பர்மிய மலைப்பாம்பு
பர்மிய மலைப்பாம்பு

மலைப் பாம்புகளின் பிடியில் திணறும் அமெரிக்க மாகாணம்!

நம்மூரில் வளர்ந்து கிடக்கும் பார்த்தீனிய செடிகளை அழிக்க நாம் திணறுவது போல், அமெரிக்காவும் ஒரு உயிரினத்தை அழிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கர்கள், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 1996ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை மட்டும் ஒரு லட்சம் மலைப்பாம்பு குட்டிகளை செல்லமாக வளர்க்க இறக்குமதி செய்துள்ளனர்.

செல்லப்பிராணியாக இறக்குமதி செய்யப்பட்ட பர்மிய மலைப்பாம்புகள் 12 அடி வரை நீளமாக வளரும் என்பதை அறிந்திராத அமெரிக்கர்கள், அதை வளர்ப்பதைக் கைவிட்டனர். கொண்டுபோய் காட்டுப்பகுதிகளில் விட்டுவிட்டனர். இதில் தெற்கு ஃப்ளோரிடா வனப்பகுதிகளில் விடப்பட்ட மலைப்பாம்புகள், அந்தப் பிராந்தியத்தின் பூர்வீக உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறின. இதற்கிடையே, உஷாரான அமெரிக்க அரசு மலைப்பாம்பு குட்டிகளை இறக்குமதி செய்ய வர தடைவிதித்துள்ளது.

இப்பாம்புகளால், ஃப்ளோரிடாவின் எவர்க்லேட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த முயல்கள், ரக்கூன்கள் உள்ளிட்ட சில வகை உயிரினங்கள் பெரும்பகுதி குறைந்துள்ளதாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

புல்வெளிகள், சதுப்புநிலங்கள் மற்றும் மரங்களில் மறைந்து வாழும் மலைப்பாம்புகள் பிற ஊர்வனங்கள், பறவைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி தள்ளின. நிலத்தில் மட்டுமில்லாது இவை நீரிலும் நீந்தக்கூடியவை என்பதால், முதலைகளையும் உணவுக்காக வேட்டையாடுகின்றன.

இப்படி ஃப்ளோரிடாவின் சதுப்புநில வனப்பகுதியில் உள்ள பல்வேறு வகை உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வரும் மலைப் பாம்புகளைக் கொன்று தின்னும் அளவுக்குத் திறன்மிக்க வேட்டை குணம் கொண்ட உயிரினம் எதுவும் அந்தப் பகுதியில் இல்லை. அதனிடமிருந்து தப்பிக்கும் ஒரே உயிரினம் கருப்பு நிற எலிகள் என்றும், அவை அமெரிக்காவின் பூர்வீக உயிரினம் இல்லை என்றும் கூறுகின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.

தற்போதுதான் இந்த மலைப்பாம்பின் நடமாட்டத்தை அறிந்து கொண்ட பூர்விக உயிரினங்கள் அதைத் திருப்பி தாக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர். இருந்தாலும், இது இவற்றின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துமா என்றும் சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்காவின் சூழலியலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பர்மிய மலைப்பாம்புகளைக் கொல்வதற்காக ஆண்டுதோறும் பாம்பு வேட்டைப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியானது கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. அதேபோல், இப்பாம்புகளைக் கொல்வதற்கென்றே குழுக்கள் உள்ளன. பாம்புகளைத் தேடித்தேடிப் பிடித்து கருணை கொலை செய்தே அவற்றின் பணி. மைக் கிர்க்லேண்ட் என்ற உயிரியலாளர் மட்டும் இதுவரை 8000 மலைப்பாம்புகளை கருணை கொலை செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் அமெரிக்க ஆய்வாளர்களும் பர்மிய மலைப்பாம்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

எப்படியெல்லாம் பிரச்னை வருது பாருங்க...!

logo
Andhimazhai
www.andhimazhai.com