மாலதி குசேலன்
மாலதி குசேலன்

என் சமையலறையில் : மாலதி குசேலன்

டாம்யான் சூப்

நான் பிறந்தது சிங்கப்பூர். நான்கைந்து வயது இருக்கும்போது கும்பகோணத்திற்கு வந்தோம். அங்குதான் படித்தது வளர்ந்தது எல்லாம். திருமணமாகி சென்னை வந்துவிட்டேன்.

அப்போது சமையல்தானே பெண்களுக்கான ஒரே பொழுதுபோக்கு. அதனால் மார்ச் எட்டில் நடக்கும் பெண்களுக்கான போட்டிகள், மற்ற சிறப்பு தினங்களில் நடக்கும் போட்டிகள், பத்திரிகைகள் ஒருங்கிணைக்கும் போட்டிகள் என அனைத்திலும் ஒன்றுவிடாமல் கலந்துகொள்வேன்'' பெருமையுடன் சொல்கிறார் மாலதி குசேலன். சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் மற்றும் சமையல் ஆர்வலர். அவரிடம் தொடர்ந்து பேசினோம்.

‘‘ஒருமுறை ஹெல்த் சென்டர் தாய்ப்பால் வாரத்திற்காக நான் செய்த முருங்கைக்கீரை கஞ்சி முதல் பரிசு பெற்றது. கோலங்களிலும் அதிக விருப்பம் உண்டு. அதிலும் பல பரிசுகள் பெற்றுள்ளேன். ஒருமுறை தீவுத்திடலில் நடந்த இல்லத்தரசிகளுக்கான போட்டியில் புதுமைக்கோலம் என்ற பெயரில் பூ, இலை வைத்து போட்ட கோலத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. ஓவியர் மணியன் செல்வம் தேர்ந்தெடுத்தார். இப்போது தையல் வகுப்பு எடுத்துவருகிறேன். தையல் வகுப்புக்கு வருபவர்கள் சமையலில் கேட்கும் சந்தேகங்களையும் தீர்த்துவைப்பதுண்டு. ரெசிபிகள் சிலவற்றை எப்படிச் செய்வது என்றும் சொல்வதுண்டு. மாத வார இதழ்களில் சிங்கப்பூர் பற்றியும், இலங்கை பற்றியும் நான் சென்று வந்த அனுபவங்களை பயணக்கட்டுரையாக எழுதியிருக்கிறேன். ஆன்மீக கட்டுரைகளும் பிரபல இதழ்களில் வெளிவந்துள்ளன. 

எங்கள் வீட்டில் இட்லிப்பொடி, ரசப்பொடி எப்போதும் இருக்கும். பூண்டு பேஸ்ட் அவ்வப்போது அரைத்து வைத்துக் கொள்வேன். மற்றபடி எல்லாமே அந்தந்த நேரத்திற்கு தயார் செய்வதே. மீன் வறுவலுக்கு கொஞ்சம் சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம் அரைத்து சிறிது மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து தடவி சிறிது நேரம் ஊறியபின் வறுத்தால் சுவையாக இருக்கும். 

அதேபோல் மட்டன் தாளிச்சா செய்யும்போது மாங்காய், கத்தரிக்காய், வாழைக்கா, துவரம்பருப்பு, கறி மசாலா பட்டை, சோம்பு, தேங்காய் சேர்த்து செய்வது சுவையதிகமாக இருக்கும். அசைவ உணவுகளிலும் அதிக விருப்பம் உண்டு. 

இரண்டு முறை மகன் வீட்டிற்கு சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்குள்ள உணவகங்களில் விதவிதமான உணவுகளை ருசித்து சாப்பிட்டேன். அது ஒரு நல்ல அனுபவம். அங்கு டாம்யான் என்றொரு சூப் மிக சுவையாக இருக்கும். நம்மூரில் கூட கிடைக்கிறது. அதில் இறால், பச்சைமிளகாய், காரட், முள்ளங்கி, நூடுல்ஸ், சிக்கன்பீஸ் எல்லாம் கலந்திருக்கும். 

