சமையல் கலை நிபுணர் சாந்தா ராமானுஜம் 65 வருடங்களாக சமைத்து வருபவர். சமையல் புத்தகங்கள் எழுதியுள்ளார். சமையல் வகுப்பும் எடுத்து வருபவர். அவரிடம் பேசியதிலிருந்து,
“நான் 15 வயசுல சமைக்க ஆரம்பிச்சேன். இப்ப 80 வயசாகுது. தினமும் சமைச்சுட்டே இருக்கிறதால புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சு யோசிச்சு வித்தியாசமா முயற்சி செய்வேன். என் கணவரும், பிள்ளைங்களும் சாப்பிட்டு பாத்துட்டு நல்லாருந்தா நல்லாருக்குனு சொல்வாங்க. இல்லனா இது சேக்கலாம் அது சேக்கலாமுன்னு ஆலோசனை சொல்வாங்க. அவங்களுக்காக வித்தியாசமா முயற்சி பண்ணிட்டே இருப்பேன்.
25 வயசுலயே குக்கரி க்ளாஸ் எல்லாம் போனேன். அப்புறம் நானே குக்கரி க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். இப்ப வரைக்கும் க்ளாஸ் எடுத்துட்டுருக்கேன். என் மருமகள்கள், பேத்திங்க எல்லாருக்குமே நல்லா சமைக்க வரும். அவங்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கேன். அதைப் புத்தகமாகவும் போட்டுருக்கேன். பொடிவகைகள், பண்டிகைகளுக்கு என்ன செய்றது? ஊறுகாய் முதல் சூப் வரை, ஆரோக்கிய சமையல் அப்டினு புத்தகங்கள் எழுதிருக்கேன். என் கடைசிப் பேத்தி இலண்டன்ல போய் படிச்சுட்டு வந்து சென்னையில பெரிய ஹோட்டல்ல செஃப்பா இருந்தா. இப்ப டேஸ்ட்டரா இருக்கா.
இப்ப கொள்ளுப் பேரன்கள் வந்த பிறகு அவங்களுக்கு பிடிக்கிற மாதிரி நிறைய செஞ்சு கொடுத்துட்டு இருக்கேன். குழந்தைகளுக்கு பிடிக்கணும்னா கலரும் வடிவமும் முக்கியம். சாதாரணமா இட்லி செஞ்சா கூட கலர் கலரா இருக்கிற மாதிரி செஞ்சு கொடுப்பேன். காரட், கீரை, பீட்ரூட் எல்லாத்துலயும் ஒண்ணு ஒண்ணு எடுத்து தனித்தனியா அரைச்சு வச்சுக்கிட்டு அதுல இட்லி மாவக் கலந்து சின்ன சின்ன இட்லியா செஞ்சு கொடுப்பேன். தோசையா இருந்தா சதுரமா முக்கோணமா ஊத்திக் கொடுப்பேன். நொறுக்குத் தீனிகளும் வீட்டுலயே செஞ்சுடுவேன். என் பேரப்பிள்ளைகளுக்கு நான் செய்ற டூ மினிட்ஸ் அல்வா ரொம்ப பிடிக்கும். (செய்முறை - பெட்டியில்) எங்க வீட்டுல சப்போட்டா மரம் இருக்கு. அதனால சப்போட்டாவுல புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சு சப்போட்டா போளி, சப்போட்டா பாயாசம்னு செஞ்சு கொடுத்தேன். எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. சப்போட்டா போளினா சப்போட்டாவ தோல், விதை நீக்கி பேரீச்சம்பழத்தோட அரைச்சு பூரணமா வச்சுக்கிட்டு கோதுமை மாவை சப்பாத்தி பதத்துக்கு தேய்ச்சு அதுல சப்போட்டா பூரணத்த வச்சு தவால போட்டு எடுக்க வேண்டியதுதான். சப்போட்டா பாயாசத்துக்குனா சர்க்கரையோட சேத்து சப்போட்டாவ நல்லா அரைச்சு வச்சுக்கிட்டு பாலைக் கொதிக்க வச்சு அரைச்சு வச்சதைக் கொட்டி முந்திரி போட்டு இறக்கிடனும். ரொம்ப சிம்பிளா மட்டுமில்லாம சிறந்ததாவும் இருக்கணும்னு எப்பவும் நினைப்பேன். அதனாலயே வீட்டுலயே பிள்ளைங்களுக்கு கோகோ சாக்லேட் (செய்முறை - பெட்டியில்)செஞ்சு கொடுப்பேன். அடுப்பு பத்த வைக்கவே அவசியமில்லை.
