நாட்டின் மக்கள் தொகை கோடிக்கணக்கில் இருந்தாலும் எழுத்து படைப்பு, தீவிர வாசிப்பு சார்ந்து இயங்குபவர்கள் மிக சொற்பமான சதவீதம் தான். ஆனால் அவர்களால் தான் எழுத்துலகம் வாழ்கிறது. வரலாறு உயிர்ப்புடன் நிலைத்து நிற்கிறது. அந்தக் கண்ணுக்குத் தெரியாத இயக்கத்தில் ஒருவராக இருப்பவர்தான் ஆரணி சுதாகர்.
இது போன்று இயங்குபவர்களுக்குப் பல்வேறு சமூகத் தடைகள் இயல்பு. ஆனால் இவர் குடும்பம், சமூகம் எனப் பல்வேறு அழுத்தங்களைக் கடந்து புத்தகக் கடை நடத்தி வருவதுடன் இலக்கியம் சார்ந்து இயங்கி வருகிறார். தனது 'அறம் செய்வோம்' அமைப்பின் மூலம் முதியோர்களுக்கு அன்னதானம் போன்ற நற்காரியங்களையும் ஆற்றுகிறார். தமிழின் நல்ல இலக்கியப் படைப்புகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றே 'ழ புத்தகக் கூடு' என்கிற புத்தகக் கடை நடத்தி வருகிறார். யாரோ கொடையாளர்கள் உதவியது போல் தனது இரு அமைப்புகளின் பெயரை இணைத்துதான் இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறார்
ஆரணியில் ஆகஸ்ட் 1 முதல் 10 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவைத் தனி ஒருவராக நின்று நடத்துகிறார்.
இனி அவருடன் பேசுவோம்!
உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்...
என் அப்பா பெயர் சம்பத். அம்மா பெயர் லலிதா.எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெற்றோருக்கு 1979 இல் பிறந்தவன் நான். அண்ணன் ,அக்கா என்று உடன்பிறந்தவர்கள் இருவர். நான் கடைக்குட்டி. என் பெற்றோர்கள் இருவரும் இப்போது இல்லை.
நான் ஐடிஐ படித்து பல்வேறு கம்பெனிகளில் 1999 முதல் 2007 வரை பிட்டராக வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் அந்தக் கம்பெனி வேலை பிடிக்கவில்லை. எனவே விட்டு விட்டேன். அதன் பின் கம்ப்யூட்டரில் ஹார்டுவேர் வேலை செய்தேன். எனக்கு வாசிப்பு என்பது சின்ன வயதிலேயே ஆர்வத்திற்குரிய ஒன்றாகியிருந்தது. வேலைகள் பணியழுத்தங்கள் என்று இருந்தாலும் எனது வாசிப்பனுவத்தை விடவில்லை. அதை ஒரு பக்கம் வளர்த்துக் கொண்டு வந்தேன்.
2012 இல் நான் ’ஆரணி டைம்ஸ்’ என்கிற பெயரில் மாதம் இருமுறை இதழ் தொடங்கினேன். சிலகாலம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.பிறகு நிதிப்பிரச்சினை வந்தது.நிறுத்த வேண்டியதாயிற்று.
2013 இல் 'ழ புத்தகக் கூடு' என்று பெயர் வைத்து நானே சிறிதாக ஒரு புத்தகக் கடை ஆரம்பித்தேன். திருமணமாகிச் சில ஆண்டுகளே ஆன அந்தக் கால கட்டத்தில் அதை யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் நான் செய்தேன். இந்த யோசனையைக் கூறிய போது என்னைப் புரிந்து கொண்டதால், என் மனைவி அதை மறுக்கவில்லை, எவ்விதத் தடையும் சொல்லவில்லை.என் மனைவி ஒரு பியூட்டி பார்லர் தொடங்கினார். அந்த வருமானம் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கவே நான் துணிந்து இறங்கினேன். இருந்தாலும் என் மனைவி ஆதரவு கொடுத்து இருக்காவிட்டால் நான் இதில் இறங்கி இருக்க முடியாது.
