அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம்

என்னையே காலி செய்துவிட்டதாக உணரும்போது எழுதுவதை நிறுத்துவேன்!

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கம் உலக வாசகவெளிக்காகத் தமிழில் படைப்புகள் எழுதுபவர். இவர் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்காகப் பல நாடுகளில் பணியாற்றியவர். கனடாவின் குடியுரிமை பெற்ற இவர், தமிழில் இரண்டு நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் உட்பட 30 நூல்களை எழுதியுள்ளார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. 1996-ல் தமிழக அரசு விருது, இலங்கை அரசு சாகித்ய அகாடமி விருது (1998) உட்பட உயர்ந்த இலக்கிய விருதுகள் பலவற்றைப் பெற்றவர்.

2014 இல், மார்க்கம் நகர சபை (கனடா) இலக்கிய விருதைப் பெற்றார். விகடன் இலக்கிய விருது (2012) மற்றும் மதிப்புமிக்க எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக (இந்தியா) இலக்கிய விருது (2013) மற்றும் கி.ரா விருது (2022) போன்ற விருதுகள் குறிப்பிடத்தக்கவை. இவரது கதைகள் வாசகர்களிடம் பிரபலமானவை. இவை மனித உரிமைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைப் பேசுகின்றன.

இலக்கியத்தை ஊக்கமூட்டி வளர்த்தெடுக்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார்.இலக்கியத் தோட்டம் என்கிற தொண்டு நிறுவனம் இலக்கியச் செழிப்பை உயர்த்திப் பிடிக்கும் பணிகளைச் செய்து வருகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் டொரண்டோ பல்கலைக்கழகங்களின் தமிழ் இருக்கை அமைப்புகளுக்கும் நிறுவனர் மற்றும் இயக்குநராக இருக்கிறார் .இது தமிழ் உயர்நிலைப் படிப்புக்கான ஓர் அறக்கட்டளையாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது கதைகள் பெங்குயின் புக்ஸ், 2014 (Many Road Through Paradise ) மற்றும் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 2016 (Uprooting the pumpkin ) ஆகியவற்றின் தொகுப்புகளில் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் இவரது மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை ஆட்டுப் பால் புட்டு, அமெரிக்காவிலுள்ள 'Narrative' இதழில் வெளிவந்தது .மற்றும் 'எகேலு' என்ற பெயரில் மற்றொரு சிறுகதை அமெரிக்காவின் Spillwords.com இல் வெளிவந்தது. மேலும் ‘Refugee Magistrate’ என்ற கதை ஸ்லோவேனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு SODOBNOST இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அவரை சந்தித்தபோது!

உங்கள் பார்வையில் இலக்கியத்தின் நோக்கம் என்பது என்ன?

நான் மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்தேன். நான் 8, அல்லது 9 வயதில் கவிதைகள் எழுதுவது வழக்கம். ஒருமுறை எங்களை விட்டு வேறு பள்ளிக்குச் சென்ற ஆசிரியருக்கு விடைபெறும் கவிதை ஒன்றை எழுதினேன். அப்போது இலக்கியத்தின் நோக்கம் பற்றி நான் சிந்திக்கவில்லை. எழுதுவது எனக்கு மகிழ்ச்சியைத் அளித்தது, அதைப் படிக்கும் நபருக்கும அது மகிழ்ச்சியைக் கொண்டு சென்றது.

வாழ்க்கையின் பிற்பகுதியில், எழுதுவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். எழுதுவது என்பது இசை அல்லது ஓவியம் போன்றது அல்ல, மேலும் ஏதோ ஒன்று. வாசகரின் வாழ்க்கையை மேம்படுத்த உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த உங்களிடம் ஓர் ஊடகம் உள்ளது. நாம் அனைவரும் வாழும் வாழ்க்கையினைச் சற்றே மேம்படுத்திச் சிறிது அறிவை வழங்கவும், சிறிது ஒளியைக் கூட்டவும் எழுத்து உதவுகிறது.

படிக்கவும் எழுதவும் உங்களைக் கொண்டு வந்தது எது?

