கோடையை சமாளிக்க எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

கோடையை சமாளிக்க எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரிக்கும் கோடையாக இது உள்ளது. இதை சமாளிக்க தண்ணீர் குடிக்கவேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எம்புட்டு தண்ணீர் குடிப்பது அப்பு?

பொதுவாக சொல்லப்படுவது எட்டு கிளாஸ் குடிக்கவேண்டும் என்பது.

இதை தெரிந்து கொள்வதற்கு முன்னால், நம் உடலில் எவ்வளவு நீர்ச்சத்து உள்ளது என்று தெரிந்துகொள்வோம். சராசரியாக நமது உடலில் 60 சதவீதம் அளவுக்கு அதிகமான நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. உங்கள் இதயம் மற்றும் மூளையில் முக்கால் பகுதி தண்ணீர்தான்!, நுரையீரலில் 83%, தோலில் 64 %, எலும்பில் 31% என இருப்பது தண்ணீர்தான்! நம் உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் நீர்ச்சத்து இன்றியமையாதது. உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தவும், சத்துக்களை உடல் முழுக்க கொண்டு செல்லவும், கழிவுகளை அகற்றவும், மூட்டுக்கள் மற்றும் திசுக்கள் இலகுவாக இயங்குவதற்கும், உடலின் திரவப் பொருட்களை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் நீர்ச்சத்து உதவிக்கரமாக இருக்கிறது.

நம் உடலில் உள்ள நீர்ச்சத்தானது, நாம் சுவாசிக்கும் போதும், சிறுநீர் கழிக்கும் போதும், உணவு செரிமானத்தின் போதும் குறைகிறது. இப்படி குறையும் நீர்ச்சத்தை மீண்டும் ஈடு செய்ய வேண்டும். இல்லையெனில், உடல் பலவீனம் அடையும். நம் உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடிப்பதன் மூலம் திறம்பட சிந்திக்கவும், நல்ல மனநிலையைப் பெறவும், வேகமாக செயல்படவும் முடியும்‌. அதேபோல், மலச்சிக்கல், சிறுநீரக கல், சிறுநீர் தொற்று போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

நம்மால் உணவு உண்ணாமல் மூன்று வாரமோ அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களோ கூட உயிர் வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. நீர்ச்சத்தை சார்ந்தே நம் உடலின் இயக்கும் உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது உடலுக்கு போதுமானதாக இருக்கும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. இந்த அளவானது பாலினம், வயது, உடல் உழைப்பு, காலநிலைக்கு ஏற்ப மாறுபடலாம்.

உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரிக்காய் போன்றவற்றை உட்கொள்ளலாம். நாம், சரியான தண்ணீர் குடிக்கின்றோமா என்பதை உடலின் சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம். மஞ்சளாகப் போனால் மகனே தண்ணீர் நிறைய குடி என அது சொல்வதாகப் புரிந்துகொள்ளுங்கள்!

தண்ணீரை சீரான இடைவெளியில் குடிக்க வேண்டும். இதற்காக தண்ணீர் பாட்டிலை மேசையில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் என்ன சிக்கல் என்றால் பெரிய தண்ணீர் பாட்டில் பெரிதாக இருந்தால் இவ்ளோ தண்ணீரை எப்படி குடிப்பது என்ற மிரட்சி ஏற்படும். சின்ன சின்ன பாட்டிலாக இருந்தால் தொடர்ந்து அருந்தும்போது அதிகமாக அருந்த உதவியாக இருக்கும்.

தண்ணீரில் ஐஸ் கட்டிகளையோ, பழத்துண்டுகளையோ சேர்த்து கொள்ளலாம். அருந்த சுவையாக இருக்கும்.

ஒருநாளில் பொதுவாக எட்டுமுறை எட்டு அவுன்ஸ் தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வார்கள் 8 X 8 என்ற விதி மேலை நாடுகளில் சொல்லப்படுகிறது. அவுன்ஸ் என்பது உத்தேசமாக 250 மிலி என வைத்துக் கொண்டால் இரண்டு லிட்டர்! ஆனால் நம் ஊரில் இப்போது அடிக்கும் வெயிலுக்கு இரண்டு லிட்டர் பத்தாது.. கூடுதலாகக் குடியுங்கள்!

நீர்ச்சத்து தண்ணீர் குடிப்பதால் மட்டும் வருவது இல்லை. நம் உணவிலிருந்தும் பெறப்படுகிறது. கூழ், மோர், பழைய சாதம், கஞ்சி, பழங்கள், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும்போது நம்மையறியாமல் மேலும் நீர்ச் சத்தைப் பெறுகிறோம்!

ஆகவே நண்பர்களே.. குடியுங்கள் குடித்துக்கொண்டே இருங்கள்.... நாம் தண்ணீரைச் சொல்கிறோம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com