
மனநலத்தைப் புரிந்துகொள்ளும் பயணத்தில் நாம் நீண்ட நெடுந்தொலைவுக்கு வந்துவிட்டோம்.
ஆரம்பத்தில் மனம் என்பது உடலோடு தொடர்பில்லாத ஒரு தனி விஷயமாகப் பார்க்கப்பட்டது. காத்து கருப்பு, பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்படும் ஒரு விஷயமாகவே பார்க்கப்பட்டது.
பிறகு, மூளையின், மூளை நரம்புகளின் ஒரு செயல்பாடுதான் மனம் எனும் தெளிவு ஏற்பட்டது. நிகழ்காலத்தில் அந்த நரம்புகளின் செயல்பாடுகளை சீர்செய்வதன் மூலம் மனநல அறிகுறிகளைச் சரிசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நரம்புகள் ஏன் சிக்கலுக்கு உள்ளாகின என்ற தேடலில், ஆராய்ச்சி ஒரு பக்கமாகவே பிரதானமாக மேற்கொள்ளப்பட்டுவந்தது. நரம்புகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அந்த மாற்றங்களைச் சரிசெய்ய மருந்துகளைக் கொண்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டுவருகிறது.
ஆனால், அந்த நரம்புகளைப் பாதிக்கும் சமூக, பொருளாதார, வாழ்வியல் காரணிகள் பற்றி போதுமான அளவுக்கு விவாதமோ ஆராய்ச்சியோ இல்லை. இதனால் சிகிச்சை முறைகளில் இவற்றைச் சேர்க்க முடியாமலேயே காலம் கடந்துகொண்டிருக்கிறது.
இதனால் மனநலத்தைப் பொறுத்தவரையில் முழுமையாக சிகிச்சை அளிக்க முடியாமல் பல சமயங்களில் தடுமாறவேண்டி உள்ளது. சமூக, பொருளாதார, வாழ்வியல் காரணங்களைப் புறந்தள்ளும்பொழுது, மனநலச் சிக்கல்களைத் தனிமனிதப் பிரச்னையாக மட்டுமே பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தனி மனிதனுக்கு மருந்துகள் அல்லது உளவியல்ரீதியான சிகிச்சை அளிக்கப்பட்டு மனநலச் சிக்கல்களைச் சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சில உதாரணங்களைப் பார்ப்போம்.
உழைப்பும் குடியும்
தீவிர உடல் உழைப்பு சார்ந்த ஒரு வேலையில் ஈடுபடும் ஒரு நபரை எடுத்துக்கொள்வோம். அளவுக்கு மீறிய உடல் உழைப்பு, அதிக வேலை நேரம், குறைந்த ஊதியம் என்பன போன்ற பல காரணங்களால் தொடர்ந்து உடலும் மூளையும் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது (குறைந்த ஊதியத்தினால் பொருளாதார நிலையைச் சமாளிக்க அதிக நேரம் வேலைசெய்தால்தான் கட்டுபடியாகிறது. உடலுக்கும் மனதுக்கும் போதிய ஓய்வு அளிக்க இயலாமல் போகிறது).
இளம் வயதில் உடலும் மூளையும் இந்த அழுத்தத்தை ஓரளவு தாங்கிக் கொள்கிறது வயது ஏற ஏற உடலால் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள இயலாத பொழுது, தினமும் இரவு மூட்டும் ஜவ்வும் எலும்பும் தசையும் ஏற்படுத்தும் வலியிலிருந்து விடுபடவும், இவற்றால் ஏற்படும் தூக்கமின்மையிலிருந்து விடுபடவும் சமூகமும் அரசும் இதற்குத் தீர்வாகத் தரும் மதுவை அருந்தும் சூழ்நிலை ஏற்படுகிறது.
சிறிது சிறிதாக மது, மூளை நரம்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த மூளை மதுவுக்கு அடிமையாகி விடுகிறது. தற்போது உள்ள சிகிச்சை முறை, இந்தச் சங்கிலியின் இறுதிப் பகுதியைச் சரிசெய்ய முயற்சி செய்வதோடு மட்டும், தன் பொறுப்பை சுருக்கிக்கொள்கிறது. இதனால் பல சமயங்களில் மதுவிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் சிரமமாகி விடுகிறது.
குடும்ப, உறவுச் சிக்கல்கள்
நிகழ்காலத்தில் குடும்ப உறவுச் சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. கணவன்- மனைவி இடையே சிக்கல்கள், பெற்றோர்- குழந்தைகள் இடையே சிக்கல்கள், இதனால் அவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி கடைசியாக மனநல மருத்துவரிடமோ உளவியல் நிபுணரிடமோ சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்தச் சிக்கல்களுக்கான காரணங்களை முழுவதுமாக, ஆராயும்போது சமூக, பொருளாதார, வாழ்வியல் காரணங்கள் ஒரு முக்கியமான பங்கு வகிப்பது தெளிவாக உள்ளது.
