அமீபா மூளைக் காய்ச்சலால் கேரளாவில் இதுவரை 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
சுகாதாரமற்ற நீரில் குளிக்கும் போது, 'மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற அமீபா நுண்ணுயிரி, சுவாசப்பாதை வழியே ஊடுருவி, நேரடியாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதனால், காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி, மனக்குழப்பம், பிதற்றல், வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. இதற்கு, உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.
இந்த அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் உயிரிழப்பதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், உயிரை கொல்லும் புதிய வகை அமீபா மூளைக்காய்ச்சல், கேரள சுகாதாரத்துறைக்கு சவாலாக மாறியுள்ளது. அங்கு, 14 வயது சிறுவன் உட்பட, மூன்று சிறார்கள் உயிரிழந்த நிலையில் தமிழ்நாட்டில் பொது சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:
“தேங்கிய நீரிலோ, அசுத்தமான அல்லது மாசடைந்த நீரிலோ பொது மக்களும், குழந்தைகளும் குளிக்கக்கூடாது.
குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் துாய்மையான சூழலில் இருப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நீச்சல் குளங்கள் அனைத்திலும், வழிகாட்டுதலின்படி குளோரின் மருந்து கலப்பது அவசியம்.
மூளை அயற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோரை, தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தி சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
கேரளாவில் பரவி வரும் இந்த அமீபா மூளைக்காய்ச்சலை தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.