முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள்!

முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள்!
Published on

முதியவர்கள் தற்பொழுது தனித்து வாழும் நிலை கட்டாயமாகிவிட்டது. இவர்கள் வீட்டிலோ அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளிலோ ஓருவித அச்சத்துடனே வாழ்க்கையைக் கடக்கிறார்கள். சமீப காலத்தில் முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

நாம் தினசரி பத்திரி்கையில் பார்ப்பது முதியவர்களிடமிருந்து கழுத்து சங்கி­லி, நகைகளைப் பறிப்பது. அது மட்டுமில்லாமல் கீழேயும் தள்ளிவிடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டு முதியவர்கள் மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தப்படுகிறார்கள். தனியாக வசிக்கும் முதியவர்களின் இல்லத்திற்குச் சென்று பகல் நேரத்திலேயே திருடுவது, உதாரணம்: தண்ணீர் வேண்டும் என்றோ அல்லது கூரியர் தபால் வந்திருக்கிறது என்று சொல்லியோ வீட்டிற்குள் நுழைந்து முதியவர்களைத் தாக்குவது, திருடுவது.

சொத்து விஷயத்தில் முதியவர்களைத் தாக்குவது. சமீபத்தில் பத்திரிக்கையில் வந்த செய்தி: சொத்துக்காக மகனே அப்பாவைக் கொடூரமாகத் தாக்குவது.

சமீபத்தில் அதிகரித்துவரும் ஆன்லைன் மோசடி

முதியவர்களுக்கு தற்பொழுது உபயோகத்தில் உள்ள புதிய செல்போனின் செயல்பாட்டினை சரியாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இதைப் பயன்படுத்தி செல்போன் மூலமாக முதியவர்களை பல குற்றங்களுக்கு ஆளாக்குகிறார்கள். உதாரணம்: உங்களுக்கு ஒரு பார்சல் வந்து இருக்கிறது, அதை டெலிவரி செய்ய வேண்டும் என்றால் உங்கள் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதை எங்களுக்குத் தெரிவித்தால், உங்களுக்கு அந்த பார்சலை அனுப்பி வைக்கப்படும் என்பார்கள். அந்த ஓ.டி.பி. எண்ணைத் தெரிவித்தால் அடுத்த நிமிடமே உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பல லட்சம் கைமாறி விடும்.

இக்குற்றங்களிலிருந்து மீள என்ன வழி?

  • அறிமுகம் இல்லாவர்களிடம் பேசுவதையோ, அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதையோ தவிர்க்க வேண்டும்.

  • கதவுகளைக் கொஞ்சமாகத் திறக்கும் விதமாக கதவுக்கும் வாசக்காலுக்கும் இடையே சிறிய சங்கிலி­யைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

  • கதவில் மேஜிக் கண் (Magic eye), கேமரா, ஸ்பீக்கர் போன்ற நவீன சாதனங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

  • அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு முதியவர்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்து வைப்பது அவசர உதவிக்கு தேவைப்படும். வெளியூர் செல்லும்போது, காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது நல்லது.

  • வீட்டின் வெளியேயும், வீட்டின் உள்ளேயும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவை அவசியம் பொருத்திக் கொள்ள வேண்டும்.

  • சிறிது தூரம் வெளியே சென்றாலும் உங்களின் அடையாள அட்டையை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உங்களின் நோய்களைப் பற்றிய விவரம், எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் குடும்ப மருத்துவரின் செல்போன் நம்பர் அவசியம் இருக்க வேண்டும்.

  • வெளியே செல்லும்போது தேவையில்லாமல் அதிக நகைகளை அணிய வேண்டாம்.

  • விழாக்களுக்குச் செல்லும் போது முடிந்தவரை ஒரு துணையோடு செல்லுங்கள்.

  • பாதுகாவலர், வேலையாட்களை நியமிப்பதில் சற்று அதிக கவனம் தேவை. வீட்டு வேலைக்காரர்கள், டிரைவர் போன்றவர்கள் முன் பணத்தைப் பற்றியோ நகைகளைப் பற்றியோ பேச வேண்டாம்.

  • முதியோர் நல குழுக்களை அமைத்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அவசர உதவிக்கு, இவர்கள் உடனே வந்து தக்க உதவிகளைச் செய்வார்கள்.

ஆன்லைன் மோசடியைத் தவிர்க்க :

  • போனில் தெரியாத புது எண் இருந்தால் உடனே எடுக்க வேண்டாம்.

  • மறுபடியும் போன் வந்தால் யார் என்று உறுதி செய்த பின்னரே போனில் பேச வேண்டும்.

  • உங்கள் வங்கி எண்களை யார் கேட்டாலும் உடனே கொடுக்க வேண்டாம்.

  • ஓ.டி.பி. எண் என்று யாராவது கேட்டால் அதன் நம்பகத் தன்மையை தெரியாமல் கொடுக்க வேண்டாம்.

  • அடிக்கடி தொல்லை தரும் போன்கள் வந்தால் அந்த நம்பரைத் துண்டித்து விட்டு, முடக்கிவிட வேண்டும்.

  • உங்களுக்கு அடிக்கடி தொல்லை தரும் போனில் குறுஞ்செய்திகள் வந்தால் உடனே சைபர் கிரைம் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் (சைபர் கிரைம் எண் : 1930)

மேற்குறிப்பிட்ட பல வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்து முதியோர் நலக் குழுக்கள் உதவியுடன், தனித்து வாழ்ந்தாலும் ஒரு துணையுடனேயே வாழ்வதாக எண்ணிப் பயமின்றி வாழலாம்.

(டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல மருத்துவர் சென்னை)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com