உஷார்... பாக்கெட் உணவால் 24 மன பாதிப்புகளுக்கு வாய்ப்பு உண்டு!
அதீதமாகப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உட்கொண்டவர்களிடம் நடத்திய ஆய்வில், அவர்களில் 24 வகையான மன பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒரு நாளுக்கு மூன்று முறைக்கு மேல் அதீத பதன உணவைச் சாப்பிடுபவர்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய உலகளாவிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. உலக அளவில் 3 இலட்சம் பேரிடமும் இந்தியாவில் மட்டும் 30 ஆயிரம் பேரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
வாயு ஏற்றப்பட்ட பானங்கள், வறுவல், பலகாரங்கள் போன்ற பொட்டலத்தில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள், பேக்கரியில் தயாரிக்கப்படும் பலவகை உணவுப்பொருட்கள் போன்றவை, அதீத பதன உணவுகள் என கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் ஆங்கிலம், இந்தி அறிந்தவர்களிடம்தான் இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. இந்தியாவில் இந்த வகை தின்பண்டங்களின் வர்த்தகம் 2011இலிருந்து 2021ஆம் ஆண்டில் 13.75% அளவுக்கு அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது என்றால், இதன் பயன்பாடு எந்த அளவுக்கு மக்களிடம் அதிக அளவில் மாற்றத்தை உண்டுபண்ணி இருக்கிறது என்பதை உணரமுடியும்.
மொத்தம் 26 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம், முதல் முறையாக உடல் பாதிப்பைக் காட்டிலும் மன பாதிப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் பொதுவாக உடல் பருமன், நீரிழிவு, இதயநோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது உறுதிசெய்யப்பட்டது. இந்த ஆய்வில்தான், மனரீதியான 24 அம்சங்களில் அதீதப் பதன உணவுகள் பாதிப்பை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆண், பெண் இரு பாலரிடமும் மன அழுத்த அறிகுறிகளான மிகைவருத்தம், உளைச்சல், நம்பிக்கையின்மை, உண்ணுவதில் அதிக நாட்டம் போன்றவை காணப்படுகின்றன.
இந்தப் பிரச்னை குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களைவிட, 18-24 வயதினரிடையே இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பதும் தெரியவந்துள்ளது. காரணம், இந்தப் பிரிவினர்தான் அதீதமாக பதனப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உண்கின்றனர் என்பதும் சேபியன்ஸ் லேப்பின் இந்த ஆய்வுத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆகையால் மக்களே, கொஞ்சம் அல்ல அதிகமாகவே கவனமாக இருக்கவேண்டும்!