சமைக்கத் தெரிந்தவளே பெண்
பேஜர் கிருஷ்ணமூர்த்தி

சமைக்கத் தெரிந்தவளே பெண்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடலை ஒட்டிய ஒரு அழகான பங்களாவில் வசிக்கிறார் விஜி சந்திரசேகர். நகரத்தின் இரைச்சலில் இருந்தும் இம்சைகளில் இருந்தும் விலகி நிற்கிறது அந்த வில்லா. கணவர் கேப்டன் சந்திரசேகர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பறந்து கொண்டிருக்கும் பைலட். ஆகவே வீட்டை நிர்வகிப்பது முழுக்க முழுக்க விஜி தான். திரைப்படம், சின்னத்திரை என்று என்னதான் பிசியாக இயங்கிக் கொண்டிருந்தாலும் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே வேலை செய்வது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார். காரணம், வீடு. வாசலில் தொங்கும் பெயர் பலகை தொடங்கி மொட்டை மாடி நாற்காலி வரை வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் விஜியின் ரசனையால் நிரம்பி வழிகிறது. இத்தனை அழகான வீட்டை வடிவமைத்தவர் தன் சமையல் அறையை சர்வதேச தரத்துக்கு வடிவமைத்துக் கொண்டுள்ளார். ஆறரை லட்சம் ரூபாய் செலவிலான இவரது இத்தாலியன் கிச்சன், பார்ப்பவரின் வயிற்றில் அடுப்பை(!) பற்ற வைக்கும் வல்லமை  கொண்டது. அந்த அழகான கிச்சனில் அமர்ந்து அவரிடம் உரையாடியதில் இருந்து...

பெண்களுக்கு சமையல் எவ்வளவு முக்கியம்னு நினைக்கிறீங்க?

சமையல் தெரியாத பெண் முழுமையான பெண் இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம். அதற்காக சமைப்பது மட்டுமே பெண்களின் வேலை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். படிப்புக்காகவும், வேலைக்காகவும் ஊர்விட்டு ஊர் சென்று தனியாகத் தங்கி இருக்கும் பெண்களுக்குத்தான் சமையலின் அருமை புரியும். ஓட்டலில் சென்று சாப்பிடுவதைவிட தன் அறையில் தானே சமைத்து சாப்பிடுவதில் இருக்கும் சுகம் அவர்கள் அறிவார்கள். பசித்தால் சட்டையை மாட்டிக் கொண்டு போய் ஆண்களை போல ஏதோ ஒரு ஓட்டலில் அமர்ந்து ஒரு பெண்ணால் தனியாக அமர்ந்து சாப்பிட்டுவிட முடியாது. அந்த மனநிலை அவ்வளவு எளிதில் பெண்களுக்கு வராது. இது பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் மட்டுமல்லாமல் உளவியல் சார்ந்ததும் கூட.  என் மகள் துபாயில் மருத்துவம் படிக்கிறாள். அவளே தான் அங்கு சமைத்து சாப்பிடுகிறாள். அங்கு இல்லாத ஓட்டலா? +2 படிக்கும் என் இரண்டாவது மகளைக் கூட சின்ன சின்ன சமையல் வேலைகள் செய்ய பழக்கப்படுத்தி இருக்கிறேன். சமைக்கத் தெரிந்தவளே பெண்.

வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கும் சமையலுக்கும் தொடர்பு உள்ளதா?

வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டாலே ஒரு ஆணின் மனதில் சுலபமாக இடம்பிடித்து விடலாம். ஒரு துவையல் அரைத்தால் கூட அதை வீட்டில் யார் அரைத்தது என்பதை கணவர் கண்டுகொள்ளும் அளவுக்கு அவரை கட்டிப்போடும் சாமர்த்தியம் சமையலுக்கு உண்டு. ஆனால் பல கூட்டுக் குடும்பங்களில் மாமியார் - மருமகள் பிரச்னையின் ஆரம்பப் புள்ளியே இந்த சமையல் தான். பல ஆண்டுகளாக தன் மகனுக்காக சமைத்துக் கொண்டிருந்த ஒரு தாய்க்கு திடீரென இன்னொரு பெண் அந்த இடத்தை நிரப்ப வந்தவுடன் அது அதிர்ச்சியாக மாறிப்போகிறது. தனக்கான முக்கியத்துவம் பறிபோய்விடுமோ என்ற பதற்றத்தில் தன் மகனை தனக்கானவனாகவே அவள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறாள். இந்த புள்ளியில் தொடங்கும் சச்சரவுகளால் பல குடும்பங்கள் சிதறிப் போயிருக்கிறது. மகனின் திருமணத்துக்கு பின்னர் தன் வீட்டு சமையலறை மருமகளுடையதே என்பதை பல மாமியார்கள் புரிந்து கொள்வதில்லை.

பசி போக்குவதைத் தாண்டி சமையலறையின் பயன் என்ன?