நான் மேலே குறிப்பிட்டது போல வாசிப்பும் எழுத்தும் எனக்கு இயல்பாகவே வந்தன. என் பத்து வயதில் மிகவும் ஈடுபாடு கொண்ட சில நண்பர்களுடன் நான் ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினேன். நான் அதன் ஆசிரியராக இருந்தேன், நாங்கள் அனைவரும் கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகள் என்று பங்களிப்பு செய்தோம். அவற்றை எங்களிடையே பரப்பிக் கொண்டோம். பள்ளிப் பத்திரிகைக்கும், பின்னாட்களில் கல்லூரிப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தேன்.

என் வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் படிக்கும் பத்திரிகைகளை (அவை அனைத்தும் இரவல் வாங்கியவை) என்னைக் கெடுக்கும் என்று என் தந்தை எதிர்த்தார். எங்கள் வீட்டில் ஒரு புத்தகமோ பத்திரிகையோ இருந்ததில்லை. எங்கள் வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம் மட்டுமே.அதை என் தந்தை நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பதற்குத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

ஏற்கெனவே எனக்கு முன்பு படித்த எனது மூத்த சகோதரர்களின் பாடப்புத்தகங்களைத் தவிர என்னிடம் ஒரு புத்தகமும் இருந்ததில்லை.

எனக்குச் சொந்தமான புத்தகமாக நான் எழுதி வெளியிட்ட ஒரு புத்தகம் அமைந்தது .அந்தச் சாதனை எனது 27 வது வயதில் நடந்தது.

அதன் பிறகுதான், எனக்கான புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன்.

நீங்கள் 29 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு 58 வயதில் மீண்டும் எழுதத் தொடங்கினீர்கள். அதற்கு உங்களைத் தூண்டியது எது?

நான் சிறுவயதிலேயே ஆரம்பித்து உள்ளூர் பத்திரிகைகளில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளை எழுதினேன் . 25, 26 வயதில் நான் தீவிரமாக எழுத ஆரம்பித்தேன், எனது கதைகள் இந்தியாவிலும் இலங்கையிலும் வெளியிடப்பட்டன. எனது 27வது வயதில் சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்தேன், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நேரத்தில்தான் ஆப்பிரிக்காவில் நல்லதொரு வேலை கிடைத்தது.என் குடும்பத்துடன் அங்கு சென்றேன். குறைந்த வசதிகள் கொண்ட தொலைதூரப் பகுதியில் இருந்ததால் எனது முழு நேரத்தையும் எனது வேலையில் அர்ப்பணித்தேன். அங்கிருந்து உலக வங்கியில் சேர்ந்தேன்.பிறகு ஐ.நா சபையில் பணி. நான் எனது புதிய வேலைகளில் என்னை நிரூபிக்க வேண்டும், கடினமாக உழைத்தேன், பயணம் செய்தேன், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் சிறிதுகூட நேரம் ஒதுக்கவில்லை. நான் முழுவதுமாக செட்டில் ஆகி நல்ல நிலையை அடைந்தவுடன் விடுமுறைக்காக இந்தியா சென்று ஒரு டிரங்க் பெட்டி நிறைய தமிழ்ப் புத்தகங்களை வாங்கினேன்.

திரும்பியபோது அவற்றைப் படித்துப் பார்த்தபோது தமிழ் இலக்கியத் துறையில் பெரிய மாற்றம் இல்லை என்பதை உணர்ந்தேன்.

அந்தக்கால காலத்தில் நான் சற்றே பதற்றமடைந்தேன், நான் பின்தங்கியிருக்கிறேனோ, விட்ட இடத்தைத் தொட்டுச் சென்று பிடிக்க முடியாதோ என்று நினைத்தேன். நான் மீண்டும் எழுதத் தொடங்கினேன்.எனது எழுத்து நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது, பிறகு நான் திரும்பிப் பார்க்கவில்லை.

நீங்கள் எழுதுவதற்காக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பீர்களா? ஏன் எழுத வேண்டும்?