நான் இப்பவும் தினமும் ஒரு மணிநேரம் வாக்கிங் போய்ட்டு இருக்கேன். என் துணிகளை நானே துவைச்சு அயன் பண்ணி வச்சுக் குவேன். காபி, டீ சாப்பிடமாட்டேன். காலையில் ஒரு டம்ளர் பால். மதியம் 12 மணிக்கு குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், மோர் சேத்த சாப்பாடு, நைட்டுக்கு ஏதாவது டிஃபன். இடையில பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்சு இப்டி ஏதாவது பழங்கள் சாப்பிடுவேன். எந்த பழங்களையும் ஒதுக்க மாட்டேன். இதுதான் என்னோட டயட். 15, 20 வருஷமா எண்ணெய் பலகாரம், மசாலா உணவுகள், அப்பளம் எதுவும் சேக்கிறதில்லை.
என் பேத்தி பிரசவத்துக்கு வந்திருக்கா. அடுத்த மாசம் டெலிவரி இருக்கு. பிரசவித்த தாய்க்கு பால்சுரக்கவும், உடல் தேறவும் கறிவேப்பிலை சாதம் செஞ்சுக்கொடுக் கணும். நார்மலா கறிவேப்பிலை சாதம் செய்ற மாதிரிதான் கூடுதலா பூண்டு சேத்துக்கணும். கருவேப்பிலை, பூண்டு, மிளகு, துவரம்பருப்பு, பெருங்காயம் எல்லாத்தையும் நெய் விட்டு வறுத்து அரைச்சு சுடுசாதத்துல பிசைஞ்சு சாப்பிடனும். ஒவ்வொரு பருவத்துக்கும் தகுந்த உணவுகளை எடுத்துக்குறதும், வீட்டுல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுக்குறதும் முக்கியம்.” என்கிறார் சாந்தா.
கோகோ சாக்லெட்:
தேவையான பொருட்கள்
மில்க் பவுடர் : 1 கப், ஐசிங் சுகர் 1 கப், வெண்ணெய்: 1 டீஸ்பூன், கோகோ பவுடர் - 2டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மில்க் பவுடர், ஐசிங் சுகர், வெண்ணெய், கோகோ பவுடர் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வேண்டிய வடிவத்தில் உருட்டி வைத்துக் கொள்ளவும். இதை ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒருமாதம் வரைக்கும் கெடாமல் இருக்கும்.
அவல் தயிர் சாதம்
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி ஒரு பங்கு, ஓட்ஸ் ஒரு பங்கு, அவல் ஒரு பங்கு, கடுகு சிறிதளவு, உளுத்தம்பருப்பு சிறிதளவு, முந்திரி சிறிதளவு, கேரட் - சிறியது 1, திராட்சை - சிறிதளவு, இஞ்சி பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லித் தழை சிறிதளவு, எண்ணெய் சிறிதளவு
செய்முறை:
தண்ணீரைக் கொதிக்க வைத்து ஜவ்வரிசி, ஓட்ஸ், அவல் மூன்றையும் வேகவிட்டு கஞ்சிபோல் வைத்து இறக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, முந்திரி, இஞ்சி என ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கேரட்டைத் துருவித் தூவி இறக்கவும். அதனுடன் திராட்சை, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து இறக்கவும்.
டூ மினிட்ஸ் அல்வா
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு ஒரு பங்கு, சர்க்கரை - ஒரு பங்கு, தண்ணீர் - ஒரு பங்கு, நெய் - அரை பங்கு, முந்திரி தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடுப்பில் சர்க்கரையைத் தண்ணீரில் கொதிக்க வைத்துவிட்டு மற்றொரு அடுப்பில் நெய்யில் முந்திரியை வறுத்து பின் கோதுமை மாவை வறுத்துக் கொள்ள வேண்டும். சிவக்க வறுத்ததும் சர்க்கரைத் தண்ணீரை மாவில் ஊற்றி கிளறி இறக்கவும். இந்த அல்வா ரெண்டு நாள் வரைக்கும் கெடாம இருக்கும்.
டிசம்பர், 2015.