாங்கி சுத்தம் பண்ணி காய வைச்சு வறுத்து மிஷின்ல கொடுத்து அரைச்சு வைச்சுடு வாங்க. எது மிஸ் பண்ணாலும் பண்ணுவாங்க. இதை மிஸ் பண்ணமாட்டாங்க.
சத்துமாவு கஞ்சில கால்சியம் உள்ளிட்ட மினரல்ஸ் எல்லாமே இருக்கு. நுண்ணூட்டச்சத்துகள் வைட்டமின்கள் எல்லாமே அதுல இருக்கு. சில பேர் பாலைத் தவிர்ப்பாங்க. அவங்களுக்கு கால்சியம் எல்லாம் வேணும்னா சத்துமாவு குடிக்கிறது நல்லது. அரைச்சு வைச்சம்னா ரெண்டுமாசம் வரைக்கும் வரும். இப்பல்லாம் பலருக்கு இப்படி எல்லாம் செஞ்சு கொடுக்க நேரமிருக்காது. ஏனா நிறைய பேர் வேலைக்குப் போறாங்க. அதுவும் நைட் ஷிப்ட் வேலையில இருக்கிறவங்களால சமைக்க கூட முடியுறதில்லை. அதனால அம்மாக்களும் பாவம்தான்.
நான் காலேஜ் போற டைம்ல முதன்முதல்ல மைக்ரோவேவ் அவன் வாங்குனதும் அதுல சத்துமாவு குக்கீஸ் செஞ்சு பாத்தேன். அந்த மாவோட நெய், நட்ஸ் சேர்த்து பிஸ்கட் செஞ்சு பாத்தேன் வந்துடுச்சு. அதுக்கப்புறம் செய்யவே இல்லை. நான் தினமும் தவறாம சேத்துக்கணும்னு நினைக்கிறது புரதம் தான். அது பருப்புவகைகள் அல்லது ஒரு முட்டையா இருக்கும். கண்டிப்பா காலையில அல்லது நைட்ல
சாப்பிட்டுடுவேன். இதை மறக்கவே மாட்டேன்.
பெரும்பாலும் காலையில எடுத்துக்கிற உணவை நல்லாவே எடுத்துக்கலாம். அடுத்தடுத்து செய்ற வேலைகள்ல அது செலவாகிடும். இதுவே நைட்ல தூங்கும்போது அளவு குறைவா எளிமையா செரிக்கிற உணவுகளா எடுத்துக்கணும். இல்லைனா தூக்கம் தொந்தரவுக்குள்ளாகும். தூக்கம் ஒழுங்கா இல்லைனாலே மறுநாள் ஒழுங்கா வேலை செய்ய முடியாது. இரவு 10 முதல் காலை ஆறுமணி வரை தூக்கம் இருக்கணும். அது சரியில்லைனாலே மறுநாள் எரிச்சல், கோபம் இதெல்லாம் வர ஆரம்பிக்கும். காலையில இருந்து வேலை பாத்துட்டு இருக்குற உடலுக்கும் மனசுக்கும் ஓய்வு கொடுக்கணும். உடம்பும் மனசும் புதுப்பிக்கப்பட்டாதான் எல்லாமே ஒழுங்கா இருக்கு. அதுக்கு நாம சாப்பிடுற உணவுகளும் முக்கியமான காரணம்ங்றதை மறக்க முடியாது. நைட் பிரியாணி சாப்பிடுறவங்களுக்கு நெஞ்செரிச்சல் எல்லாம் இருக்கு.
நமக்கு கிடைக்குற பருவகாலப் பழங்களைச் சாப்பிட்டாலே போதும். நமக்கு நல்ல ஊட்டச் சத்துக்களைத் தரும். சீசன் அல்லாத காலத்தில் விளையும் பழங்களை குளிர்காலத்தில் வளர்க்கும்போதும், அதை சாப்பிடும்போதும் அதே ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பது சந்தேகமே. ஏனெனில் அந்த தட்பவெப்பநிலை, மண்ணின் ஊட்டச்சத்து, நீர்வரத்து எல்லாம் சேர்த்துதான் ஒரு விளைபொருளினைத் தீர்மானிக்கிறது.
வெயிலின் தாக்கத்தைக் குறைக்க தர்பூசணி, வெள்ளரிப்பழம், நுங்கு இதெல்லாம் சாப்பிடும்போது உடல்சூடு தணியும். வெளிநாட்டுப் பழங்கள் உற்பத்தியாகி நமது தட்டுக்கு வருவதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு மேலாகிறது. ஆனால் அந்த பழங்கள் கெடாமல் அப்படியே வந்துசேர்வதற்கு பின்னாலும் வேதியியல் காரணங்கள் இல்லாமலில்லை.
எங்கள் வீட்டில் சமைக்க உதவும் பாத்திரங்களில் முதலிடம் மண்பானைக்கு. நான்ஸ்டிக் போன்ற பாத்திரங்களில் சமைக்கவே மாட்டோம். உலகத்திலேயே மிகச் சிறந்த பழம் நெல்லிக்காய்தான் என்கிறார்கள். அதிக வைட்டமின் சி இதில்தான் இருக்கின்றன. ஆனால் கிவி சாப்பிட்டால்தான் ஆச்சு என்று நாம்தான் நினைக்கிறோம். எங்க வீட்டு சமையலில் அதிகம் பூண்டு சேர்ப்போம். அடுத்தது சீரகம் தட்டி வைத்துக் கொள்வோம். காய்கறிகளைவிட அதிக ஊட்டச் சத்துகள் இறைச்சியில்தான் இருக்கின்றன. அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குக் கிடைக்கும் சில சத்துகள் சைவம் சாப்பிடுபவர்களுக்குக்கிடைப்பதில்லை” என்கிற ப்ரியா, “கோடையைச் சமாளிக்க, லெமன் ஜூஸ், மோர் இவற்றுடன் சப்ஜாவிதையை சேர்த்துக் குடிக்கலாம்” என்ற டிப்ஸுடன் முடிக்கிறார்.
தேங்காய்பால் மோர்:
தேங்காயை அரைத்து நான்கைந்து முறை பால் எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து உடனே கலந்து குடிக்கலாம். உப்பு தேவையெனில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது வயிற்றுப்புண்ணை ஆற்றும். விட்டமின் சி இருக்கிறது. உடலின் நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்டும். நல்ல கொழுப்பு இருக்கிறது. இதை 11 மணிக்கு மதிய உணவுக்கு முன் குடிக்கலாம்.
சப்ஜா புட்டிங் ;
தேவையான பொருட்கள்:
ஊறவைத்த சப்ஜா விதைகள் 5 டேபிள் ஸ்பூன், பாதாம் மில்க் - 100 மிலி, சிறியதுண்டுகளாக்கிய ஆப்பிள் ஒன்று, துண்டாக்கிய திராட்சை 5, மாதுளம்பழம் - பாதியளவு, பாதாம் 5, வால்நட் 2
செய்முறை: அனைத்தையும் கலந்து ஃபிரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்தபிறகு பரிமாறலாம்.
மே, 2017.