நான் ஏன் சிந்திக்க வேண்டும்? எழுதுவது என் விருப்பம். யாரும் என்னை வற்புறுத்தவில்லை, நான் விரும்பும் வரை தொடர்ந்து எழுதுவேன். நான் ராயல்டி பெறவில்லை, எனக்கு வருமானம் இல்லை, இதைச் செய்ய நான் பணத்தைச் செலவிடுகிறேன். நான் என்னைக் காலி செய்துவிட்டதாக உணரும்போது, அதாவது என்னிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்று எனக்குத் தோன்றும் போது எழுதுவதை நான் நிறுத்துவேன். எனது புத்தகங்களை விற்க நான் எந்த விளம்பரமும் செய்வதில்லை. நான் எழுதி தமிழ் மற்றும் ஆங்கிலம் என 30 புத்தகங்கள் உள்ளன. நான் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளை நடத்துவதில்லை. மக்கள் விரும்பினால் எனது புத்தகங்களை வாங்குவார்கள். எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவும் சில தீவிர வாசகர்களின் நல்ல வார்த்தைகளுக்காகவும்தான் எழுதுகிறேன்.

ஒருமுறை நான் ஒரு கடையில் 60 - 65 வயதுடைய ஒருவரைச் சந்தித்தேன். நான் சில பொருட்களை வாங்குவதில் மும்முரமாக இருந்தபோது, ​​அந்த நபர் என்னிடம் வந்து ‘ஹலோ’ சொல்லிவிட்டு, தன்னை எனது வாசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் மிகவும் அசாதாரணமான ஒன்றைச் செய்தார். அவர் தனது பையிலிருந்து ஒரு கோப்பை வெளியே எடுத்து என் கதைகளின் நகல்களைக் காட்டினார். ஏன் அவற்றை எடுத்துச் செல்கிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன், அவர் அவற்றை மீண்டும் மீண்டும் படிக்க விரும்புவதாகக் கூறினார். என்னுடைய பல கதைகளின் வரிகளை அவர் மேற்கோள் காட்டியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் வாழ்வில் மலரும் அப்படிப்பட்ட தருணங்களுக்காக வாழ்கிறேன்.

ஓர் ஆசிரியர் - அவரது எழுத்துக்கு மட்டுமல்லாமல், அவரது வாசகருக்கு எந்தளவுக்கு முக்கியமானவர்?

ஜீன் ஜெனட் (Jean Genet) பிரெஞ்சு மொழியில் எழுதினார். அவர் எனக்கு பிடித்த எழுத்தாளர் .ஆனால் அவர் ஒரு திருடன் மற்றும் சிறைத் தண்டனை அனுபவித்தவர். தமிழ்க் கவிஞரான பாரதி கஞ்சாவைப் பயன்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பாப்லோ நெருடாவின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சிலி நாட்டு தூதராக அவர் இலங்கையில் இருந்தபோது, ​​தன்னிடம் பணிபுரிந்த வேலைக்காரப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தவர். இந்தச் சம்பவத்தை அவரே தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார். அவர் செய்தது தவறு என்று கூட நினைக்கவில்லை, அதற்காகப் பெருமைப்பட்டாரோ என்னவோ? ஆனால் அவர் ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல மக்களிடையே மிகவும் பிரபலமானவரும் கூட. ஒரு முறை எழுபதாயிரம் பேர் மக்கள் கூடியிருந்த ஒரு மாபெரும் சபையில் அவர் தனது கவிதைகளைப் படித்தார். அவரது கடந்த காலத்தின் சம்பவம் காரணமாக நாம் அவரைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா?

புனைகதை என்று வரும்போது நான் ஆசிரியரின் பின்னணியைப் பார்ப்பதில்லை. நான் ஆசிரியரை, அவரது படைப்பின் தகுதியை வைத்து மட்டுமே மதிப்பிடுகிறேன்.

ஆங்கிலத்தில் தமிழ் மற்றும் சிங்கள எழுத்துகள் வெளிவருவது பற்றி உங்கள் கருத்து ?