எனக்கு என் சமையலறை தான் மருந்தகம்.  இருமல் அல்லது மூச்சுத்திணறல் என்றால் இஞ்சியை வாயில் போட்டு மென்று, இரண்டு ஸ்பூன் தேன் குடித்தால் போதும், அது தான் தலைசிறந்த காஃப் சிரப். வாந்தி வருவதைப் போல இருந்தால் எலுமிச்சை சாற்றுடன், புதினா

சாற்றைக் கலந்து குடித்தால் பட்டென அந்த உணர்வு காணாமல்போகும், ஓமம், சீரகம் கலந்த தண்ணீரைப் போல ஜீரணத்துக்கு சிறந்த மருந்து ஏது? உடம்பு சூடால் ஏற்படும் வயிற்று வலிக்கு கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் போதும். வாய் நறுமணத்துக்காக மவுத் ஃப்ரெஷ்னர்கள் என்ற பெயரில் விற்கப்படும் அந்த ரசாயனக் கலவைகளை நான் என்றைக்கும் பயன்படுத்துவதில்லை. லவங்கம், ஏலக்கா, புதினா, இஞ்சி ஆகியவற்றை இடித்து தண்ணீரில் கலந்து, ஒரு லிட்டர் தண்ணீர் கால் லிட்டராகும் அளவுக்கு காய்ச்சி எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கெள்வேன். எந்த மவுத் ப்ரெஷ்னர்களும் அதற்கு ஈடாகாது.

ஒரு சமையலறையை சமாளிப்பதே கஷ்டம். அதென்ன உங்கள் வீட்டில் இரண்டு சமையலறைகள்?

ஒன்று டிரை கிச்சன். மற்றொன்று வெட் கிச்சன். டிரை கிச்சனில் தாளித்து கொட்டுவது, வதக்குவது, பொறிப்பது போன்ற புகையடிக்கும் சமாச்சாரங்கள் செய்யக் கூடாது. இது முழுக்க முழுக்க இத்தாலிய சமையலறை முறையில் வடிவமைக்கப்பட்டது. தீப்பெட்டியோ, லைட்டரோ தேவைப்படாத ஆட்டோமெடிக் ஸ்டவ்கள், எதையும் வறுக்க, பொறிக்க கிரில், வேகவைக்க மைக்ரோவேவ் ஓவன், பாத்திரங்களை சுத்தமாக கழுவிட டிஷ் வாஷர் என நவீன வசதிகள் கொண்ட லேட்டஸ்ட் சமையலறை இது. வெட் கிச்சன் என்பது, வழக்கமாக நாம் எல்லா வீடுகளிலும் பார்க்கும் கிச்சன் தான். ஸ்ஸ்ஸ்... என சத்தத்துடன் புகையடிக்கும் அத்தனை சமையல் சமாச்சாரங் களும் இங்கு தான் நடைபெறும். எந்த கிச்சனாக இருந்தால் என்ன? சமையலுக்கு பிறகு அந்த இடத்தை பார்க்கும்போது அங்கு சமையல் நடந்த சுவடே இல்லாமல் சுத்தமாக இருந்தால் தான் நீங்கள் ஒரு சிறந்த கிச்சன் நிர்வாகி என்று அர்த்தம்.

சமையலில் உங்களுடைய தனித்துவம்?

இந்தந்த நாளில் இந்தந்த சமையல் என டைம்டேபிள் போட்டு சமைப்பது என் ஸ்டைல். மெனுவிலும் ரிபீட் இல்லாமல் வெரைட்டி கொடுக்க முடியும். சத்தான காய்கறிகளை திட்டமிட்டு சாப்பிட முடியும். அதே போல சாப்பாட்டில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை பெரும்பாலும் குப்பையைப் போல தூக்கியெறியப்படுகிறது. அதில் சிறந்த மருத்துவகுணம் இருக்கிறது. அதனால் கறிவேப்பிலையை சாப்பாட்டில் குட்டிக் குட்டி துண்டுகளாக நறுக்கிப் போட்டுவிடுவேன். பீர்க்கங்காய், நூல்கல், முள்ளங்கி போன்ற சத்துள்ள காய்களை குழந்தைகள் விரும்புவதில்லை. சில நேரங்களில் பெரியவர்களும் தான். அதில் சட்னி, துவையல் போன்றவை செய்துவிட்டால், பிடிக்காதவர்களும் அது என்னவென்று தெரியாமலேயே சாப்பிட்டுவிடுவார்கள்.  சமையல் மசாலாவும் நானே அரைத்து தான் சமைப்பேன். நம்ம பிள்ளைங்களுக்கு நாமதானே செய்யணும்?

பேஜர் கிருஷ்ணமூர்த்தி

பனீர் பசந்த்

தேவையானவை

பனீர் 2 பாக்கெட், வெங்காயம் 1/2 கிலோ, தக்காளி 1 கிலோ, பச்சை மிளகாய் 5 புதினா 1 கட்டு, கொத்தமல்லி 1/2 கட்டு, இஞ்சி 2 துண்டு, பூண்டு 5 பல், கசகசா 1 டீஸ்பூன், சோம்பு 1 டீஸ்பூன், முந்திரி 10, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், பால் 1 கப், பிரஷ் கிரீம் 2 மேசைக்கரண்டி, உப்பு தேவையானவை, வெண்ணை 2 டீஸ்பூன், எண்ணை 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய்  தலா 2 .

செய்முறை

உப்பு, வெண்ணை, எண்ணை மற்றும் பனீரைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை மற்றும் வெண்ணை சேர்ந்து அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். எண்ணை பிரிந்ததும் துண்டுகளாக வெட்டி வைத்து இருக்கும் பனீரை, மசாலாவுடன் சேர்த்து பத்து நிமிடம் சிம்மில் வேகவிடவும். பிறகு பால் மற்றும் பிரஷ்கிரீம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். பத்து நிமிடம் அடுப்பில் வைத்துவிட்டு பரிமாறவும். பூரி, சப்பாத்தி, நெய் சோறுக்கு பெஸ்ட் சாய்ஸ்.

டிசம்பர், 2013

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com