நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சரியான முறையில் உணவு சாப்பிடவேண்டும். துரித உணவுகள் சாப்பிடக்கூடாது. புகை. மது கூடவே கூடாது, குளிர்பானங்கள், இனிப்புகள் எதுவும் கூடாது என்றெல்லாம் சொல்லப்படுவது பொதுவான நியதி. ஆனால் பல ஆண்டுகளாக புகைப்பிடிப்பவர்கள், மேலே சொன்ன எதையும் செய்யாமல் இஷ்டத்துக்கு வாழ்பவர்கள் 90 வயதைத் தாண்டி வாழ்வதும் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் வாரன் பஃப்பெட்டுக்கு வயது 94. தன் 11 வயதில் பங்குச் சந்தையில் நுழைந்த இவருக்கு 148 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளது. பெர்க்ஷையர் ஹாத்வே என்ற இவரது கம்பெனி 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக இந்த ஆண்டு மாறியது.
நீண்ட நாள் வாழ்வதற்கான மருந்து பணம் நிறைய வைத்திருப்பதா என்று நினைக்காதீர்கள். வாரன் பஃப்பெட்டின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் சத்துமிக்க ஆரோக்கிய உணவுகள் என்று நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.
‘இன்னமும் 6 வயது பையனைப்போல்தான் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்கிறார் பஃப்பெட். அதாவது உருளை கிழங்கு குச்சிகளை விரும்பி சாப்பிடுகிறார். அத்துடன் 12 அவுன்ஸ்கள் கொண்ட ஐந்து கொகோ கோலா குப்பிகளை தினமும் அருந்துகிறார். தினமும் காலையில் மெக்டொனால்டு கடைக்குப் போகும் அவர் அங்கே 3.17 டாலருக்கு விற்கும் காலை உணவு பேக்கேஜை வாங்கி சாப்பிடுவார். அதில் என்ன இருக்கும்? இரண்டு சாசேஜ் பேடீஸ்கள், ஒரு சாசேஜ், ஒரு முட்டை, சீஸ் ஆகியவை இருக்கும். அப்படி இல்லையெனில் ஒரு பன்றிக்கறித் துண்டு, முட்டை, சீஸ் ஆகியவை இருக்கும். இவற்றுடன் சேர்த்து தன் பிரியமான கோக் குடிப்பார்.
மதிய உணவு சில்லி சீஸ் ஹாட் டாக், ஐஸ்கிரீம். அவ்வப்போது மிட்டாய்கள். உணவில் இஷ்டத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுவார்.
பில் கேட்ஸ் வீட்டில் பஃப்பெட் தங்கியபோது காலை உணவாக ஓரியோ பிஸ்கட்டை ரசித்து விழுங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஹம்பர்கர்கள், ஐஸ்கிரீம், கோக் இதுதான் அவர் விரும்பி சாப்பிட்டது. இளைஞர்களுக்கு இவர் ஒரு தவறான சாப்பாடு உதாரணம்தான். ஆனால் எப்படியோ இவருக்கு மட்டும் ஒத்துவருகிறது என்றார் பில் கேட்ஸ்.
ஆனால் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும்தான் இப்படி ஆள் ஒழுங்கீனமாக இருக்கிறார். மற்ற சில விஷயங்களில் கில்லி. இவ்வளவு பெரிய நிறுவனத்தை இந்த வயதிலும் நிர்வகிக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருப்பதற்கு சில நல்ல பழக்கங்கள் அவரிடம் இல்லாமல் இருக்குமா?
விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து… இல்லைப்பா.. இல்லை. என்ன நடந்தாலும் சரி.. தினமும் இரவில் எட்டுமணி நேரம் விடாப்பிடியாகத் தூங்கிவிடுவாராம் இந்த விடாக்கண்டன்!
அடிக்கடி சீட்டு ஆடுவார். நம்மைப் போல் ரம்மி, மங்காத்தா இல்லை. பணக்காரர்கள் ஆடும் ப்ரிட்ஜ் எனப்படும் சீட்டாட்டம். நிறைய மூளைக்கு வேலை தரும் ஆட்டமாம்!
