எப்பவும் களைப்பாவே இருக்கா? இதைப் படிச்சிருங்க!

இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (Insulin Resistance)
இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (Insulin Resistance)
Published on

தெரிந்துகொள்வோம்: இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (Insulin Resistance)

இன்றைய தேதிக்கு வாழ்க்கை முறை மாற்றங்களால் வரும் முக்கிய நோய்கள்: இதய நோய்,  கான்சர், அல்சைமர்ஸ், நீரிழிவு,  மற்றும் கல்லீரல் நோய்கள்.

இவை எல்லாவற்றையும் எடுத்துப்பார்த்தால் பெரும்பாலும் இவற்றுக்கான காரணிகளில் ஒன்றாக இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் இருக்கிறது.

இந்த பிரச்னை பற்றியும் அதிலிருந்து  மீள்வதற்கான வழிகளைப் பற்றியும் மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை இதில் பார்க்கலாம்.

சாப்பிட்ட பிறகும் பசிக்கிறதா?

நன்றாகத் தூங்கி எழுந்தபிறகும் தூக்கம் தூக்கமாக வருகிறதா? களைப்பாக இருக்கிறதா?

என்ன பண்ணினாலும் தொப்பை பெருத்துக்கொண்டே போகிறதா?

யோசிக்கவே முடியாத அளவுக்கு மூளை குழம்பிப் போய்விடுகிறதா?

இதெல்லாம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்( இ.ரெ) அளிக்கும் கொடைகள். அமர்ந்துகொண்டே செய்யும் வேலை, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை ஆகியவை இன்றைக்கு சகஜம். இவற்றால் வருவது இ.ரெ.

என்ன இது?

இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கும் ஒரு ஹார்மோன். உணவில் இருந்து வயிற்றில் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் கலக்கும் சர்க்கரையை செல்கள் பயன்படுத்திக்கொள்ள அவற்றுக்குள் அனுப்பும் கதவைத்திறக்கும் ஒரு சாவி.

இ.ரெ. என்றால் இந்த சாவி சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம். ஆகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு பெருகும். இந்த சர்க்கரை கொழுப்பாக மாறி, உடலுறுப்புகளில் படிந்துவிடும். 

இதைத் தொடர்ந்து களைப்பு, கொழுப்பு அதிகரிப்பு, மூளை அயற்சி, மூட்டு வலி போன்றவை ஏற்படும்.

இதையடுத்து ஆரம்பத்தில் பார்த்த நோய்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கப்படும். குறிப்பாக நீரிழிவு நோய்.

எப்டிப்பா சரி செய்றது?

செய்யலாம். பின் வரும் சில டிப்ஸ்களைக் கடைப்பிடித்தால் இ.ரெ. குறைக்கலாம்.

1)    உணவில் மாவுச்சத்தைக் குறைக்கவேண்டும்

2)    புரதத்தைக் கூட்டவேண்டும்

3)    நார்ச்சத்துகளை அதிகரிக்கவேண்டும்

4)    உடற்பயிற்சி செய்யவேண்டும்

5)    வேளா வேளைக்குத் தூங்க வேண்டும்.

இதை எப்படிச் செய்யலாம் எனில் ஒரு நாளைக்கு நீங்கள் எடுக்கும் மாவுச் சத்து உணவு 100 கிராமுக்குக் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். புரதம் ஒரு வேளைக்கு ஆண் என்றால் 50 கிராமும் பெண் என்றால் 30 கிராமும் எடுக்கவேண்டும். ( ஒரு முட்டையில் 13 கிராம் புரோட்டின் உள்ளது)

புரதம் அதிகம் எடுத்தால் அதிக தசை வளர்ச்சி ஏற்படும். அதற்கு ஏற்ப எடை தூக்கும் பயிற்சிகள் செய்தால் நல்லது. நல்ல விதத்தில் வளர்ச்சி ஏற்படும்.  அதிகரிக்கும் தசையில் சர்க்கரை உறிஞ்சப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். எனவேதான் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளில் குறிப்பாக எடை தூக்கும் பயிற்சிகளைச் செய்யவேண்டும் என்று சொல்லிவருகிறார்கள்.

தினமும் அரை மணி நேரமாவது சூரிய ஒளி உடலில் படுமாறு உங்கள் நாளை அமைத்துக்கொள்ளுங்கள்.( விட்டமின் டி பெற). ஏழு- எட்டு மணி நேர உறக்கம் ( கார்ட்டிசால் அளவு குறையும். சர்க்கரையை உடல் பயன்படுத்துவது முறைப்படும்.)

பட்டினி கிடத்தல்: அதாவது தினமும் 12-14 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் பட்டினி இருந்தால்  ரத்தத்தில் சேரும் சர்க்கரையை சிறந்த முறையில் பயன்படுத்த உடலுக்கு பயிற்சி கிடைக்கும். தேவையற்ற எடை குறையும். பகலில் நல்ல உணவு; இரவும் காலையிலும் பட்டினி, இதுதான் intermittent fasting.  (இது எப்படி என்று இன்னொரு கட்டுரையில் விளக்கமாகச் சொல்வோம்)

அடுத்த முக்கியமான விஷயம் உணவில் நார்ச்சத்து அதிகப்படுத்துவது. ஆணுக்கு 35 கிராமும் பெண்ணுக்கு 25 கிராமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அனைத்து காய்கறிகள், ஆப்பிள், கேரட், அவக்கேடோ, ப்ரக்கோலி,  தோல் நீக்கப்படாத சிறுதானியங்கள், ஓட்ஸ் போன்றவை சிறந்த நார்ச்சத்துக்கான உணவுகள்.

சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் நடை.

இதையெல்லாம் சற்று கவனத்துடன் கடைப் பிடித்தால் நமது வாழ்க்கைத் தரம் உயரும். இ.ரெ. பிரச்னையை சமாளிக்கலாம். இதன் மூலம் வரக்கூடிய நோய்களைத் தள்ளிப்போடலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com