புத்தகக் கடையிலிருந்து புத்தக கண்காட்சிக்கு எப்படிச் சென்றீர்கள்?
முதலில் நியூஸ் மார்ட் தான் வைத்திருந்தேன் .செய்திப் பத்திரிகைகள் விற்று வந்தேன். அதுவும் விற்பனை குறைய ஆரம்பித்தது.இனி சீசன் பத்திரிகைகளை விற்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆரணி என்பது ஒரு சட்டமன்றத் தொகுதி உள்ள ஒரு சிறிய ஊர் தான். மாவட்டத்தின் தலைநகரம் கிடையாது. இருந்தாலும் தைரியமாக நான் இந்த புத்தகக் கடையைத் தொடங்கினேன். அதுவும் நான் நடத்திய பத்திரிகையும் நின்று போன கட்டத்தில் அது ஒரு ஆபத்தான முடிவுதான்.எனக்கு வாசிப்பின் மீது இருந்த ஆர்வம் அனைவரையும் படிக்க வைக்க வேண்டுமென்ற உந்துதலைக் கொடுத்துக் கொண்டே இருந்தது.எனவே விற்பனை, லாபம் என்ற எந்தக் கவலையும் இல்லாமல் இது வாசிப்பு சார்ந்த ஒரு செயல்பாடு இதில் விளைவுகள் பற்றிக் கவலைப்படக் கூடாது என்று புத்தகக் கடையைத் தொடங்கினேன், தொடர்ந்தேன்.
முதலில் எனக்குப் பிடித்த புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்து நண்பர்களுக்குப் பரிந்துரை செய்தேன் .பிறகு குறிப்பிட்ட எழுத்தாளர்களின் அனைத்து படைப்புகளையும் கிடைக்கும் படி செய்து ஒவ்வொன்றிலும் மூன்று, ஐந்து பிரதிகள் என்று வாங்கி வைத்தேன். இப்படி நம் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அனைவரது படைப்புகளும் கொண்ட 2000 புத்தகங்கள் கொண்ட கடையாக எனது கடை விளங்கியது. போகப்போக அவர்கள் தேடுகிற புத்தகங்களையெல்லாம் வாங்கி விற்பனைக்கு வைத்தேன்.என்னிடம் வந்தால் எந்தப் புத்தகமும் கிடைக்கும் ,இல்லாவிட்டால் எங்கிருந்தாலும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விடுவேன் என்ற நிலைக்கு நான் அந்தக் கடையை வைத்திருந்தேன்.
'ழ புத்தகக் கூடு' என்கிற எனது புத்தகக் கடை தொடங்கிய போது முழுக்க முழுக்க இலக்கியப் புத்தகங்கள் ,தீவிர எழுத்துகளை மட்டுமே விற்பது என்று முடிவோடு இருந்தேன். எனவே தேர்ந்தெடுத்த வாசகர்களாகவே என் கடைக்கு வந்தார்கள்.
ஆரம்பத்தில் மந்தமாகத்தான் இருந்தது ,இருந்தாலும் நான் கவலைப்படவில்லை.மெல்ல மெல்ல விற்பனையாக ஆரம்பித்தது. மற்ற பொருள்களோடு ஒப்பிட்டால் அறிவு சார்ந்த இந்தப் புத்தக விற்பனை என்பது மிக மிகக் குறைவுதான். இருந்தாலும் அப்படிப்பட்ட புத்தகங்களை விற்பதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது. புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஒரு தொகுப்பு ஒருவர் வாங்கினால் கூட எனக்குப் பெரிய பரவசமாக இருக்கும்.போகப்போக நம்பிக்கை வந்தது. இப்படி 2018 முதல் 7 ஆண்டுகளாக புத்தகக்கடை நடத்தி வருகிறேன்.
