வயது காரணமாக அருகில் உள்ள பொருட்களையே வெறும் கண்களால் பார்க்கமுடியாமல், கண்ணாடி அணிவது கட்டாயம் எனும் நிலை உருவாகும். குறிப்பாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெள்ளெழுத்து (presbyopia) பிரச்னை ஏற்படக்கூடும்.
உலக அளவில் 109 கோடி முதல் 180 கோடி பேர்வரை இந்த பாதிப்பு இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தீர்ப்பதற்காக எண்டாடு எனும் மருந்துநிறுவனம் சொட்டு மருந்து ஒன்றைத் தயாரித்துள்ளது. இதைக் கண்ணில் விட்டுக்கொண்டால் கால் மணி நேரத்தில் வெள்ளெழுத்து சரியாகிவிடும் எனக் கூறப்படுகிறது. அதாவது, அதன்பிறகு கண்ணாடி இல்லாமல் எதையும் வாசிக்கலாம்.
இந்த சொட்டு மருந்துக்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர்-டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தற்காலிக அனுமதியை அளித்திருந்தது.
வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இந்த மருந்து உள்நாட்டுச் சந்தையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.