அண்மைய ஆண்டுகளில் தமிழ் மற்றும் சிங்கள எழுத்துகள் சர்வதேச வாசகர்களைச் சென்றடைவதை நான் பார்க்கிறேன். அவர்கள் விருதுகளை வென்றுள்ளனர், மேலும் அவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால் அவை பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய முடிகிறது. இதெல்லாம் நல்ல செய்தி. அனுக் அருட்பிரகாசம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ‘தி ஸ்டோரி ஆஃப் எ பிரீஃப் மேரேஜ்’ எழுதி தெற்காசிய இலக்கியத்துக்கான டிஎஸ்சி பரிசை வென்றார்.

அது கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் விருதையும் பெற்றது. இலங்கையின் இனக்கலவரத்தை அடிப்படையாக வைத்து ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது பற்றி ‘A Passage North’ நாவலை எழுதினார். இந்த நாவல் 2021 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இடம் பெற்றது.

2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை சிங்கள எழுத்தாளர் ஷெஹான் கருண திலக தனது ‘The Seven Moons of Maali Almeida’ நாவலுக்காக வென்றார். வாழ்கிற மற்றும் இறந்தவர்கள் பற்றிய இந்தச் சுவாரஸ்யமான கொலைகள் சார்ந்த மர்ம நாவலை நான் படித்தேன். ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வரும் எழுத்துகள் உலகளவில் கவனிக்கப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசு கீதாஞ்சலி ஸ்ரீ, இந்தியில் எழுதிய புத்தகத்திற்காக வென்றது மற்றொரு உதாரணம். இது டெய்சி ராக்வெல் என்பவரால் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’(‘Tomb of Sand.’) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம் இதில் எந்த மொழியில் எழுதுவது என்பதில் நீங்கள் எப்போதாவது ஊசலாட்டத்தை,மன நெருக்கடியை எதிர்கொண்டதுண்டா?

இதில் எனக்கு எந்த குழப்பமும் ஏற்படவில்லை. நான் எப்பொழுதும் என் தாய்மொழியான தமிழில் எழுதுகிறேன்.எது தேவையோ அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டு தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, மற்றொன்று அச்சிடப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும்.

உலகப் புகழ்பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா அச்செபே (Chinua Achebe) தனது முதல் புத்தகத்தை ஆங்கிலத்தில் ‘திங்ஸ் ஃபால் அபார்ட்’( ‘Things Fall Apart.’) என்ற பெயரில் எழுதினார். இது ஆசிரியருக்கு உடனடி வெற்றியையும் உலகப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. துரதிர்ஷ்டவசமாக, அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் தனது தாய்மொழியான இக்போ மொழியில் எழுதுவதற்குப் பதிலாக அவரது எஜமானர்களின் மொழியான ஆங்கிலத்தில் ஏன் எழுதினார் என்று பலர் கேள்வி எழுப்பினர். ஓர் எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆங்கில இலக்கியத்தை வளப்படுத்துகிறது, ஆப்பிரிக்க இலக்கியத்தை அல்ல.

Ngugi Wa Thiango கென்யாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘வீப் நாட் சைல்ட்’( ‘Weep Not Child’ ) போன்ற அவரது புத்தகங்கள் பல சர்வதேச விருதுகளைப் பெற்றன. பின்னர், அவர் தனது தவறை உணர்ந்து தனது தாய்மொழியான கிகுயுவில் எழுதத் தொடங்கினார்.அவர் எனது மொழியை செழுமைப்படுத்துவதே எனது கடமை . மாறாக அந்நிய மொழியை அல்ல என்றார்.

நீங்கள் முக்கியமாக சிறுகதைகள் , கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வெளிப்பாட்டுக்கு சிறுகதையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

150க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் இரண்டு நாவல்களும் எழுதியுள்ளேன். சிறுவயதிலிருந்தே, சிறுகதை வடிவங்களில் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இயல்பாகவும் நிறைவாகவும் இருந்தது. நான் குறிப்பிட்டுள்ளபடி, எனது இரண்டு நாவல்களையும் எந்த அத்தியாயத்திலிருந்தும் படிக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போலவும், முழுவதையும் ஒருங்கிணைக்கும் போது ஜிக்ஜாக் புதிரைப் போலவும் பொருந்தி நாவலாக மாறும். இந்த வடிவத்தில் பலர் எழுதியுள்ளனர். ஆலிஸ் மன்ரோவின் ‘Dear Life’ நாவல் சிறுகதைத் தொகுப்பு. அதேபோல் தமிழில் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் பல சிறுகதைகளை உள்ளடக்கிய 'ஒற்றன் ' என்ற நாவலை எழுதியுள்ளார்.

2013ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு முன்பு எனது நேர்காணல் நடந்தது. சிறுகதைகள் எழுதி இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே எழுத்தாளர் இவர்தான். அதுவும் பெண் எழுத்தாளர் என்பது சிறப்பு.அவரிடம் ஏன் சிறுகதை வடிவில் எழுதுகிறீர்கள் என்று நான் கேட்டேன், தனது சொந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த இந்த வடிவம் சிறந்தது என்று பதிலளித்தார். அதனால் என்னுடைய பதிலும் அதுதான்.

நீங்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் பயணம் செய்திருக்கிறீர்கள் . மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தில் ஏதேனும் வித்தியாசத்தைக் கண்டீர்களா?

பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் , நான் பணிபுரிந்தவர்கள் பற்றிய பல கதைகள் என்னிடம் உள்ளன. அடிப்படையில் அவர்கள் அனைவரும் நல்லவர்கள், நேர்மையானவர்கள், அமைதியை விரும்புபவர்கள், அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் மக்கள் எங்கிருந்து வந்தாலும் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதை உணர்ந்தேன். அன்பு, கருணை போன்ற உணர்வுகள் எல்லா சமூகங்களிலும் ஒரே மாதிரியாகவே வியாபித்திருக்கின்றன.

நான் பணிபுரிந்த சியரா லியோனில் என் வீட்டில் ஒரு பாவ்பா (Paw Paw)மரம் இருந்தது, அது மிகவும் இனிப்பான பழங்களைக் கொடுத்தது. அவ்வழியே செல்லும் எவரும் மரத்தில் ஏறி பழங்களைப் பறிக்கலாம். நிலமும் மரங்களும் அவை விளைவிப்பதும் எல்லா மக்களுக்கும் பொதுவானது. உங்களுக்கு மரங்கள் சொந்தமில்லை.

இன்னொரு முறை என் வீட்டில் வேலை செய்த சுமார் 19 வயது வீட்டுப் பையன் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமார் 14 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கினான். தந்தை சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து தகவல் தெரிவித்தார். நான் பதற்றமாக இருந்தேன், அதை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. பையன் அசையாமல் நின்று, பெண் சொன்ன அனைத்தையும் ஒப்புக்கொண்டான். அவர்கள் இருவரும் வெவ்வேறு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே நிலைமையை மேலும் மோசமாகியது. ஆனால் சிறுமியின் தரப்பினர் விடுத்த கோரிக்கை எனக்கு ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது.குழந்தை சம்பந்தப்பட்ட முழுப்பொறுப்பையும் அதன் பராமரிப்புச் செலவையும் ஏற்பதாக அந்தச் சிறுவனிடமிருந்து உறுதியான வாக்கு பெற வேண்டும் என்றனர். சிறுவன் ஒப்புக்கொண்டான். சில நிமிடங்களில் விஷயம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டது.

சோமாலியாவில் இன்னொரு சம்பவம் நடந்தது. ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு அதிகபட்சம் ஆறு குழந்தைகள் வரைதான் குழந்தைக்கான படி வழங்கப்பட்டது. இந்தக் குறிப்பிட்ட ஊழியர் ஒரு மூட்டைப் பணத்தைக் கொண்டு வந்து அதைத் திருப்பிக் கொடுக்க விரும்பினார். அவரது குழந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், இறந்த குழந்தையின் பெயரில் உதவித்தொகை பெற்றதைத் திருப்பிக் கொடுக்க வந்தார்.

இப்படிப் பல சம்பவங்கள் உண்டு. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பழைய சங்க வரிகளை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

ஈழப் பிரச்சினை பற்றி எழுதியுள்ளீர்கள், இயற்கையாகவே, நீங்கள் ஒரு இலங்கைத் தமிழராக இருந்தீர்கள்.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரைப் பற்றி விரிவாக எழுதிய ஏராளமான இலங்கை எழுத்தாளர்கள் உள்ளனர்.தமிழ் சிங்களம் இரண்டு கண்ணோட்டங்களின் குரல்களும் உள்ளன. மேலும் அனைத்து கதைகளும் சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பத்திரிகை அணுகுமுறையை பிரதிபலிக்கவில்லை. இந்த விஷயத்தில் இன்னும் தனித்து நிற்கிறது.

புலம்பெயர்வு , துயரங்கள் , வேதனைகள் மனிதநேயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள இலங்கைக்கு இது பொருத்தமாக இருக்கிறதா?

இந்த 'புதிய' இலங்கை 2009 இன் பிற்பகுதியில், மற்ற புதிய உலகப் பிரச்சினைகளுடன் சிக்கியுள்ளது. கடந்த காலத்திலிருந்து இதுவரை நீடித்து வரும் இலக்கியங்கள் இப்போது பயன் தருமா?

நீங்கள் சொல்வது சரிதான். புதியவர்கள் புதிய பிரச்சினைகளைப் பற்றி எழுதுவார்கள் ஆனால் முப்பது வருடகால யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்தும், இன்னும் அதிகமானோர் வீடற்றவர்களாகவும் இருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் எழுத்தாளர்கள் போரைப் பற்றி நினைவிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் தொடர்ந்து எழுதுவார்கள். இரண்டாம் உலகப் போர் செப்டம்பர் 1945 இல் முடிவடைந்தது, ஆனால் இன்னும் schindler's list திரைப்படம் தயாரிக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. அலெக்சாண்டர் தி கிரேட் பற்றி மக்கள் இன்னும் புதிய புத்தகங்களை எழுதுகிறார்கள்.

இந்த வார நியூ யார்க்கர்( New Yorker) இதழ் சுவாரசியமான ஒன்றை எடுத்துச் சென்றது. ஜொனாதன் ஃப்ரீட்லேண்ட் என்ற எழுத்தாளர் ருடால்ஃப் விர்பா( Rudolf Vrba) வழங்கிய புதிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆஷ்விட்சிலிருந்து(Auschwitz) தப்பித்தவரின் ஒரு புதிய புத்தகத்தைச் கொண்டு வந்தார். இன்னும் நூறு வருடங்கள் கழிந்தாலும் இலங்கையில் நடந்த போரின் கொடூரத்தை மக்கள் எழுதுவார்கள், படிப்பார்கள்.

‘கடவுள் தொடங்கிய இடம்' (‘Where God Began.’) என்றொரு நாவலை எழுதினேன்.கொழும்பில் இருந்து ரொறன்ரோவுக்கு வந்து 5 வருடங்களும் 2 மாதங்களும் ஆன அகதியின் பயணத்தை அது விவரிக்கிறது. அவ்வாறு பயணித்த அகதிகள் 100,000 க்கும் மேற்பட்டவர்கள். அவர்களிடம் இன்னும் பல கதைகள் இருக்கும். இரண்டு கதைகளும் ஒரே மாதிரியானவை அல்ல.இன்னும் ஏராளமானவை சொல்லப்படுவதற்குக் காத்திருக்கின்றன.

இந்தியா இதுவரை இலக்கியத்துக்காக ஒரே ஒரு நோபல் பரிசை மட்டுமே வென்றுள்ளது. உண்மையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் ஐரோப்பியர் அல்லாதவர் ரவீந்திரநாத் தாகூர். அதிக இலக்கிய நோபல்களை வென்ற ஜப்பானியர்களுடன் (3) ஆசியர்கள் 8 பேர் மட்டுமே உள்ளனர்.

நீங்கள் ஒரு இலங்கையர் ஆனால் உங்கள் பெரும்பாலான இந்திய வாசகர்களுக்கு, நீங்கள் மற்றவர்களை விட இந்தியர்.

இந்த வகையில், சமகால இலக்கியப் பின்புலத்தில் இந்தியாவிலிருந்து இலக்கிய நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியானவராக எந்த மொழியிலிருந்து யாரைப் பார்க்கிறீர்கள்?

இந்த நேரத்தில் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பிரபல தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நான்கு தொகுதி புத்தகம் கிடைத்தது. இதைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள பணி என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்நூலை முடித்து வெளியிடுவதற்கு ஆசிரியருக்கு பத்து வருடங்களுக்கும் மேல் ஆனது. கடந்த காலங்களில் இதுபோன்ற பணிகளை யாரும் செய்ததில்லை, இதுவே இந்த வகையான முதல் புத்தகம்.

இந்தியாவில் பல மாநிலங்களில் 18 அதிகாரபூர்வ மொழிகள் உள்ளன. இந்த மொழிகளுக்கிடையே இலக்கியப் பரிமாற்றம் மிகக் குறைவு. இந்த ஆசிரியர் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து ஒவ்வொரு மொழியிலும் உள்ள முன்னணி எழுத்தாளர்களைச் சந்தித்து, அவர்களில் சிலரைப் பேட்டி கண்டு எழுதி வெளியிட்டார். இந்த முறையில், இந்த 18 மொழிகளிலும் இலக்கிய வெளியீடுகளை ஆய்வு செய்ய இது எனக்கு வாய்ப்பளித்தது. தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிவரும் பணி என்னை மிகவும் கவர்ந்தது. அவரது எழுத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.அவர் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 200 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது முக்கியப் படைப்பு வெண்முரசு, அதில் அவர் மகாபாரதக் கதையை 26,000 பக்கங்களில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.இது இதுவரை எழுதப்பட்ட மிகப்பெரிய காவியமாகும். நான் அவரது அனைத்து படைப்புகளையும் படித்திருக்கிறேன், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர். ஆங்கில மொழிபெயர்ப்பில் அவருடைய ‘Stories of the True’ என்ற புத்தகம் வெளியாகி முன்மாதிரியான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

ஒரு 'சிறந்த வாசகர்' என்பவரை நீங்கள் எவ்வாறு வரையறுக்கிறீர்கள்?

தமிழ் புத்தகங்கள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட யூடியூப் சேனலை தற்செயலாகக் கண்டேன். இதனை ஆங்கில ஆசிரியரான செல்வராஜ் என்பவர் நடத்தி வருகிறார். அவர் ஒரு புதிய புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார், ஆசிரியரைப் பற்றி பேசுகிறார், மேலும் அவர் அதை ஏன் விரும்புகிறார், எது முக்கியம் என்பதை விளக்கி கதையைச் சொல்கிறார். புத்தகம் எங்கு வாங்கலாம் என்பதையும் தெரிவிக்கிறார். நான் அவரைத் தொடர்பு கொண்ட நாளில் அவர் 100 புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்களை இப்படிச் செய்துள்ளார்.அவர் புத்தகங்களைப் படிக்கிறார், புத்தகத்தில் உள்ள முக்கிய புள்ளிகளைக் குறிப்பிடுகிறார், ஆசிரியரைப் படிக்கிறார் மற்றும் யூடியூப்பில் தகவல்களைப் பதிவு செய்கிறார். அவரிடம் ஏன் இப்படிப்பட்ட ஒரு சேவையைச் செய்கிறீர்கள் என்று நான் கேட்டேன், அவர் தனது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் கூறினார். ‘மகிழ்ச்சியும் அறிவும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்’ என்றார். அவர் தனது வேலையில் பூரணமானவர்.

சில நேரங்களில் அவர் ஒரு எபிசோடை 17 முறை பதிவுசெய்து சரியாகும் வரை மீண்டும் மீண்டும் செய்து பதிவு செய்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் மீது இவ்வளவு பற்று எப்படி வைத்திருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் தனது பணத்தை இந்த சேவைக்குச் செலவிடுகிறார்.

அவர் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நல்ல வார்த்தை மட்டும்தான்.

வேறு எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. நான் அவரை ஒரு 'சிறந்த வாசகர்' என்று சொல்வேன்.

(Saranga ஆங்கில இதழில் வெளிவந்த அவினேனி பாஸ்கர் எடுத்து எழுதிய நேர்காணலின் தமிழ் வடிவம்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com