இலக்கியக் கூட்டம் நடத்துவது பற்றி?
புத்தகம் புத்தகம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் யாரும் வாங்க மாட்டார்கள். அதை படிப்பதற்கான சில செயல்பாடுகளைச் செய்ய வேண்டும். வாசிப்பின் மீது ஆர்வம் வருவதற்கு இலக்கிய அறிமுகங்கள்,நூல் அறிமுகங்கள், எழுத்தாளர் அறிமுகங்கள் போன்றவற்றை நடத்த வேண்டும். அந்த நோக்கத்தில் தான் மாதம் ஓர் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடத்துகிறோம்.அது மாலை 6:30 மணிக்கு தொடங்கி 8 மணிக்குக் குறித்த நேரத்தில் முடிந்துவிடும்.சிறப்பு விருந்தினர்கள் பற்றிச் சிறிய அறிமுகம் வரும்.அதன் பிறகு சிறப்பு விருந்தினர் பேசுவார். மற்றவர்கள் யாரும் மேடையில் இருக்க மாட்டார்கள் .
இதற்கு 150 பேர் முதல் 200 பேர் வரை கொண்ட சிறிய அரங்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நடத்துவோம்.இதற்காக இங்கே எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், ரெங்கையா முருகன், கண்மணி குணசேகரன்,சித்ரா பாலசுப்பிரமணியன், மருதன்,மு. முருகேஷ், கீதா இளங்கோவன், ஜெ.தீப லட்சுமி, என். சொக்கன்,மா. பூர்ணிமா பார்த்தசாரதி, நீதிமணி, சுகிர்தராணி , ஆசை, ஜி.குப்புசாமி, கோவி லெனின், சமஸ், கே.வி. ஷைலஜா, கவிப்பித்தன், தமிழினியன் இப்படி கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள்,கல்வியாளர்கள் என்று நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.
கூட்டம் ஒரு குறிப்பிட்ட படைப்பாளி சார்ந்ததாகவோ, ஒரு படைப்பு சம்பந்தப்பட்டதாகவோ இருக்கும். தி.ஜா பற்றி ஜி. குப்புசாமி உரையாற்றி இருக்கிறார். ஜி குப்புசாமி அவர்கள் எங்கள் ஆரணிக்காரர். எனவே எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவரது அனைத்து மொழிபெயர்ப்புப் படைப்புகளும் எங்கள் அரங்கில் கிடைக்கும்.
வாசகராக நீங்கள் எப்படி?
நான் தொடங்கியதே பாலகுமாரனிடமிருந்து தான். முதலில் பாலகுமாரனைத்தான் வாசிக்க ஆரம்பித்தேன் .அவர் நினைவாகத்தான் எனது இளைய மகளுக்கு அகல்யா என்று பெயர் வைத்தேன்.பாலகுமாரனிடமிருந்து பிறகு விரைவாகவே நல்ல தீவிர இலக்கியத்திற்குள் நுழைந்து விட்டேன்.
புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், அசோகமித்ரன், ஜெயகாந்தன் என்று முன்னோடிகளில் தொடங்கி, சமகாலப் படைப்பாளிகள் ஜெயமோகன் , எஸ். ராமகிருஷ்ணன் வரை எனக்கு அனைவரையும் பிடிக்கும். படைப்பாளிகளிடம் மேல் கீழ் என்றும், தகுதி மிகுந்தவர் குறைந்தவர் என்று நான் பேதம் பார்ப்பதில்லை. அப்படி நான் நினைக்கவில்லை.எழுத்தை தீவிரமாக எழுதுபவர்கள் அனைவருமே என் நேசத்திற்குரியவர்கள்தான் ; எனது மதிப்புக்குரியவர்கள்தான்.
உங்களிடம் தாக்கம் ஏற்படுத்திய படைப்புகள் ?