அதிகம் பரபரப்பாக வேலைகளை வரிசையாக அடுக்கி வைத்துக்கொள்வது இல்லை. பெரும்பாலும் ஃப்ரீயாகவே இருப்பார். தனக்குப் பிடிக்காத வேலைகளை பெரும்பாலும் செய்வது கிடையாது.
தினமும் நான்கைந்து மணி நேரம் புத்தகம் படிப்பதில் செலவிடுவார்.
மகிழ்ச்சியாக இருப்பதும் நல்ல உறவுகளை அருகில் வைத்திருப்பதுமே தன் நீண்ட வாழ்நாளுக்குக் காரணம் என்பார் வாரன் பப்பெட்! நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது இதைத்தான். அவர் கோக் குடிப்பதையும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் அல்ல.
நமக்கெல்லாம் தெரிந்த இன்னொரு அமெரிக்கர் இருக்கிறார். அவர் சாப்பிடுவதைக் கேட்டால் ஆச்சர்யத்துக்குக் குறைவே இருக்காது. 78 வயதாகும் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வாகி இருக்கும் டொனால்ட் ட்ரம்பைத்தான் சொல்கிறோம். அவரது அரசியல் போலவே அவரது சாப்பாடும் எடக்கு முடக்காகத்தான் உள்ளது. அவர் பிட்சா சாப்பிடுவார். ஆனால் அதன் கீழ் இருக்கும் மாவுப்பகுதியை சாப்பிடவே மாட்டார். அத்துடன் பிட்சா துண்டின் நடுவில் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஓரத்தை விட்டுவிடுவாராம்!
எப்போதும் கிருமித் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சம் அவருக்கு உண்டு. எனவே அவர் பெரும்பாலும் பாஸ்ட் புட் அயிட்டங்களைத் தான் சாப்பிடுவார். அவைதான் தூய்மையாக இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு. அடிக்கடி மெக்டொனால்டின் பிக்மேக் எனப்படும் மாட்டுக்கறி பர்கருடன் டயட் கோக் அருந்துவார். போனமுறை அவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது மெக்டொனால்ட் பாஸ்ட் புட் அயிட்டங்களை ரெடியாக வைத்திருப்பார்களாம். அதிபரின் ஜெட் விமானத்திலும் அவைதானிருக்குமாம். அவற்றுடன் டயட் கோக் கட்டாயம்!
ஒரு நாளைக்கு 12 கேன் டயட் கோக் குடிப்பாராம்! மதுவும் காபியும் அவர் தொடாத பானங்கள். ஐஸ்கிரீமும் ஓரியோ பிஸ்கட்டும் உண்டு. வீட்டிலிருக்கும் போது நன்கு சமைக்கப்பட்ட ’ஸ்டீக்’ மாட்டிறைச்சி சாப்பிடுவார்!
காலையின் பேக்கனும் முட்டையும் சாப்பிடுவார் என்றாலும் பெரும்பாலும் காலை உணவை சாப்பிடாமல் தவறவிட்டுவிடுவாராம்! இரவு உணவாக சில பல பர்கர்கள், சாண்ட்விச்சுகள், சாக்கலேட் ஷேக் என வெளுத்துக்கட்டுவார்.
ஆரோக்கிய விரும்பிகள் பலருக்கும் ட்ரம்பின் சாப்பாட்டுப் பழக்கம் நிச்சயம் ஒரு மினி ஹார்ட் அட்டாக்கையே கொடுத்துவிடக்கூடும்.
இதற்கு நேர் எதிர் நமது பிரதமர் மோடி. சுத்த சைவமே சாப்பிடுகிறவர். மாலை ஆறு மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடுவது இல்லை. தினமும் மூன்றரை மணி நேரம் மட்டுமே தூக்கம் என்றும் சொல்லப்படுகிறது. காலை நடை, யோகா போன்றவை அவரது பிட்னெஸ் ரகசியங்கள்.
