சுவாசப்பயிற்சி
சுவாசப்பயிற்சி

மறதி நோயிலிருந்து தப்பிக்க இதைச் செய்யுங்க!

வயதானவர்களைப் பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்று அல்சைமர் நோய். இதைத் தவிர்க்க அறிவியல் போராடி வந்தாலும் வெற்றியேதும் கிட்டவில்லை!

இந்நிலையில் மெதுவாக சுவாசிக்கும் பயிற்சி செய்வது பல நன்மைகளை ஏற்படுத்துவதோடு, அல்சைமர் போன்ற நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

மெதுவாக காற்றை உள்ளிழுங்கள். நுரையீரல் விரிவடைந்து நிரம்பியதும் ஐந்து எண்ணுங்கள். பின்னர் மெல்ல காற்றை வெளியே விடுங்கள். இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினந்தோறும் 20 நிமிடம் செய்து வந்தால், மனம் அமைதியடைவதோடு, அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிறார் அமெரிக்காவை சார்ந்த முதுமையியல் மற்றும் உளவியல் பேராசிரியரான மாரா மாதர். இது தொடர்பாக நடத்திய ஆய்வு முடிவின் அடிப்படையில் இ்த்தகவலைத் தருகிறார் இவர்.

ஆனால் நமக்குத்தான் இது ஏற்கெனவே தெரியுமே? மன அழுத்தம் குறைய, ரத்த அழுத்தம் குறைய, மன நிம்மதி அடைய என்றெல்லாம் பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சி உதவுகிறது அல்லவா? ஆனால் இது அல்சைமருடன் தொடர்புள்ளதாக சொல்லப்படுவதால் இந்த ஆய்வு முக்கியமானது.

அல்சைமர் நோய் எதனால் ஏற்படுகிறது

ரத்தத்தில் அமிலாய்ட் பீடா 40, 42 என்கிற இரு புரதங்கள் அதிகமாக இருந்தால் அல்சைமர் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆய்வில் 108 பேர் பங்கேற்றனர். அதில் பாதிப்பேர் கண்களை மூடி அமைதியாக இருக்கும் பயிற்சியை மேற்கொண்டனர். மீதிப்பேர் மேலே சொன்ன மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டனர். இரு குழுவினரும் 20-40 நிமிடங்கள் தினமும் ஐந்து வாரங்கள் செய்தனர்.

அவர்களின் ரத்த மாதிரியைப் பரிசோதித்தபோதுதான் ஆச்சர்யமான உண்மை புலப்பட்டது. மூச்சு பயிற்சி மேற்கொண்டவர்களின் ரத்தத்தில் இருந்த அமிலாய்டு புரதங்கள் அளவு குறைந்து காணப்பட்டது. வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் இருவரிடமுமே இந்த அல்சைமருடன் தொடர்புடைய புரதம் குறைந்திருந்தது.

எப்படி இது நடந்திருக்கும் என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை. ஆனால் மூச்சுப்பயிற்சியின்போது மூளையில் உள்ள கழிவு வேதிப்பொருட்கள் அகற்றப்பட்டு அவற்றால் உருவாகும் அமிலாய்டு புரதங்கள் குறைந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

அல்சைமருக்கான நவீன மருத்துவமே இந்த அமைலாய்டு புரதங்களைக் குறைக்கும் ஒரு மருந்தைப் பயன்படுத்துகிறது. மருந்துக்குப் பதிலாக மூச்சுப் பயிற்சியே போதுமென்றால் எவ்வளவு சிறப்பு...

ஆகவேவாரத்துக்கு ஐந்துமுறையாவது 20 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள் என்று சொல்கிறார் அந்த பேராசிரியர்.

அதுதான் எனக்குத் தெரியுமே என்றுதான் நாம் எல்லோரும் சொல்வோம். ஏனெனில் மூச்சுப்பயிற்சி என்பது நம் பாரம்பரிய முறையாகும். ஆனால் அதை முறையாகச் செய்வோர் குறைவே. ஆகவே இந்த அறிவியல் ஆய்வு முடிவினால் தூண்டப்பெற்று பெரும்பான்மையினர் செய்தால் நல்லதே.

என்ன சத்தத்தையே காணோம்? ஓ.. இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com