என் சமையலறையில் : யாழ்மொழி

என் சமையலறையில் : யாழ்மொழி

தேங்காய் எண்ணெய் சமையல்

கோவையைச் சேர்ந்த யாழ்மொழியின் பேச்சில் அன்பும், அக்கறையும், நகைச்சுவையும் சொட்டுகிறது. புதியவராக இருந்தாலும் பல நாட்கள் பழகிய பாங்குடன் அணுகக் கூடியவர். எள்ளலும், நகைச்சுவையுமாக எழுத்தில் கவரும் கோவையை சேர்ந்த எழுத்தாளர் பாமரனின் இல்ல இணையாள். அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர். சொந்தமாக தொழில் நிறுவனமும் நடத்துகிறார். அவரைச் சந்தித்தோம். சமையல், உணவு, இயற்கை என பேசத் துவங்கினார்.

“எனக்கு மண்பானை சமையல்தான் ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டு சமையலைச் சாப்பிட ஒரு கூட்டமே இருக்கு. நிறைய தோழர்கள் அடிக்கடி வருவாங்க. எது சாப்பிட விரும்பினாலும் உடனே அரை மணி நேரத்துல செஞ்சு கொடுத்திடுவேன். அது அசைவமா இருந்தாலும் சரி, சைவமா இருந்தாலும் சரி. எங்க வீட்டுல அவருக்கு வெங்காயம் சேர்த்தா பிடிக்காது. அதுக்காக வெங்காயத்தை விட முடியுமா? எனக்கு சின்னவெங்காயம் சேக்காம சமைக்கவே முடியாது. அதனால அரைச்சு சேத்துடுவேன். எந்த அசைவம் செஞ்சாலும் அதுகூட கேரட், பீன்ஸ் மாதிரியான காய்கறிகள் செய்யறது வழக்கம். ஆனா அவர் சாப்பிடுறாருனா அசைவத்துல அதிகம் காய்கறிகள் சேர்க்க மாட்டேன். பாமரன் குருவி கொறிக்கிற மாதிரி சாப்பிடுறவரு. அதனால நல்லா சாப்பிடட்டும்னு அசைவம் கூட காய்கறிகள் சேர்க்கிறதில்லை’ என்பவர் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிரபஞ்ச சக்திதான் தன்னை வழிநடத்துகிறது என்பதை முழுமையாக நம்புபவர்.

“நான் பன்றிக்கறி, மாட்டுக்கறி எல்லாமே நல்லா சமைப்பேன். மீன், நண்டு, இறா, கோழி, ஆடுனு எல்லாமே சமைக்கப் பிடிக்கும். இறைச்சி வகைகள்ல கொத்துக்கறி மாதிரி செஞ்சு அசத்திடுவேன். அதிலும் சிறுதானிய உணவுகள்னா எனக்கு கொள்ளைப் பிரியம். குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை எல்லாமே அப்பப்ப சமைப்பேன்.

நாங்க வசிக்கிற வீட்டைச் சுத்தி ஒன்பது மரங்கள் இருக்கு. ஒன்பது மரங்களும் விதவிதமான மரங்கள். மாதுளை, தென்னை, மா, கொய்யா எல்லாத்துல இருந்தும் இயற்கையா கிடைக்கிற பழங்களை சாப்பிடற ருசியே தனிதான். அத்தோட கருவேப்பிலை, முருங்கைனு இருக்குது. அதையும் அப்பப்ப சமையல்ல சேத்துக்குவோம்.

சாப்பிடறதுக்கு மட்டும் ஆள் இருந்தா பத்து ஐட்டம் பத்து நிமிஷத்துல செஞ்சுடுவேன்” என்பவர் அக்குபஞ்சர் மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.

“அறுசுவை உணவகம் ஒண்ணு நடத்திட்டு இருந்தேன். இயக்குநர் மகேந்திரன் வந்து சாப்பிட்டுட்டு அவ்ளோ பாராட்டியிருக்கார். பக்கத்துல இருந்த ஒரு பெரிய நகைக்கடையில் இருந்து முதல்ல ஒரு அஞ்சு பேர் சாப்பிட வந்தாங்க. அதுக்கப்புறம் அது ஐம்பது, நூறாகி, இரவுபகல் வேலை பாக்க வேண்டியதா இருந்தது. இதனால எனக்குக் குடும்பத்தைப் பாக்கவும், எனக்கு நேரம் ஒதுக்கவும் முடியலை. அதனாலயே அந்த உணவகத்தை கைவிட வேண்டியதாகிடுச்சு” என்பவருக்கு ஓவியம் வரைவதிலும் அத்தனை ஈடுபாடு உண்டு.

“நான் மசாலா பொடி வைச்சிக்கிறதில்ல. அப்பப்ப வறுத்து அரைச்சுக்குவேன். அதே மாதிரி உப்பு, புளி, ஊறுகாய் எல்லாம் பீங்கான் பாத்திரங்கள்லதான் வைச்சிருக்கேன். ப்ளாஸ்டிக் பாட்டில் அதிகம் பயன்படுத்துறதே இல்ல.

