என் சமையலறையில் : ஹசீனா

மணக்கும் ராவுத்தர் சமையல்!
Published on

எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர். கட்டிக் கொடுத்த ஊர்தான் திருநெல்வேலி. நான் விடுதியில் தங்கியிருந்து ஊட்டியில் படிச்சேன். நான் ஒன்பதாம் வகுப்புதான் படிச்சிருந்தேன். அந்த விடுமுறையிலேயே எனக்கு கல்யாணமும் ஆகிடுச்சு. அதனால ஊட்டியில இருந்து அப்படியே திருநெல்வேலிக்கு வந்துட்டேன். திருநெல்வேலி வந்ததும் எந்த பொழுதுபோக்கும் இல்லாம போயிடுச்சு. நான் சமையல்ல அதிகமா ஆர்வப்பட்டதுக்கு இது ஒரு முக்கியமான காரணம். நான் என்னையை சுறுசுறுப்பாக வைச்சிக்கணும்னு நினைச்சேன். அதனால எனக்குத் தெரிஞ்ச சமையல கையில எடுத்துக்க ஆரம்பிச்சேன். இப்ப அதுதான் என்னை அடையாளப்படுத்திட்டு இருக்கு.” என்று சொல்லும் ஹசீனா செய்யது திருநெல்வேலியில் இருக்கும் சமையல் கலைஞர். சிலமாதங்களாக யூட்யூப் இணையதளத்தில் தன்னுடைய சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்கிறார். அவரிடம் அந்திமழைக்காகப் பேசினோம்.

“நான் என்னோட பதினொரு வயசுல இருந்து சமைச்சுட்டிருக்கேன். முப்பது வருஷத்துக்கு மேலா சமைச்சுட்டி ருந்தாலும் கடந்த நாலு வருஷமாத்தான் வலைத்தளத்தில் சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.

sautefrynbake.com என்பது என்னுடைய வலைத்தளத்தின் பெயர். கடந்த ஜனவரியில இருந்து யூட்யூப் இணைய தளத்திலும் என்னுடைய சமையல் குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய தோழியின் மகள்தான் இதற்கு உதவி செய்கிறார். நான் ராவுத்தர் முஸ்லீம்களோட சமையல் குறிப்புகளைத்தான் நிறைய செஞ்சு பதிவேற்றம் பண்ணிட்டிருக்கேன். எங்க ராவுத்தர் சாப்பாட சாப்பிடனும்னா ஒண்ணு முஸ்லீம் வீட்டு கல்யாணத்துல சாப்பிடலாம். இல்லனா ரம்ஜான், பக்ரீத்துக்கு யாராவது கொடுத்தா சாப்பிடலாம்.

எங்க பாரம்பரியத்துல பிரியாணி மட்டுமில்லாம நிறைய பாரம்பரிய சமையல் குறிப்புகள் இருக்கு. இந்த உணவு வகைகள் எந்த உணவகங்கள்லயும் கிடைக்காதுங்றதால அது எல்லாருக்கும் தெரியணும்னு எனக்கு ஆசை. அதனால நான் ராவுத்தர் சமையல்ல என்னோட கவனத்தை செலுத்தி நிறைய பண்ணிட்டிருக்கேன்.

என்னுடைய இணையதளத்தில் சமையல்குறிப்புகள் எழுதியதும் நிறைய பேர் அவங்களோட சந்தேகங்கள் கேட்பாங்க. அதுக்கும் நான் உடனே தெளிவுபடுத்திடுவேன். அதுக்கப்புறம் அவங்க சமைச்சத புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வைப்பாங்க. அது எனக்கு சந்தோஷமா இருக்கும்’ என்று கூறும் ஹசீனாவுக்கு ஒரு மகள். ஒரு மகன். மகன் இலண்டனில் எம்பிஏ படிக்கிறார். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. 

