திரைவிமர்சனக் கட்டுரைகள்

திரைவிமர்சனக் கட்டுரைகள்

தமிழில் தற்போது உருவாகி வரும் சினிமாக்களில் காணப்படும் அரசியலை விமர்சனப்பார்வையில் முன்வைக்கும் காத்திரமான கட்டுரைகளின் தொகுப்பு இது. நடிகர் விஜய் தோன்றிய சர்கார் திரைப்படம் மாநிலக் கட்சிகளின் அரசியலை விமர்சித்துவிட்டு தேசியக் கட்சிகளை விட்டுவைத்தது, இலவசங் கள் பிச்சை என மிகத் தவறான வாதத்தை முன் வைத்தது ஆகியவற்றுக்காக அப்படத்தை விமர்சிக்கிறது நூலில் வரும் கட்டுரை. அதுபோல் வட  சென்னை படத்தில் வரும் அரசியலையும் நுட்பமாக விமர்சிக்கிறது. எளிய மக்களின் நிலத்தின் மீது ஆளுமை செலுத்தும் அரசாங்கம் என்கிற அரசியலை இப்படம் பேசுவதைக்குறிப்பிடுகிறார் கட்டுரையாளர். யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை  இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரசாரப் படம் என நக்கல் அடிக்கும் நூலாசிரியர் தி ஃபேமிலி மேன் -2 வெப் சீரீஸ் தமிழர்களைக் காண்பிக்கும் விதத்தையும் விமர்சித்துள்ளார். சிவகார்த்திகேயனின் டான் படமும் கூட விமர்சனத்துக்குத்தப்பவில்லை. சமகால படங்களை அரசியல் பார்வையில் பார்த்து விமர்சிக்கும்  இக்கட்டுரைகள், இக்காலகட்டத்துக்கு அவசியமானவையும் கூட.

இந்து தேசியம் இந்திய சினிமா- திரைப்பட அரசியல், விமர்சனக் கட்டுரைகள் -  ர.முகமது இல்யாஸ் வெளியீடு: சீர்மை, எண் 37/13, பூரம் பிரகாசம் சாலை, பாலாஜி நகர், ராயப்பேட்டை, சென்னை -600014 பேச: 8072123326 விலை ரூ: 160

இயற்கைப் பாடினி

உண்மையில்

ஒளியை அறிவதென்பது

வேறொன்றுமில்லை

அதைச் சூழ்ந்திருக்கும்

இருளைக் கொண்டு

நமது இதயத்தை

நிறைத்துக்கொள்வதுதான்

-என்பது போன்ற வரிகளால் தன் சொல்லினும் நல்லாள் கவிதைத் தொகுப்பை நிரப்பி இருக்கிறார் கவிஞர் சக்திஜோதி. மழைக்கால ஆறு, காய்ந்துகிடந்தாலும் ஈரத்தை வைத்திருக்கும் முத்துப் பேச்சி ஓடை, கானகத்தின் இணைப்பறவைகளின் கூவல், பாறையில் வேர் பிடித்திருக்கும் சிறு செடி, கடலின் உப்பு உள்ளிட்ட இயற்கையின் படிமங்களால் தன் கவிதைகளை நிறைத்திருக்கிறார் கவிஞர். இயற்கையை நேசத் தோடு அணுகுகிற கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. கூர்மையான  பார்வையுடன் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் அடங்கி உள்ளன.

சொல்லிலும் நல்லாள், சக்திஜோதி, தமிழ்வெளி, 1- பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை 600122 விலை ரூ 100 பேச: 9094005600

அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை

மாலனின் இந்த புதிய சிறுகதைத் தொகுப்பில் இடபெற்றிருக்கும்  சிறுகதைகளின் அடிப்படையில் இருப்பவை வழக்கம்போல் அவருக்கே உரிய கூர்மையான அவதானிப்புகள்தான். ஆனால் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டிருக்கும் பின்னணி முக்கியமானது. தமிழ் பண்பாட்டை அந்நிய மண்ணில் வைத்துப் பின்னி, இழைத்து, இக்கதைகளுக்கு உயிர் தந்துள்ளார்.

சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இக்கதைகள் நடக்கின்றன. எதற்கெடுத்தாலும் இங்கே தூய்மை பார்க்கும் மாசிலாமணி அமெரிக்கா போகிறார். மகன் வீட்டில் பாத்ரூமில் கூட பேப்பரை உபயோகித்து, கை கழுவவே கழுவாத மனிதர்களைக் கண்டு அருவருத்துக் கொண்டிருக்கிறார். ஊருக்குக் கிளம்ப எத்தனிக்கையில் வருகிறது கொரோனா. கைகளை விரும்பும் வரைக்கும் அவர் கழுவிக்கொண்டே இருக்கலாம். அவர் மட்டுமல்ல ஊரே கழுவவேண்டும்!