சமையலுக்கும் கூட அதிகம் மண்சட்டிதான் பயன்படுத்துவேன். எனக்கு நல்லெண்ணெய் ரொம்ப பிடிக்கும். பாமரனுக்கு தேங்காய் எண்ணெயில சமைச்சாதான் ரொம்ப பிடிக்கும். அதனால பெரும்பாலும் தேங்காய் எண்ணெயிலதான் சமைப்பேன்.  சிக்கன், மட்டன் பிரியாணியில் பீன்ஸ், கேரட், காலிபிளவர் இதெல்லாம் சேத்து செய்வேன். சில ஊர்கள்ல அசைவத்துல கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்ப்பாங்க. கோயமுத்தூர்காரங்க கறியிலும் எதுவும் போட மாட்டாங்க. 

எந்தக் கறியாக இருந்தாலும் அதை கொத்துக்கறியாக்கி உருண்டையாக தோசைக்கல்லில் கொஞ்சமா எண்ணெய் ஊத்தி வேக வைத்தோ, எண்ணெயில் பொறித்தோ சாப்பிடலாம். பாமரனுக்கு எண்ணெயில் பொறிப்பதுதான் பிடிக்கும்” என்பவர் தனது மருமகள் வரவிற்காகக் காத்திருக்கிறார்.

“இப்ப வரைக்கும் கிரைண்டர், வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ் அப்டினு எதுவுமே கிடையாது. சமீபத்துலதான் மிக்ஸியும், வாஷிங் மெஷினும் வாங்குனோம். ரொம்ப நாளா விறகடுப்புலதான் சமைச்சிட்டிருக்கேன்”, என்று கூறுகிறார் யாழ்மொழி பாமரன்.  இவர் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் பவ்யமாக நின்று சமையலில் உதவிக்கொண்டிருந்தார் பாமரன். (புகைப்படத்திலும் பார்க்கலாம்! அவ்வளவு பவ்யம், பணிவு!)

கறி உருண்டை வடை :

தேவையான பொருட்கள்:

கறி : அரைக்கிலோ, பூண்டு: இரண்டு பெரியது, இஞ்சி: இரண்டு ஆட்காட்டி விரல் அளவு, சோம்பு: இரண்டு ஸ்பூன், பட்டை: இரண்டு பெரிய துண்டு, கிராம்பு : 4, பச்சை மிளகாய்: 9, சின்ன வெங்காயம்: அரைக்கிலோ கருவேப்பிலை: 25 கிராம், கொத்தமல்லி: தழை 50 கிராம், மஞ்சள் தூள்: ஒரு ஸ்பூன், உப்பு: தேவையான அளவு, பொட்டுக்கடலை: கால்கிலோ பொடித்தது, தேங்காய் எண்ணெய்: தேவையான அளவு, தேங்காய்:- அரை மூடி

செய்முறை:

சிக்கன் அல்லது மட்டன் கொத்தி வாங்கிக் கொள்ளவும். இதனுடன் தேங்காய், பச்சைமிளகாய், பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு, தேங்காய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, மல்லித்தழை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் பொட்டுக்கடலை மாவை சிறிது சிறிதாக தூவி வடை பதத்துக்குக் கொண்டு வர வேண்டும். பின்னர் எண்ணெயில் பொறித்தோ அல்லது தோசைக்கல்லில் மீனைப் போல் பொறித்தோ சாப்பிடலாம்.

பின்குறிப்பு:

பெரும்பாலானோர் பொட்டுக்கடலையை சேர்த்து ஆட்டிவிடுவார்கள். அப்படிச் செய்தால் நீர்த்துப் போகும். எனவே தனியே பொடித்து வைத்துக் கொள்ளவும்.

மேற்சொன்ன செய்முறையுடன் வெந்த காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

கறி உருண்டைக் குழம்பு

தேவையான பொருட்கள்:

கறி உருண்டை (செய்முறை மேலே), வரமிளகாய், கொத்தமல்லி, பட்டை ஒரு துண்டு, கிராம்பு 4, சின்ன வெங்காயம் கால்கிலோ, தேங்காய்: ஒரு மூடி, தக்காளி: 4, சோம்பு, கருவேப்பிலை, எலுமிச்சை: 1

செய்முறை:

வரமிளகாய், கொத்தமல்லி, பட்டை, கிராம்பு,  தக்காளி, வெங்காயம், சோம்பு, கருவேப்பிலை எல்லாவற்றையும் எண்ணெயில் வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனை தாளித்து குழம்பு கொதித்ததும் அதனுடன் கறி உருண்டையைச் சேர்க்கவும். இறக்கும் முன் சிறிது எலுமிச்சை பிழிந்து விடவும். சிலர் புளி ஊற்றுவார்கள். எலுமிச்சை ஊற்றினால் சுவை கூடும். இதை சிம்மிலே வேக வைத்து இறக்கவும்.

ஜூன், 2017.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com