ஒவ்வொரு விதத்திலும் என்னைக் கவர்ந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள்.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை ரசிப்பேன். ஜெயகாந்தன் படைப்புகளில் அக்னிப் பிரவேசம். ஒரு வீடு ஒரு உலகம், யாருக்காக அழு தான், பாரீசுக்குப் போ எனக்கு மிகவும் பிடிக்கும். புதுமைப் பித்தனின் சாப விமோசனம், செல்லம்மாள் பிடிக்கும். தி.ஜாவின் அம்மா வந்தாள், சிலிர்ப்பு என்னைக் கவர்ந்தவை. இப்படி ஜெயமோகனின் சோற்றுக் கணக்கு, மாடன் மோட்சம், வணங்கான், அசோகமித்ரனின் புலிக் கலைஞன், எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
புத்தகக் கண்காட்சி நடத்தும் எண்ணம் எப்படி வந்தது?
பெரிய பெரிய நகரங்களில் எல்லாம் புத்தகக் கண்காட்சி நடத்தும் போது ஏன் நம் ஊரில் நடத்தக்கூடாது என்று தோன்றியது .ஆரணி என்பது ஒரு சிறிய ஊர் தான் .இது மாநகரமோ மாவட்டத்தின் தலைநகரமோ கிடையாது இருந்தாலும் இங்கே செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.அரசின் உதவியோடு புத்தகக் கண்காட்சி நடத்துகிறவர்கள் இந்த ஊரில் நிச்சயமாக நடத்த மாட்டார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு இது பெரிப ஊர் கிடையாது. இருந்தாலும் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த போது தான் ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஸ்டால்கள் அமைத்து கண்காட்சி நடத்த ஆரம்பித்தேன். இப்படி 2018 இல் இருந்து நடத்தி வருகிறேன். இது ஏழாம் ஆண்டு.
மாவட்ட அளவில் நடக்கும் கண்காட்சிகளில் நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் இருக்கும். ஆனால் நான் 10 முதல் 15 ஸ்டால்களை போட்டு நடத்தி வருகிறேன்.என்றாலும் முக்கிய படைப்புகள் கிடைக்கும்.அந்த அளவிற்குத் தேர்ந்தெடுத்து புத்தகங்களை வைத்திருக்கிறேன். அதில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் நான் விலை கொடுத்து வாங்கியவை . விற்காவிட்டாலும் திரும்ப எடுத்துக் கொள்ளும் திட்டத்துடன் வந்தவை என்று முப்பது சதவீதம் மட்டுமே இருக்கும். மீதமுள்ள எழுபது சதவீதம் புத்தகங்களை நான் விலைக்கு வாங்கித்தான் இங்கே கண்காட்சியில் வைத்துள்ளேன். அப்படி 15 லிருந்து 20 ஆயிரம் புத்தகங்கள் இந்தக் கண்காட்சி நடைபெறும் ஸ்டால்களில் காட்சிக்கு வைக்கப்படும். கண்காட்சி நாட்கள் முடிந்து விற்பனையாகாமல் மீதமானவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நான் என் புத்தகக் கடையில் வைத்து தான் விற்க வேண்டி இருக்கும் .இருந்தாலும் ஒரு தைரியத்தில் இதைச் செய்தேன்.
புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்த முடிந்ததா?
