வண்ணநிலவன் - நரன் - கவிதா பாரதி
வண்ணநிலவன் - நரன் - கவிதா பாரதி

இலக்கிய சர்ச்சை: கறார் வண்ணநிலவன்... பதிலடி கவிதா பாரதி!

அரசியலுக்கு சற்றும் குறைவில்லாமல் சர்ச்சை உலகமாக மாறிவரும் தமிழ் இலக்கியப் பரப்பில், இந்த வார சர்ச்சை வண்ணநிலவன் – நரனை மையம் கொண்டதாக உருவாகியிருக்கிறது.

கடந்த 12ஆம் தேதி மதியம் 2:26 மணிக்கு எழுத்தாளர் வண்ணநிலவன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்துத்தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

“யாரும் சொல்லவில்லை. ஆனால் தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிப் பரீட்சை வைத்திருக்கிற மாதிரி, நரனின் கேசம், சரீரம், மயிலன் சின்னப்பனின் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ஆகிய நூல்களை வாங்கி வைத்திருக்கிறேன். நரனின் ஏழெட்டு கதைகள் படித்து விட்டேன்.

அந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் நரனைப் பற்றிச் சொன்னாரே என்று நம்பி வாங்கியது தப்பாப் போச்சு. அட்டைப்படம், லே அவுட் எல்லாம் பிரமாதம். கதைகள் தேறாது.

பிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது-அந்த சிபாரிசு செய்த எழுத்தாளர் ஒரு அதி தாராளவாதி என்பது.

மயிலன் சின்னப்பன் விஷயத்தில், சூடு பட்ட பூனை மாதிரி பக்கத்திலேயே போகவில்லை.” என்று வண்ணநிலவன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அவரின் இந்தக் கருத்தைப் படித்து சமூக ஊடகங்களில் பல தரப்பினரும் விமர்சனம் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து, வண்ணநிலவனுக்கு பதிலளிக்கும்படியாக நரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “மாடர்னிட்டியே உள்ளே நுழையாத பழைய மூளை. சொதி செய்றது, தாமிரபரணி ஆத்துல குளிக்கிறது, குறுக்குத்துறை, படித்துறையில ஈர உடையோடு பெண்கள் குளிக்கிறதப் பாக்குறது, காந்திமதியம்மா, திருநெல்வேலில நாலுத் தெருவு, அந்த ஊர, பிள்ளைமார் சமூகத்தை ரொமாண்டிசைஸ் பண்றது. திருநெல்வேலி சைவாள் ஓட்டல்லதான் சாப்பாடு நல்லாயிருக்கும்னு உளறிக் கொட்றது... இதத்தாண்டி சிந்திக்காத பழைய மூளைகள்....” என்று பதிலுக்கு காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.

வண்ணநிலவனின் கருத்துக்கு கவிஞரும் நடிகருமான கவிதா பாரதி தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதில், “யாரோ சொல்லி நரனின்‌ புத்தகங்களை வாங்கி ஏமாந்ததாக வண்ணநிலவன் பதிவிட்டிருக்கிறார். வண்ணநிலவன் எழுத்துகள் வறட்சியானவை என்று ஜெயமோகன் எழுதினார். வண்ணநிலவனின் எழுத்துகளை தரநிர்ணயம் செய்யும் தகுதியும் உரிமையும் உங்களுக்கில்லை என வண்ணநிலவனின் வாசகனாக நான் குரல்கொடுத்தேன் இப்போது வண்ணநிலவன் ஜெயமோகனாகியிருக்கிறார்.‌ மூத்த எழுத்தாளர்கள் அடுத்த தலைமுறையை தட்டிக்கொடுத்து வளர்க்க வேண்டும். வ.நிலவனையும், அவர்களது காலத்தையொட்டிய எழுத்தாளர்களையும் தி.க.சி.அப்படித்தான் வளர்த்தெடுத்தார்.

வண்ணதாசனுக்கிருக்கும் இந்த மாண்பு வண்ணநிலவனுக்கு இல்லாதது வருந்தத்தக்கது. நரனின் எழுத்துகள் குறித்த வ.நிலவனின் கருத்து அவரது ரசனை பின்தங்கி தேங்கிப் போயிருப்பதன் அறிகுறிதான். இது பரிதாபத்திற்குரியதே தவிர பதில் சொல்லத்தக்கதல்ல. நரனுக்கு யார் தயவும் தேவையில்லை.

தற்கால இலக்கியத்தில் தவிர்க்கவியலாத ஆளுமை அவர். நரனின் எழுத்துகள் எனக்கும் பிடிக்கும். வண்ணநிலவன் வாங்கி ஏமாந்த அந்தப் புத்தகங்களை அவரிடமிருந்து மகிழ்ச்சியோடு விலைகொடுத்து வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்”என்று கவிதாபாரதி பதில் எழுதியிருக்கிறார்.

தமிழின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவன் தனது முகநூல் பக்கத்தில், சக படைப்பாளர்கள் எழுத்து குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com