அடிக்கடி டிவியில் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அதனால் ‘நீ செத்த பின் டிவியில் சமையல் நிகழ்ச்சி சத்தம்  கேட்டால் எழுந்து உட்கார்ந்துவிடுவாய்' என்று என் கணவர் கிண்டலடிப்பார். அவர் இப்போது உயிரோடு இல்லை.  நான் அடிக்கடி விரும்பி செய்வது ஆப்பிள் அல்வாவும், வரகரிசிப் பொங்கலும். நான் என்னுடைய பதினைந்து வயதில் இருந்து சமைத்துவருகிறேன். இன்றைக்கு இருப்பதுபோல் நிறைய மாத வார இதழ்களோ, இணையம், டி.வி நிகழ்ச்சிகள் எல்லாம் வெகு குறைவே.  அந்த கால கட்டத்தில் நானே முயற்சித்துத்தான் ஒரு வித்தியாசமான ரெசிபியைக் கண்டுபிடிப்பேன். விரைவில் சமையல் புத்தகம் கொண்டுவர ஆசை இருக்கிறது'' என்கிறார். கட்டாயம் கொண்டு வாருங்கள்!

ஆப்பிள் அல்வா

தேவையான பொருட்கள்

ஆப்பிள் : இரண்டு, பாதாம் பவுடர் : பாதி கப், உலர் திராட்சை : சிறிது, பாதாம் எசன்ஸ் : சிறிது, சர்க்கரை: பாதி கப், நெய் : தேவையான அளவு.

செய்முறை:

ஆப்பிள் தோலை சீவிக் கூழாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் பாதாம்பவுடர், சர்க்கரை, பாதாம் எசன்ஸ் சேர்த்து ஒரு சுற்று சுற்றிக்  கொள்ளவும். வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி வேறு வாணலியில் நெய்விட்டு முந்திரி திராட்சை பொரித்து சேர்த்துக் கிளறி இறக்கவும். 

சோயா க்ரானுவல்ஸ் துருவல்

தேவையான பொருட்கள்:

சோயா க்ரானுவல்ஸ் சிறியது : ஒரு கப், கோதுமை ரவை : அரை கிலோ, தேங்காய் துருவல் : ஒரு மூடி. சோம்பு  : ஒரு டீஸ்பூன். பச்சைமிளகாய் : 4, வெங்காயம் : சு, இஞ்சி பூண்டுவிழுது ஒரு டீஸ்பூன், குடைமிளகாய் சிறியது பு

தாளிக்க: எண்ணெய். பட்டை. கடுகு

செய்முறை : சோயா க்ரானுவல்ஸை வெந்நீரில் பு0 நிமிடம் போட்டு வைத்திருந்து எடுத்து வெறும் தண்ணீரில் போட்டுப் பிழிந்துகொள்ளவும். சோம்பை தூளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், குடை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கோதுமை ரவையை உப்பு சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

எடுத்து சற்று ஆறவிட்டு வைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் இரண்டு பச்சைமிளகாய் சோம்பு சேர்த்து சோயா க்ரானுவல்ஸுடன் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து பிசிறிக்கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து பட்டை, கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிள்காய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அத்துடன் சோயாவை சேர்த்து நன்கு கிளறியபின் வேகவைத்த கோதுமை ரவையை சேர்த்து நன்கு உதிராக வரும்வரை கிளறி புரட்டிப் பரிமாறவும்.

ரவை ஆப்பம்

தேவையான பொருட்கள்

ரவை : ஒரு கப். ஒரு பன் அல்லது பிரட் மூன்று ஸ்லைஸ். தேங்காய்ப்பால் : ஒரு கப், ஆப்பசோடா : இரண்டு டீஸ்பூன், அரை கப் தேங்காய் தண்ணீ, சர்க்கரை ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ரவை, பன், சர்க்கரை, தேங்காய்த் தண்ணீர் விட்டு மிக்ஸியில் திக்காக இல்லாமல் தளர அரைத்துக் கொள்ளவும். இரவே இதை செய்து காலைவரை புளிக்க விடவும். எட்டுமணிநேரமாவது புளிக்க வேண்டும். காலை தேங்காய்ப்பால் ஆப்பசோடா உப்பு சேர்த்து கரைத்து ஆப்பமாக ஊற்றவும். மூடிபோட்டு ஒரு பக்க செட்தோசையாகவும் ஊற்றலாம். வெங்காய சட்னி, வடைகறி, இனிப்பு, தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.

பிப்ரவரி, 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com