‘நான் வீட்டுலயும் உணவுக்கான வகுப்புகள் எடுத்துக்கிட்டிருக்கேன். எங்க பக்கத்துல அதிகமா அசைவ உணவுகள்தான் செய்வோம். அதுலயும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பக்குவம் இருக்கு. திருநெல்வேலிக்குனு பாத்தீங்கனா பக்கிடினு ஒரு ரெசிபி இருக்கு. அது வந்து அரிசி மாவுல வெங்காயம் பச்சமிளகாய் கருவேப்பிலை சேத்து கொழுக்கட்டை மாதிரி பிடிச்சு கறிக்குழம்புல வேக வைப்போம். இது திருநெல்வேலி முஸ்லீம்களோட பாரம்பரிய உணவு. எந்த ராவுத்தர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனீங்கனாலும் பிரியாணி கூட ப்ரெட்ல செய்ற இனிப்பு ஒண்ணு வைப்பாங்க. அது ரொம்ப சுவையா இருக்கும். (இதன் செய்முறையை பெட்டியில் காணவும்). கடற்கரை பகுதிகள்ல இருக்கிற மக்கள் பெரும்பாலும் தேங்காய் எண்ணையை அதிகம் பயன்படுத்துவாங்க. எங்க சமையல்லயும் தேங்காய் எண்ணெய் அதிகம் இருக்கும்.

தினமும் சமைச்சுட்டே இருந்தாலும் சமையல் எனக்குப் போரடிக்கலை. ஏன்னா அது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம். சமையல் இல்லாத அன்னைக்கு எனக்கு நேரமே போகாது. எனக்கு சமையலறை ஒரு ஆய்வுக்கூடம் மாதிரிதான். என்னோட கணவர் ’உன்னோட ஆய்வகத்தில் நான்தான் எலி. என்னைய வைச்சுதான் பரிசோதனை பண்றே’ அப்டினு அடிக்கடி சொல்வாரு. வீட்டுல இருக்குறவங்க எல்லாருக்கும் என் சமையல்ல சந்தோஷம்தான். இப்படி விதவிதமா சமைச்சு பரிமாறுவதை வெளியில இருந்து பாக்குறவங்க இந்த வீட்டுல நான் பொறந்திருக்கக் கூடாதான்னு பொறாமைப்படுறதா நிறைய பேர் சொல்லிருக்காங்க’ என்று  புன்னகைக்கிறார்.

ப்ரெட் ஸ்வீட்

தேவையான பொருட்கள்:

ப்ரெட் – 4, இனிப்பில்லாத கோவா – 100 கிராம், குங்குமப்பூ – சிறிதளவு, நட்ஸ் – தேவையான அளவு, நெய் – தேவையான அளவு, ஜீரா = தேவையான அளவு, ஜீரா செய்வதற்கு (சர்க்கரை – ஒரு டம்ளர் + தண்ணீர் – கால் டம்ளர்) காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

ப்ரெட்டை முதலில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் சதுர வடிவத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் பொறித்து எடுத்த ப்ரெட்டை மிக்ஸில் கரகரவென பொடித்துக் கொள்ளவும். அந்த ப்ரெட் பவுடரை கோவா மற்றும் ஜீரா சேர்த்து கலந்து கொஞ்சம் குங்குமப்பூ, நட்ஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் நெய் சேர்த்து கிளறி கொதி வந்ததும் இறக்கவும். இது பிரியாணிக்கு ஸ்வீட் சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

கத்தரிக்காய் தொக்கு

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – கால்கிலோ, நல்லெண்ணய் – ஒரு கப், கடுகு – சிறிதளவு, மிளகு - சிறிதளவு, வெந்தயம் - சிறிதளவு, சீரகம் - சிறிதளவு, கருவேப்பிலை – சிறிதளவு, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, மிளகாய் பொடி – தேவைக்கேற்ப, சாம்பார் பொடி – தேவைக்கேற்ப, புளி – சிறு எலுமிச்சை அளவு, வெல்லம் – தேவைக்கேற்ப, வெள்ளை எள் – தேவைக்கேற்ப, பொடித்த வேர்க்கடலை – தேவைக்கேற்ப.

செய்முறை:

கத்தரிக்காயை முழுமையாக வெட்டாமல் காம்பின் கீழ் பாகம் வரைக்கும் நான்காக வெட்டி தண்ணீரில் போடவும். நல்லெண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு வெடித்ததும், மிளகு, வெந்தயம், சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வெந்து மசிந்ததும், கத்தரிக்காயைச் சேர்க்கவும். கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிளகாய் பொடி, சாம்பார் பொடி சேர்த்து புளியைக் கட்டியாகக் கரைத்து ஊற்றவும். பின்னர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும். சுவைக்காக சிறிது வெள்ளை எள்ளும், பொடித்த வேர்க்கடலையும் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

அக்டோபர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com