சீனத்தில் அந்தரத்தில் கண்ணாடி துடைக்கும் ஒரு விவசாயிக் கிழவரைப் பற்றிய கதை முக்கியமானது. கிராமத்திலிருந்து நகருக்கு கூலி வேலை பார்த்து சம்பாதிக்க வந்த கிழவரின் கதை. ஜப்பானுக்கு கணவனுடன் வந்த சந்தான லட்சுமி தன் குழந்தையை விபத்தில் இழந்து அவனது உறுப்புகளை தானம் தருகிற கதை மிகவும் உணர்ச்சிகளைக் கிளறக்கூடியது. அந்திமழை உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள்தான். ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் கலவையான உணர்வுகளை எழுப்புகின்றன.

புலிவேட்டை, மாலன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600017 பேச: 044-42161657 விலை: ரூ 160

வாழ்வெனும் படகு

இவை கவிதைகள் அல்ல பாடல்கள் என்றே கொள்ளவேண்டும் என்று நயமாக ஆரம்பித்துள்ளார் ஓவியர் ஜேகே என்னும் ஜெயகுமார். தன்னுடைய வாழ்க்கைப்பாதையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதி வைத்திருந்த கவிதைகளை எல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். ஓர் கலைஞனின் நாட்குறிப்பு என்று கூட இந்த கவிதை நூலை சொல்லிவிட முடியும். தன் ஆசானாகக் கருதும் ஜெயகாந்தன், தான் விரும்பி நேசிக்கும் கவியரசு கண்ணதாசன் போன்றோர் குறித்த தன் எண்ணங்களைக் கவிதை ஆக்கித் தந்துள்ளார். மனைவியைப் பிரிந்து, மகளைப் பிரிந்து இருந்தபோதெல்லாம் கவிதைகளாக உள்ளக் குமுறல்களை வடித்துப் பார்த்துள்ளார். தன்னைப் பாதித்த பொதுநிகழ்வுகளையும் கவிதைகளாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ஓவியரின் பேனா முனை. ஒரு நதி தன்னை கரைகளில் பதிவு செய்துகொண்டே செல்வதை இத்தொகுப்புடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

அன்று முதல்... இன்றுவரை, ஜெயகுமார், கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600017. பேச: 044 -28340488 விலை ரூ 200

மே, 2023

திரையில் கலைஞர்

ஒலிவடிவத்தில் இருந்து, கலைஞரின் எழுத்துகளை வரிவடிவமாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழ்த் திரையுலகில் முதலில் ஆதிக்கம் செலுத்தி, அதை வென்றபின்னர் அரசியல் துறைக்கு வந்தவர் கலைஞர். அவர் வசனத்தில் வெளியாகி புகழ்பெற்ற படங்கள் ஏராளம். அப்படங்களின் கதை, அதில் இடம் பெற்ற முக்கியமான வசனக் காட்சிகள் ஆகியவற்றைத் தொகுத்து நூலாக ஆக்கி இருக்கிறார். 1947-இல் வெளியான ராஜகுமாரி, அபிமன்யூ, மருதநாட்டு இளவரசி எனத் தொடங்கும் கலைஞரின் பயணம் பராசக்தியில் உச்சம் தொடுகிறது. இந்நூலில் அவன் பித்தனா என்ற திரைப்படம் வரை 21 படங்களில் கலைஞரின் வசன நடை சிறப்பு பற்றி எழுதி உள்ளார். சரித்திர கதைகள், சமூகக் கதைகள் என எல்லாவற்றிலும் கூர்வாளென சமூக சீர்திருத்த கருத்துகளைப் பேசும் வசனங்களைக் காணலாம். பராசக்தியிலும் மனோகராவிலும்  சிவாஜியின் குரலில் உயிர்பெற்ற எழுத்தை இந்நூலில் மீண்டும் தரிசிக்கலாம்.

தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து, எஸ்.இளங்கோ,  அகநி வெளியீடு, எண்: 3, பாடசாலை வீதி,  அம்மையப்பட்டு, வந்தவாசி 604408 பேச: 98426 37637 விலை ரூ 280

logo
Andhimazhai
www.andhimazhai.com