தமிழக அரசியலில் இரு துருவங்களாக இருந்தவர்கள் பெரியாரும் ராஜாஜியும். இருவருமே தொண்ணூறு வயதைக் கடந்து கடைசிவரை அரசியலில் துடிப்போடு இருந்தார்கள். ஆனால் இருவரின் வாழ்க்கை முறையும் நேரெதிர். பெரியார் இஷ்டத்துக்கு சாப்பிடுவார். நாக்கைக் கட்டவே மாட்டார். ராஜாஜி சுத்த சைவர் மட்டுமல்லாமல் மிக ராணுவ ஒழுங்குடன் கூடிய வாழ்க்கை முறையை வைத்திருந்தவர். இருவரின் கொள்கைகளும் நேரெதிரானவை என்பதும் சுவாரசியம்.
சென்னையில் 100வயதைத் தாண்டி வாழ்ந்தார் ஒரு பிரபல யோக ஆசிரியர். அவர் படிக்கட்டில் தவறி விழுந்ததால் இறந்துபோனார். இல்லையெனில் அவர் இருந்த ஆரோக்கியத்துக்கு இன்னும் கணிச ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். அவரது மகனும் சிறந்த யோக ஆசிரியர். ஆனால் ஆயுள் எழுபதுகளிலேயே முடிந்துவிட்டது!
தொண்ணூறு வயதைத் தாண்டியும் புகை பிடித்துக்கொண்டும் மது அருந்திக்கொண்டும் ஜாலியாக வாழ்க்கையைக் கடப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் நிச்சயமாக மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை வாரி வழங்குகின்ற ஜீவன்கள்தான். உலகெங்கும் இதுதான் நிலை.
அமெரிக்காவில் ஓர் ஆராய்ச்சி செய்தனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அங்கே குடிபெயர்ந்த யூதர்களிடமும் அங்கேயே பிறந்து வளர்ந்த யூதர்களிடமும் போய் நீண்ட ஆயுளுடன் வாழும் 500 பேரைத் தேர்வு செய்தனர். அவர்களின் சராசரி வயது 97.3. இவர்களின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்? ஒழுக்கமான வாழ்க்கை முறையா என்றால் பெரும்பாலும் இல்லை. இவர்களில் 50 % பேர் உடல் பருமன் கொண்டவர்கள். இவர்களில் 60% ஆண்களும், 30% பெண்களும் நீண்டகாலமாக புகை பிடித்தவர்கள். இவர்களில் பாதிப்பேர்தான் ஓரளவுக்கு உடற்பயிற்சி செய்வதாகக் கூறினர்.
இதில் ஒரு பெண்மணி 95 ஆண்டுகளாகப் புகைபிடிப்பதாகச் சொல்லி ஆராய்ச்சியாளர்களை மயங்கி விழச் செய்தார். இந்த பெண்மணிக்கு நான்கு சகோதர சகோதரிகள். இவர்கள் அனைவருமே 100 ஐத் தாண்டி வாழ்ந்தவர்கள்.
இந்த நீண்ட ஆயுள் கொண்டவர்களின் மரபணுவை ஆராய்ந்ததில் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்யும் ஒரு ஜீன் வரிசையைக் கண்டறிந்துள்ளனர். இதே செயல்பாட்டைச் செய்யக்கூடிய மருந்தைக் கண்டுபிடிக்க மருந்து நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
நம் தாத்தா 90வயது வரை ‘தம்’ அடித்துக்கொண்டிருந்தார் என நினைத்து நாமும் செய்தால் உதவாது. என்னதான் அப்படி இருந்தாலும் வாழ்க்கை முறை என்று ஒன்று நிச்சயம் உள்ளது. அது நம் கையில் இருப்பது. மரபணுக்களின் செயல்பாட்டை நம்மால் நிச்சயம் என சொல்லமுடியாது.