பாலிசிஸ்ட்டிக் ஓவேரியன் டிசீஸ் எனப்படும் கருப்பைக் கட்டிகள் பிரச்னை உள்ள பெண்களில் 40 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் வரும் ஆபத்து உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இலக்னோவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பிசிஓ டீஸ்டிக்மாட்டைஸ்டு பவுண்டேசன் நிறுவனர் டாக்டர் சீமா பாண்டே, இதைப் பற்றி விரிவாகப் பேசினார்.
முன்கூட்டியே இந்தப் பிரச்னையைக் கண்டறிவது கருப்பைக் கட்டிகளைப் போக்குவதில் உதவியாக இருக்கிறது என்று அந்த அறக்கட்டளையின் வல்லுநர்களும் வலியுறுத்தினர்.
” பிசிஓடி பிரச்னை உள்ள பெண்களுக்கு முப்பது வயது ஆகும்போது 40 சதவீதம் பேருக்கு சர்க்கரை வருகிறது. மூப்பு காரணமாக மிகை இரத்த அழுத்தம், இதயநோய், மூளை இரத்தக்கசிவு, கருப்பைப் புற்றுநோய்கூட வரக்கூடும்.” என்றும் மருத்துவர் சீமா பாண்டே கூறினார்.
உலக அளவில் இந்தியாவில் பிசிஓடி பிரச்னை அதிகமான அளவில் காணப்படுகிறது. இதைப் பற்றி குறைவாக கவனம்செலுத்துவதால் விழிப்புணர்வும் நடவடிக்கைகளும் இல்லாமல் இருக்கிறது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் ஒவ்வொரு நான்காவது, ஐந்தாவது சிறுமியும் இந்தப் பிரச்னையால் அவதியுறுவதாகவும் வாழ்க்கைமுறைக் கோளாறுகளால் ஏற்படும் பிரச்னைகளை சிறுமிகள் இடையே முன்கூட்டியே விழிப்பூட்டி தடுக்கவேண்டும் என்றும் பிசிஓடி அறக்கட்டளை வல்லுநர்கள் கூறினர்.