முடிந்து போன என் எல்லா காதல்களையும் காலி காப்பி பாட்டில்களைப் போலவே பாதுகாக்கிறேன். பொதுவாக பாக்கெட்டுகளில் விற்கும் காப்பி பொடியை வாங்குவதில்லை, எப்பொழுதும் கண்ணாடி பாட்டில்களைத் தான் தேர்ந்தெடுக்கிறேன். அது காலியானவுடன் முகப்பில் ஒட்டியிருக்கும் கம்பெனி ஸ்டிக்கர்களை பிய்த்தெடுத்து, நன்றாக தேய்த்துக் கழுவி, காய வைப்பேன், பின் துடைத்தெடுத்து அலமாரியில் பத்திரமாக சேர்த்து வைத்து விடுகிறேன். முதலில் வாங்கிய பாட்டில்களில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சீரக பொடியென சமையல் மசாலாக்களை போட்டு வைத்தேன், பிறகு கடுகு, வெந்தயம் என பலசரக்குகளாக நிரப்பினேன். அதற்கடுத்து வந்த பாட்டில்களில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தேன், பிறகு வீட்டில் ஆங்காங்கே கொடிகளை அதனுள் வைத்து படரவிட்டேன், இப்பொழுது என்னால் பாட்டில்களுக்கு எந்த பயனையும் யோசிக்க முடியவில்லை, ஆனால் எந்த பாட்டிலையும் தூக்கிப் போடும் எண்ணமும் இல்லை. வீடு முழுக்க புத்தகங்களை அடுக்கி வைத்து என் மேதாவித்தனத்தை தம்பட்டம் அடிக்கும் முயற்சியை எப்பொழுதோ கைவிட்டிருந்தேன் அதற்கு பதிலாக காலி காப்பி பாட்டில்களால் வீட்டை நிரப்பி வைக்க திட்டமிட்டிருந்தேன்.
என் காதல்களையும் நான் அவ்வாறே சேர்த்து வைத்திருந்தேன், அவை காதல் பரிசுகளாக நினைவுகளாக என் வீடு முழுதும் நிறைந்திருந்தது. நான் பாலின கட்டுப்பாடுகளின்றி காதலித்திருந்தேன். அவன் வாங்கிக்கொடுத்த வானவில் டி-ஷர்டை நான் இப்போதும் அணிந்து கொள்கிறேன், இனி எப்போதும் வரப்போவதில்லை என்று தெரிந்தும் அவளது பல் விளக்கும் பிரஷை எடுத்து வைத்திருந்தேன். இன்னொருத்தி விட்டுச் சென்ற புடவையை பத்திரப்படுத்தி வைத்தேன், அதை நான் அணிவதில்லை அதற்கு அவள் எனக்கு சம்மதம் தந்திருக்கவில்லை, அவள் மறந்து விட்டுச் சென்ற புடவை அது, திரும்பி வந்து கேட்டால் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அவர்கள் வரைந்த ஓவியத்தை நான் தூக்கி எறியவில்லை, அது என் புத்தகங்களுக்கு நடுவில் உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் என் எல்லா காதலர்களுக்காகவும் அழுதேன், எல்லோருக்கும் சமமாக அழ முடியாவிட்டாலும் என் கண்ணீர் எல்லோருக்காகவும் வீணானது. என்னால் யாரையும் வெறுக்க முடிவதில்லை, கொஞ்சம் பேரை சேர்த்து வைத்திருந்தேன், வெகு சிலரை தெரிந்திருந்தது, பலரைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை, சிலரை மறந்து போயிருந்தேன் ஆனால் யாரையும் என்னால் வெறுக்க முடியவில்லை.
ஒவ்வொரு காதலின் முடிவிலும் ஒரு மரணத்தை எதிர்கொண்டதாகவே உணர்ந்தேன், கணவனை இழந்த இளம் விதவையின் துயரை முழுதாக அனுபவித்தே அதிலிருந்து மீண்டு வந்தேன். சில காதல்களுக்கு வாரங்கள் போதுமானதாக இருந்தது, சிலவற்றிற்கு மாதங்கள் தேவைப்பட்டது, ஒன்றிரண்டு காதல்கள் வருடக்கணக்கில் என்னை பாடாய்படுத்தியது. நான் அதை பற்றி வருந்தியதில்லை, ஒரு காதலில் இருந்து பரிபூரணமாக விடைபெற்ற பின்னே அடுத்த காதலை எடுத்துக்கொண்டேன், வயதின் முதிர்ச்சியும் அனுபவமும் தந்த பாடமது. சிலரை போக வேண்டாம் எனத்தடுத்தேன், சிலரிடம் கெஞ்சி இருக்கிறேன், யாரையும் வற்புறுத்தியதில்லை.