கணவனின் வேலை நேரம் மிக அதிகமாக இருக்கும்போது தம்பதிகளுக்குள் போதுமான நேரம் கிடைப்பதில்லை. பெற்றோரின் வேலை நேரம் மிக அதிகமாக இருக்கும்போது குழந்தைக்கு ஆதரவான சூழல் இல்லாமல் போகிறது. வேலைக்குச் செல்ல நீண்ட பயண தூரம், சாலையின் தரம், போக்குவரத்து நெரிசல், குறைந்த விடுப்பு, குறைந்த ஊதியம், வேலையின் நிரந்தரமற்ற தன்மை, வேலை இடத்தில் நிலவும் போட்டிச் சூழல் என இவை அனைத்தும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அப்படியானவர்களுக்கு அதைக் காட்டும் இடமாக குழந்தையும் (பெரும்பாலானவர்கள் கணவர்கள் எனும் நிலையில்) மனைவியும் ஆகிவிடுகின்றனர்.
மருத்துவ விடுப்பு எடுப்பதுகூட சிரமமான காலகட்டமாக மாறி வருகிறது. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல, பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கைச் சூழல்களில் ஏற்படும் இது போன்ற தொடர அழுத்தங்களால், உடலிலும் மூளையிலும் சிறிது சிறிதாக மாற்றங்கள் தொடங்கி, இறுதியில் பெரிய பாதிப்பாக பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது, அவற்றில் ஒன்றுதான் மனநல பாதிப்பு.
அது, மனப்பதற்றமாகவும் (Anxiety), மனச்சோர்வாகவும் (Depression), தூக்கமின்மையாகவும்(Insomnia), போதைப் பழக்கமாகவும், எண்ணச் சுழற்சி (Obsessive-Compulsive Disorder) நோயாகவும், தற்கொலை முயற்சியாகவும் வெளிப்படுகிறது. எண்ணற்ற உடல் ரீதியான நோய்களாகவும் இந்த அழுத்தம் வெளிப்படுகிறது.
சர்க்கரைநோயும், இரத்த அழுத்தமும்
அதிக வேலை நேரம், வேலைக்குச் சென்றுவர நீண்ட பயண நேரம் போன்றவற்றால், போதுமான அளவு ஓய்வு இல்லாததாலும், உடற்பயிற்சிக்கான நேரம் இல்லாததாலும், சர்க்கரை நோயும் இரத்த அழுத்தமும் அதிகமாகி, அதனால் ஏற்படும் மனநலச் சிக்கல்களையும் அண்மைக்காலமாக தொடர்ச்சியாகப் பார்க்க நேரிடுகிறது.
ஜீன்கள்... அடுத்த தலைமுறை
சமூக, பொருளாதார, வாழ்வியல் காரணங்களால் ஏற்படும் தொடர் அழுத்தங்கள், தனிமனிதனுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படுத்தும் சிக்கல்களோடு நிற்பதில்லை. அவை ஜீன்கள்வரை மாற்றங்களை ஏற்படுத்துவதனால், அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்பதை மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளில் மாற்றம்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகத்தில் பல நாடுகள் சமூக, பொருளாதார, வாழ்வியல் காரணங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் சூழ்நிலையில், நமது நாட்டிலும் மனநல மருத்துவத் துறையில், மனநலத்தைத் தனிமனிதச் சிக்கலாகவும், மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் வரக்கூடிய சிக்கலாகவும் மட்டுமே பார்த்து, மருந்துகள் மூலமும் உளவியல் சிகிச்சை மூலமும் சரிசெய்வது மட்டும் போதும் என்று சுருக்கிக்கொள்வதாக நடப்பு நிலைமை இருக்கிறது.
இதைக் கைவிட்டு, சமூக, பொருளாதார, வாழ்வியல் காரணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றையும் சரிசெய்யும் நோக்கில் சிகிச்சை முறைகளை மேம்படுத்தினால்தான் மனநலமும் சமூக நலமும் மேம்படும்.
கூட்டு முயற்சி
இந்த முன்னெடுப்பில், மனநலம் என்பது மருத்துவத் துறையை மட்டுமே சார்ந்தது என்றில்லாமல், பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சி என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானது. இதை உள்வாங்கிக்கொண்டு அரசியல், பல்வேறு துறைகளில் அனைத்து கொள்கை முடிவுகளும் எடுக்கப்படும்போது, தனிநபரின், சமூகத்தின் மனநலத்திலும் உடல்நலத்திலும் உண்மையான மாற்றம் ஏற்படும்.
(ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தியதாகக் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டில் ’கேட்ட அனுபவங்கள், உண்மையான குரல்கள், உண்மையான மாற்றம்’ என்பதை உலக சுகாதார நிறுவனம் கருப்பொருளாக எடுத்துக்கொண்டுள்ளது.)