முதலில் கண்காட்சியைப் பார்ப்பதற்குக்கூட யாரும் வருவதற்குத் தயாராக இல்லை.கூவிக்கூவி அழைக்க வேண்டி இருந்தது. இருந்தாலும் பெரிதாகப் பலன் இல்லை.ஏதாவது செய்து கவர வேண்டும் என்று நினைத்தேன். பிறகு பிரம்மாண்டமாக பேனர் வைத்து விளம்பரம் செய்தோம். அதற்கு எனக்குச் சில நண்பர்கள் கை கொடுத்தார்கள். எழுத்தாளர்கள் படங்களை பெரிது பெரிதாகப்போட்டு பேனர் வைத்தோம். வருகிறவர்கள் அண்ணாந்து பார்த்துவிட்டுச் செல்வார்களே தவிர உள்ளே நுழைய மாட்டார்கள். அவர்களை உள்ளே கொண்டு வர அவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது.பிரம்மாண்டமான அந்தப் பேனர்களை பார்த்துவிட்டு, யார் இந்த ஆளு ?இவருக்கு இவ்வளவு பெரிய பேனர் வைத்திருக்கிறார்கள்? யார் இவர் என்று கேட்பது உண்டு. அப்பொழுது ரஜினி ,கமல் -விஜய் ,அஜித் போன்ற சினிமா நடிகர்களுக்குத் தான் பேனர் வைப்பார்களா? அவர்களைப் போலவே இவர்களும் பெரிய ஆள் தான் என்று அவர்களைப் பற்றி விளக்குவேன். படைப்புலகத்தில் இவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆட்கள் என்று நான் சொல்வேன்.
எனக்கு புதுமைப்பித்தன் , தி. ஜானகிராமன் போல அனைவருக்கும் பிரம்மாண்டமான கட் அவுட் வைக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் கட் அவுட் வைக்க அனுமதி இல்லாததால் தான் நான் பேனர் வைத்துள்ளேன். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இவ்வளவு பிரமாண்ட பேனர்கள் பெரிய கண்காட்சிகளில் கூட வைப்பதில்லை. அதை நான் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் செய்தேன். மெல்ல மெல்ல உள்ளே வந்தார்கள். இப்படித்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியை நான் கவனப்படுத்தினேன். கூட்டம் கூட வைப்பதற்கே பெரிதும் சிரமப்பட்டேன். கூட்டம் கூடியது , அப்படி வந்தாலும் அந்த அளவிற்கு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. முதலில் வரட்டும் மெல்ல மெல்லத் தான் மனமாற்றம் நடக்கும் என்று நம்பிக்கையோடு இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் எந்த மாதிரியான புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன?
புதுமைப்பித்தன் முதல் டால்ஸ்டாய் வரை யாராவது வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த ஆண்டு ’வீரயுக நாயகன் வேள்பாரி’ விறுவிறுப்பாக விற்பனையானது. போட்ட புத்தகங்கள் எல்லாமே விற்றுவிட்டன. மீண்டும் மீண்டும் ஆர்டர் பண்ணி விற்றுக் கொண்டிருக்கிறோம். அதேபோல் ’வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ போட்ட புத்தகங்கள் எல்லாம் விற்பனையாகி விட்டன. மேலும் மேலும் ஆர்டர்கள் கொடுத்து வாங்கிக் கொடுத்து வருகிறோம் .ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் எழுதியவை எப்போதும் போல் போல் சீராக விற்பனை ஆகின்றன.
நவீன ஊடகங்களின் தாக்கத்தால் இப்போது வாசிப்பு ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுவது பற்றி?
அப்படிச் சொல்ல முடியாது எப்போதும் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். வாசிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வாசிக்கும் கூட்டம் மிக சொற்பமான சதவீதம் தான். அவர்கள் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள். மூன்று கோடி பேர் இருந்தபோது சில ஆயிரம் பேர் தான் வாசித்தார்கள். இப்போது எட்டு கோடி பேர் இருக்கும் போது எட்டு லட்சம் பேர் வாசிக்கிறார்கள். தீவிரமாக வாசிப்பவர்கள் அதிலும் குறைவான சதவீதம் தான்.அவர்கள் எப்போதும் இருப்பார்கள் அவர்களுக்கு வழிகாட்டினால் மெல்ல மெல்ல கூடும்.500ரூபாய் கொடுத்து திரைப்படம் பார்ப்பான். ஆனால் 50 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்க மாட்டான் .அவன் அப்படித்தான் இருப்பான்.சினிமாவை விரும்பிப் பார்க்கும் அவனை இங்கே கொண்டு வரவே முடியாது. சிலர் கூறுவார்கள் டிவி ,மொபைல் போன் எல்லாம் வந்துவிட்டதால் வாசிக்க நேரமில்லை என்று .அது ஒரு சப்பைக்கட்டுக் காரணம்தான். இவையெல்லாம் இல்லாத போதும் அவர்கள் வாசிக்காமல் தான் இருந்தார்கள். எனவே அந்த ஒப்பீடு தவறானது. நம் நாட்டைப் பொறுத்தவரை சொற்ப சதவீத கூட்டம்தான் வாசித்து வந்திருக்கிறது. அவர்களின் தொகையை உயர்த்த வேண்டும். அதற்குப் பல செயல்களைச் செய்ய வேண்டி இருக்கிறது.வாசிப்பை ஒரு வேலையாக நினைப்பதால் அந்த எண்ணிக்கையை அதிகரிப்பது சிரமமாக இருக்கிறது.வாசிப்புக்குள் வந்துவிட்டால் வெளியே செல்ல மாட்டார்கள். அவர்களை உள்ளே கொண்டு வருவது தான் பெரிய சிரமமான வேலை. தொடர்ந்து அவர்களை கவர்வதற்கான செயல்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காகத்தான் இப்போது ஏராளமான புத்தகக் கண்காட்சிகள் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடந்து வருகின்றன. வெவ்வேறு பெரிய ஊர்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடந்து வருகின்றன .என்னாலான முயற்சி இது.
ஆயிரம் இருந்தாலும் தவறான தொழிலைத் தேர்ந்தெடுத்து விட்டோமே என்று என்றாவது உள் மனம் நினைத்ததுண்டா?
நான் என்றைக்குமே அப்படி நினைத்ததில்லை,ஏனென்றால் இதற்குப் பெரிய வெற்றி கிடைக்காது, பொருளாதார ரீதியாக பெரிதாக லாபம் வராது என்பதை நான் உணர்ந்து கொண்டவன் தான்.இது சவால் நிறைந்தது தான் என்கிற யதார்த்தத்தை நான் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கிறேன். இதையெல்லாம் யோசித்து விட்டுத்தான் இறங்கினேன். இந்த முயற்சியில் எனது சாதனை என்று எதுவும் இல்லை .நான் எப்போதும் என்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதே இல்லை. இந்தச் செயல்களை எல்லாம் நான் தான் செய்கிறேன் என்று கூட பலருக்கும் தெரியாது .எந்த நிகழ்ச்சி மேடையிலும் நான் ஏறியதில்லை. செயல் மட்டுமே நடக்க வேண்டும் என்று விரும்புவேன். ஒரே ஒரு முறை தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றதை ஒட்டி நடந்த பாராட்டு விழாவில் ஆளுயர மாலை அணிவிக்கும்போது மட்டும் தான் மேடை ஏறினேன். மற்றபடி நான் பின்னால்தான் இருப்பேன்.இதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.
சுவரொட்டிகளில் எல்லாம் யாரோ கொடையாளர்கள் போல் எனது 'அறம் செய்வோம் ' ,'ழ புத்தகக் கூடு ' என்று எனது இரு அமைப்புகள் இணைந்து வழங்குவதாகக் குறிப்பிடுவேனே தவிர நான் என்றும் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை.என் பெயர் எதிலும் இருக்காது.பெயர் முக்கியமல்ல, செயல் மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.ஒரு நல்ல செயலைச் செய்யும்போது கிடைக்கும் விளைவுகளைவிட அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக எதையும் கூற முடியாது.
குடும்பத்தினர் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?
இதிலெல்லாம் நான் இறங்குவதற்குப் பெரிதும் பக்கபலமாக இருப்பவர் என் மனைவி தான். முதலில் மறுப்பு சொல்லாத போதே மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு ஊக்கம் கொடுக்கிறவராக குடும்ப பொருளாதார சுமையிலிருந்து என்னை விடுவிப்பவராக மாறி உதவி வருகிறார்.அவரை நன்றியோடு நான் இப்போது நினைத்துப் பார்க்க வேண்டும்.ஏனென்றால் அவர் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் .அதன் மூலம் வருகிற வருமானத்தின் மூலம் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார் .அதுவே எனக்கு பெரிய பக்க பலமாக இருக்கிறது.
'அறம் செய்வோம்' என்கிற அமைப்பின் மூலம் முதியோர்கள் நூறு பேருக்கு தினசரி உணவளிக்கிறோம். இந்தப் பணியிலிலும் என் மனைவியின் ஒத்துழைப்பு மறக்க முடியாது. இதையெல்லாம் செய்து எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். என் மனைவி அதிக ஆசை இல்லாமல் அனாவசியமான பொருட்கள் வாங்காமல் குறைந்தபட்சத் தேவைகளோடு வாழ்ந்து வருகிறார் . இப்படி எல்லாருக்கும் வாய்க்குமா? எனக்கு அனுஷ்கா, அகல்யா என்று இரண்டு மகள்கள்.இருந்தாலும் குறைந்த தேவைகளில் திருப்தி அடைவது என்கிற மினிமலிசத்தை எங்கள் குடும்பத்தில் பின்பற்றுகிறோம். எனவே இதில் நான் விற்பனை சார்ந்தோ, லாபம் சார்ந்தோ பெரிதாக கவலை கொள்வதில்லை. மன நிறைவோடுதான் இதைச் செய்து வருகிறேன்.நற்பணியாக நாம் நினைத்துச் செய்வதில் ரிசல்ட்டை விட மகிழ்ச்சி தான் முக்கியம்.எனவேதான் ஒரு முக்கியமான படைப்பை வாங்க வரும் வாசகரைப் பார்த்து எனக்கு பிரமிப்பாக இருக்கும். அதைப் படமாக எடுத்துக் கொள்வேன் அதையே மகிழ்ச்சிக்குரிய ஆவணம் போல் எண்ணிக் கொள்வேன்.
புத்தகக் கண்காட்சிக்கு விளம்பரங்களைப் பெரிய அளவில் செய்கிறீர்களே எப்படி?
நான் படைப்பாளிகளின் பேனர்களை பெரிதாக வைப்பது மட்டுமல்ல, தினம் ஒரு சிறப்பு விருந்தினர் உரையாற்றுவார் அல்லவா? அவர்களைப் பற்றி பெரிய அளவில் சுவரொட்டிகள் அடித்து நகர் முழுதும் ஒட்டி விடுவேன் .
இந்தக் கண்காட்சியில் தினமும் மாலை ஒரு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களுக்கு பாராட்டு விழா நடத்தினோம். அடுத்தடுத்த நாட்களில் ’என்றும் பெரியார்’ தலைப்பில் கோவி லெனின்,’என்றும் காந்தி’ தலைப்பில் எழுத்தாளர் ஆசை, ’காக்கை குருவி எங்கள் ஆசான் ’ தலைப்பில் என் .சொக்கன் போன்றவர்களின் உரைகளும் ’ஏன் கதைகளைப் படிக்க வேண்டும் ?’ தலைப்பில் மருதன் ,லூனா ஜெய் கலந்துரையாடலும் ,’தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ தலைப்பில் க. நாகப்பன் உரை, கவிஞர் தமிழ் இலக்கியன், எழுத்தாளர் விஜயகாந்த் ,கவிஞர் ஆபிரகாம் ஜாக்சன் ஆகியோரின் கதைகள் குறித்த உரைகள், ’உள்ளுவது உயர்வு ’தலைப்பில் பூர்ணிமா பார்த்த சாரதி உரை, ’என்றும் அம்பேத்கர் ’ தலைப்பில் கவிஞர் சுகர்தராணி உரை என்று தொடர்ந்து, நிறைவு நாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி ’காந்தியை வரைவோம்’ என்கிற ஓவியப்போட்டியையும் நடத்துகிறோம். இப்படி 10 நாட்களுக்கும் நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறோம். ஒவ்வோராண்டும் இந்த நிகழ்ச்சியில் போட்டிகள் வைத்து மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
சிறப்பு விருந்தினர்கள் வருகையை முன்னிட்டு நாங்கள் செய்திருக்கும் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு அசந்து போய் விடுவார்கள். நாம் செய்வதைச் சிறப்பாகச் செய்து விடுவோம் என்கிற நோக்கத்தில் தான் நான் இதைச் செய்கிறேன்.இந்த புத்தகக் கண்காட்சியை விளம்பர நோட்டீசை கடைகளுக்கு எல்லாம் கொடுப்பேன். அவர்கள் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களுக்கு பில் போல கணக்கு எழுதுவதற்கு அதைப் பயன்படுத்துவார்கள்.அதைச் வாங்கிச் செல்கிறவர்கள் இன்னொரு பக்கம் பார்த்தால் அது எங்கள் விளம்பரமாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இந்த அழைப்பிதழை ஒரு புத்தக வடிவில் அமைத்து இருந்தேன். அது 20 பக்க அளவிலான புத்தகம்.முதல் பக்கத்தில் அழைப்பிதழ் இருக்கும்.இரண்டாம் பக்கத்தில் இருந்து இரண்டு கதைகளை வச்சிட்டு வழங்கினேன்.
அப்படி தி.ஜானகிராமனின் ’சிலிர்ப்பு’ கதையும் அசோகமித்ரனின் ’புலிக்கலைஞன்’ கதையும் அச்சிட்டு புத்தகமாகக் கொடுத்தேன். அந்த அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு இரண்டு சிறந்த படைப்புகளையும் வழங்கி இருந்தேன். அப்படி ஆயிரம் பிரதிகளை அச்சிட்டு அழைப்பிதழாக விநியோகம் செய்தோம். மீதமுள்ள 200 பிரதிகளைக் கண்காட்சி வருபவர்களுக்கு புத்தகம் வாங்குபவர்களுக்கு என்று கொடுத்தோம்.
அழைப்பிதழ் வழியில் அந்த இரண்டு சிறுகதைப் படைப்புகளையும் ஆயிரம் பேருக்குக் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்ய முடிந்தது என்கிற திருப்தி இருந்தது.
புத்தகக் கண்காட்சியை தனிநபரே செய்வது சிரமமாக இல்லையா? ஒரு கட்டத்தில் சோர்வூட்டி விடுமே?
எனக்கு ஓர் ஆதங்கம் உண்டு புத்தகக் கண்காட்சிக்காக அதனைச் சிறப்பாக நடத்துவதற்காக எனது உடல் உழைப்பினை நான் அதிகபட்சம் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் நானே எல்லா செலவுகளையும் செய்து கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் நிச்சயம் எனக்குச் சோர்வு வந்து விடும்தான்.சுமையாகத் தோன்றக் கூடும் தான். எனவே இந்த விளம்பரச் செலவுகளை மட்டும் ஏதாவது அமைப்புகள் ஏற்றுக் கொண்டால் எனக்குப் பெரிய உதவியாக இருக்கும்.நான் இதுவரை யாரிடம் போய் இதற்காகக் கேட்டதில்லை, இருந்தாலும் இப்போது தோன்றுகிறது .அப்படிக் கிடைத்தால் மேலும் சிறப்பாகச் செய்யலாம்.அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இது மாதிரி புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக நடத்த முடியும். எவ்வளவோ காரியங்களுக்குச் செலவு செய்கிறார்கள். இந்த அறிவியக்கத்திற்கு அவர்கள் செலவு செய்ய முன்வந்தால், இந்த விளம்பரச் செலவுகளை மட்டும் ஏற்றுக் கொண்டால் போதும். அதற்குப் பலன் பெரிதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.