எல்லாரைப் போல எனக்கும் வலிகளும் அவமானங்களும் இருக்கத்தான் செய்தது. ஒரு திருநங்கையாக இருந்து கொண்டு பெண்ணைக் காதலிக்கிறாயா என்று அவர்கள் என் துணிகளை எரித்த பொழுது தேவைக்கு அதிகமாக சம்பாதித்த புண்ணியத்தில் புதுத் துணிகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். ஒரு திருநம்பியை காதலிப்பதில் என்ன சுகம் கிடைத்துவிடப் போகிறது என்று கேட்ட எவருக்கும் நான் பதில் சொன்னதில்லை. என்னால் நம் காதலை பொது வெளியில் அங்கீகரிக்க முடியாது என்று சொன்னவனை கோபித்துக் கொண்டு திருப்பி அனுப்பினாலும் அரசியல் கூட்டங்களில் அவனை பார்க்கும் பொழுது லேசாக சிரிக்கத்தான் செய்கிறேன். நீ ஆணாகவே இருந்திருந்தால் உன்னைத்தான் திருமணம் செய்திருப்பேன் என்று சொன்ன எல்லா பெண்களையும் ஆண்களுக்கே விட்டுக் கொடுத்தேன். என்னை விட வயது குறைந்தவர்கள் குறிப்பாக பெண்கள் பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் ரிலேஷன்ஷிப் அட்வைஸ் கேட்டு வரும் பொழுது எல்லா தோல்விகளையும் மறைத்து மேதாவி போல அறிவுரை கூறுகிறேன் .
காதலை நிராகரித்தவர்களிடமிருந்து நான் விலகி விடுவதில்லை, இன்றைய காதலர்களுடனோ, கணவன், மனைவியுடனோ சண்டை போட்டுவிட்டால் ஆறுதல் தேடி என்னிடம் தான் வருகிறார்கள். என்னிடம் எந்த தீர்வும் இல்லை, ஆனால் அவர்கள் சொல்வதையெல்லாம் காது கொடுத்து கேட்கத்தான் செய்கிறேன். என்னால் எல்லா பிரச்சனைகளையும் சலனமின்றி, பாகுபாடின்றி, சார்பில்லாமல் கேட்க முடியும் என்பதில் எனக்கொரு கர்வமுண்டு. உண்மையென்னவோ என் போதாமையையும், தனிமையையும் மறைக்கத்தான் எல்லாருடைய பிரச்சனைகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
நன் எல்லா காதல்களையும் வெளிப்படுத்திவிடுவதில்லை, சிலவற்றை சொல்லாமலேயே புதைத்துவிடுகிறேன். கருக்கலைப்பு செய்யும் ஒரு தாய்க்கு இருக்கும் எல்லா நியாயங்களும் அதில் இருந்தது. பின் நண்பர்களிடத்தில் புலம்பி என் ஆற்றாமையை போக்கிக்கொள்வேன். தன் காதலி விட்டுச் சென்றதில் உழன்று கொண்டிருந்த அவனை நான் தான் தேற்றினேன். என்னை ஏன் யாருக்குமே பிடிப்பதில்லை என்று அழுதவனிடம் , நீ எப்பொழுது என்னை பார்க்கப் போகிறாய் என்று கேட்க தோன்றியது, ஆனால் கேட்கவில்லை. அவனுக்காக எல்லாப் பெண்களையும் லெஸ்பியனாக மாற்றிவிட எண்ணினேன் ஆனால் அதுதான் முடியாதே. அவன் வீட்டில் பார்த்த பெண்ணை மணந்துகொண்டு குழந்தைகளுடன் கனடாவில் குடியேறி விட்டான், நாங்கள் இப்பொழுதெல்லாம் பேசிக் கொள்வதில்லை. நெருங்கிய தோழி நான் காதலிப்பதாக சொன்னதற்கு பதில் ஏதும் சொல்லாமலிருந்தாள், சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக சிரித்தோம். நண்பர்களாகவே தொடரும் அவள் சில நேரங்களில் அறிவுரை சொல்லும் பாட்டியாகவும் இருக்கிறாள். என் ஆயுள் காப்பீட்டில் அவளைத்தான் நாமினியாக சேர்த்திருக்கிறேன்.
