காதலில் விழுந்த எழுத்தாளர் மகன்! வாழ்த்து சொன்ன மணிரத்னம்!
Image by Freepik

காதலில் விழுந்த எழுத்தாளர் மகன்! வாழ்த்து சொன்ன மணிரத்னம்!

ஒரு பிரபல எழுத்தாளரின் மகன் எழுதிய காதல் கடிதமும் அதற்கு முக்கியமான ஒரு திரைப்பட இயக்குநர் அனுப்பிய வாழ்த்தும் இலக்கிய வாசகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தமிழின் மிக முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படுபவர் ஜெயமோகன். அவருக்கு அஜிதன் என்ற மகனும் சைதன்யா என்ற மகளும் உள்ளனர். மகன் அஜிதனும் எழுத்தாளர்தான். உதவி இயக்குநராக பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய அப்பா, அம்மா, தங்கை மூவருக்கும் ஒரு மின்னஞ்சல் எழுதியுள்ளார்.

தான் ஒரு பெண் மீது காதல் கொண்டதைப் தெரிவிக்கும்பொருட்டு எழுதப்பட்டிருக்கும் ஆங்கிலக் கடிதத்தின் தமிழ் சாரம் இதோ…

''உலகிலேயே மிக அழகான பெண்ணை இன்று சந்தித்தேன். அவள் என்னை மிகவும் நேசிக்கிறாள். நானும் அவளைப் பைத்தியம் பிடித்ததுபோல் காதலிக்கிறேன். என் வாழ்நாளில் இந்தளவுக்கு உணர்ச்சிவயப்பட்டதில்லை. கடவுளாலும் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதராலும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

அவளை சந்திக்க பெங்களூர் வந்துள்ளேன். தொலைப்பேசியில் இருவரும் நிறையப் பேசியுள்ளோம். என் காதலை நேற்று முன்தினம்தான் அவளிடம் சொன்னேன். படபடக்கும் இதயத்துடன் என் காதலை ஏற்றுக் கொண்டவள், அதற்காக ஒன்றரை வருடம் காத்திருந்ததாகச் சொன்னாள். என்னை பைத்தியமாகப் பின்தொடர்ந்தவள் நான் எழுதிய எல்லாவற்றையும் படித்திருக்கிறாள். ஜெயமோகனுக்கு பிறகு, இந்த உலகத்தில் நான்தான் பெரிய எழுத்தாளர் என்று நினைக்கிறாள்.

இன்று ஒரு காபி ஷாப்பில் சந்தித்தோம், 4 மணி நேரம் பேசினோம். ஒன்றிப்போனதாக உணர்ந்தேன். நாங்கள் எல்லாவற்றையும் பற்றி பேசினோம். ஏற்கனவே, நாங்கள் எங்களின் எதிர்காலம் பற்றி திட்டமிட்டிருந்தோம் (குழந்தைகள் பற்றியும்). நாளை மீண்டும் சந்திக்கிறோம். காலையில் ஒரு கோயிலுக்குச் செல்கிறோம். அவளுக்குக் கடவுள் நம்பிக்கையுண்டு.

அவள் பெயர் தன்யா. எனக்கு மிகவும் பிடித்த பெயராகிவிட்டது. அவளுக்கு மற்றொரு பெயரும் உள்ளது. மீனாட்சி என்று, அந்த பெயரும் அதிகம் பிடிக்கும். அவள் எல்லா வகையிலும் உன்னைப் போலவே இருக்கிறாள் அம்மா. அவள் அப்பாவி, விளையாட்டுத்தனமானவள், வேடிக்கையானவள், அன்பு நிறைந்தவள். 25 வயதுதான். உன்னைப் போலவே அவளும் ஒரு படிப்பாளி. பத்தாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடமும், பன்னிரண்டாவதில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் வந்தவள். ஜெயமோகன் அங்கிள் என்றால் அவளுக்குப் பயம். நான் தான் சொன்னேன், அவர் உன்னை மற்றொரு மகளாகப் பார்ப்பார் என்று.

நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விரும்புகிறோம். என் கனவுகள், லட்சியங்கள் அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட்டேன். அவள் மிகவும் பெருமைப்படுகிறாள். என்னுடன் சென்னைக்கு வர அவள் தயாராக இருக்கிறாள். உலக முழுவதும் அவளை அழைத்து செல்வேன், என்னால் முடிந்த எல்லா சந்தோஷங்களையும் அவளுக்குக் கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறேன்.

அப்பா… அம்மா… நான் மிகவும் பித்துப்பிடித்த நிலையில் இருந்தேன். மருபூமி எழுதும் போது தூக்கமின்மையால் தவித்தேன், என் உடல் கட்டுப்பாட்டில் இல்லாததுபோல் இருந்தது. அதை நான் உங்களிடம் சொல்லவில்லை. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் ஓடிவிடுவது போல் அல்லது என்னை நானே கொன்றுவிடுவது போல் உணர்ந்தேன். தனிமையின் உணர்வு தாங்க முடியாததாக இருந்தது. நீங்கள் அனைவரும் என்னை நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்களுக்கென்று சொந்த வாழ்க்கை இருக்கிறது, என் வலியை உங்களால் பகிர்ந்து கொள்ள முடியாது. யாரும் இல்லாத தீபாவளியின் போது அந்தத் தனிமை உச்சத்தை எட்டியது. யாரும் என்னை வாழ்த்தவில்லை. நான் தனியாக அலைந்து, சாப்பிட்டு, ஒரு படத்திற்கு சென்றேன். என் வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று கவலைப்பட்டேன். அப்போதுதான் நான் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். அவள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரியாமல், அவள் எதாவது நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது கோவையில் இருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தாள். அவளை பாதுகாப்பாக இருக்கச் சொன்னேன். விடுதி அடைந்ததும் குறுஞ்செய்தி அனுப்ப சொன்னேன், அனுப்பினாள். அப்போது நான் மிகவும் மென்மையாக உணர்ந்தேன், அதுவரை இல்லாத ஒருவனாக இருப்பதுபோல் உணர்ந்தேன். அந்த தருணத்திற்குப் பிறகு என்றுதான் நினைக்கிறேன், அவள் என்னை ஒரு தேவதை போல் வந்து காப்பாற்றினாள். அதை இந்த நேரத்திலும் உணர்கிறேன். அவளுக்காக நான் வாழ்ந்து மடிவேன். அதையேதான் நேற்று அவளும் குறுஞ்செய்தியில் சொன்னாள், பூ அல்லது மிட்டாய் வழங்குவது போன்று சாதாரணமாக.” என்று உருகி உருகி எழுதியுள்ளார் அஜிதன்.

மணிரத்னம்
மணிரத்னம்

அஜிதனுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் மணிரத்னம் ஆங்கிலத்தில் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ”வாழ்த்துகள். இதைக் கேட்கவே அருமையாக இருக்கிறது. தந்தையைப் போல மகன். எல்லா விஷயத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன். தான்யாவுக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்த ஆவலாக இருக்கிறேன்.

நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராகி வருவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

மருபூமி படிக்க ஆவலாக இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்கள். உன்னுடைய எழுத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன், உன்னையும் தன்யாவையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்காக இந்த புத்தகத்தை அர்ப்பணித்ததற்கு மிக்க நன்றி. நான் அதற்கு தகுதியானவனா என்று தெரியவில்லை, ஆனால் அதை ஏற்றுக்கொள்வேன்” என்று மணிரத்னம் கூறியுள்ளார்.

நெகிழ்ச்சி மிக்க அஜிதனின் எழுத்தும் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மணிரத்தினத்தின் வாழ்த்தும் எழுத்தாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com