வேலை என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்றதால் எல்லைகளின்றி காதலித்திருந்தேன். எல்லா காதல்களும் ஏதோ ஒரு அனுபவத்தையும், ஒரு வடுவையும் விட்டுச் சென்றிருந்தது. லண்டனில் கலவிக்காக மட்டுமே சந்தித்த ஜமைக்க இளைஞனைப் போல யாரும் என்னை பலவீனமாக உணரவைத்ததில்லை, அத்தனை பலசாலி அவன். அவனை எப்பொழுதாவது நினைத்துப் பார்ப்பதுண்டு, அவன் இன்னமும் அகதியாக இருக்கக் கூடாதென்று வேண்டிக்கொள்வேன். ஸ்டாக்ஹோல்ம் தெருக்களில் உருகி உருகி காதலித்த கொலம்பிய திருநங்கையை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது. அவளைப் பிரிந்த பின் நான் இன்று வரை சாக்லேட் சாப்பிடுவதில்லை, சாக்லேட் முழுக்க அவள் மனம் தான் அப்பிக்கிடக்கிறது. நீயே புரிந்து கொள், என்னால் எப்படி என் பெற்றோரிடத்தில் உன்னை அழைத்துச் செல்ல முடியும் என்று பிரிந்து சென்ற கேரள காதலியை எப்பொழுதோ மன்னித்து விட்டேன். அவளது மகனின் போன வருட பிறந்த நாளுக்கு என்னையும் அழைத்திருந்தாள் , நான் தான் போகவில்லை. தமிழ் காதலர்களை நான் கொஞ்சம் அதிகமாகவே நேசித்திருந்தேன், ஏனென்றால் அவர்களுக்குத்தான் இளையராஜாவையும், வடிவேலுவையும் தெரிந்திருந்தது.
அதீத காதல் சிலருக்கு திகட்டியிருக்கலாம், என் அசட்டுத்தனங்கள் எரிச்சலூட்டியிருக்கலாம் அனல் யாரையும் காயப்படுத்தவில்லை என்றே நம்புகிறேன். அதெப்படி சாத்தியமாகும், பிரிந்து சென்றவர்களின் தரப்பு எனக்கு தெரியாதே.
நீ திருந்தவே மாட்டாயா, இன்னும் சின்னப் பிள்ளைத்தனமாகவே இருந்து கொண்டு ? எப்பொழுதுதான் மெச்சூரிட்டியுடன் நடந்து கொள்ளப் போகிறாய்? என கேட்ட தோழிக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்? குழந்தைத்தனங்களும் நகைச்சுவை உணர்வும் தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, அவை தான் என் காதலின் வேறாக இருக்கிறது. அவை இல்லாமல் என்னால் உங்கள் யாரையும் காதலிக்க முடியாது, காதலிக்காமல் என்னாலும் இருக்க முடியாது. அவைகளை விட்டுக்கொடுக்கும் எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை. பள்ளி நாட்களில் அடுத்தவர்களுக்காக முதலில் காதல் கடிதங்களை எழுத ஆரம்பித்தேன், அவற்றில் ஒன்றிரண்டு திருமணத்தில் போய் முடிந்திருக்கிறது என்ற பெருமையும் எனக்கு உண்டு. அப்பொழுதே என் நண்பனிடத்தில் சொல்லியிருக்கிறேன், எனக்காக ஒரு நூறு காதல் கடிதங்களையாவது எழுதுவேன் என்று. இன்றுவரை ஏழு காதலர்களுக்காக இருபத்திரெண்டு கடிதங்களை எழுதியிருக்கிறேன், மிச்சத்தையும் எழுதியாக வேண்டும். நூறு கடிதங்களை எழுதி முடித்த பின்னும் கூட என்னிடம் காதல் மிச்சம் இருக்கலாம்.
நான் பெரும்பாலும் காதலைத் தேடிப் போவதில்லை, வரும்பொழுது நிராகரிப்பதும் இல்லை. காதல் இல்லாத சமயங்களில் இசையும், ஒரு கோப்பை காப்பியமே போதுமானதாக இருக்கிறது. என் அடுத்த காதலுக்காக சில பூக்களை சேமித்துக் கொண்டிருக்கிறேன், அதை அவள் நிராகரிக்கக்கூடும் என்று தெரிந்தே.
இப்போதைக்கு அவ்வளவே.
(கனகா வரதன் - சென்னையை சேர்ந்தவர், தற்போது ஸ்டாக்ஹோல்மில் பணிபுரிந்து வருகிறார். சமீபகாலமாக சூஃபி இசையை விரும்பிக் கேட்கத் தொடங்கியிருக்கிறார். காதலில் தோற்ற கனவான்களாக ஆண்கள் மட்டுமே ஏன் இருக்கவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது)